மௌன குரு
நடிகர்கள்: அருள்நிதி, இனியா, ஜான் விஜய், உமா ரியாஸ்கான் .

இசை: தமன்
ஒளிபதிவு: மகேஷ் முத்துசாமி
தயாரிப்பு: மோகனா மூவீஸ்
பார்த்தது: முத்துராம் - திருநெல்வேலி (10 பேர் மட்டுமே இரவு காட்சியில்)
சமீபத்தில் வந்த ஒரு நல்ல த்ரில்லர் வகை படம் என்று சொல்லலாம். நல்ல திரைகதை, தப்பான நேரத்தில் மோசமான குத்து பாடல் இல்லாதது, காட்சியின் சூழ்நிலைக்கு ஏற்ற ஒளிபதிவு. விறுவிறுப்பான பட தொகுப்பு. பன்ச் வசனங்களோ பேசாத ஹீரோ என்று படத்தில் சொல்ல தகுந்த விஷயங்கள் நிறைய உள்ளது.
ஒரு சமூகத்துடன் சமரசம் செய்ய முடியாமலும், செய்ய வேண்டிய நிர்பந்தத்திலும் உள்ள ஒரு இளைஞனின் உணர்வுகளை மிக சிறப்பாக அருள்நிதி வெளி கொண்டு வந்து உள்ளார்.
உதயன் பார்த்தவுடன் இன்னும் ஒரு புரட்சி அல்லது எழுச்சி புயல் உருவாகி விட்டதோ என்று தான் நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் தான் இன்னும் ஒரு கதை நாயகனாகவே இருக்க விரும்புவதை சொல்லாமல் சொல்லி விட்டார். கதைக்கு நாயகன்

ஒரு கடத்தல் மற்றும் கொலை விசயத்தில் சம்மந்தமே இல்லாமல் அருள்நிதி மாட்டி கொள்கிறார். அதில் சம்மந்த பட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை மன நிலை பாதிக்க பட்டவர் என்று சொல்லி மன நல காப்பகத்தில் அடைத்து விடுகிறார்கள். (போராளி கதை போலவே) அதில் இருந்து தப்பி தன்னை நிருபித்து கொள்வது தான் கதை.
நடிகர்கள் தேர்வு மிக அருமை. வடிவேலுவை அட்ரஸ் கேட்டு அலற வைத்த கிருஷ்ணமூர்த்தி, ஜான் விஜய், செல்வம் மற்றும் ராஜேந்திரன் என்ற பெயரில் வரும் இரண்டு போலீஸ்காரர்கள் சேர்ந்து எல்லா கெட்ட காரியங்களையும் செய்கிறார்கள். வில்லன் வேசத்திற்கு மிக அருமையான ஆட்கள்.
அதே போல மன நிலை காப்பகத்தில் இருந்து அருள்நிதி உடன் தப்பித்து வரும் நபர் மிக அருமையாக நடித்து உள்ளார்.
நல்ல போலீஸ் பழனி அம்மாளாக வரும் உமா ரியாஸ் மிக அருமை. ஆர்ப்பாட்டம் இல்லாத அதே நேரம் ஒரு யதார்த்தமான பெண் போலிசை அடையாள படுத்தி உள்ளார். இத்தனை காலம் ஒரு திறமையான நடிகையை தமிழ் திரை உலகம் பயன் படுத்தி கொள்ளவில்லை. உமா ரியாசின் அம்மா கமலாவை கடைசி வரையில் அழ வைத்தே பார்த்து சலித்து போனது போல் இல்லாமல் இவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையட்டும்.
சின்ன சின்ன குறைகள் இல்லாமல் இல்லை. ஆனால் மொத்தமாக பார்க்கும் பொழுது மிகவும் ஒரு நல்ல படம்.
மௌன குரு - உரக்க பேசுகிறான்.
No comments:
Post a Comment