30 December 2010

பார்த்தது - 9

ஈசன்

சுப்ரமணியபுரம், நாடோடிகள் என இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு M. சசிகுமாரின் படம். மீண்டும் சமுத்ரகனி உடன் கூட்டணி அமைத்து உள்ளார்.

கதை : சென்னை மாநகரத்தின் மறுபக்கம். பாலச்சந்தரின் பட்டின பிரவேசம் தொடங்கி எத்தனையோ படங்களில் பார்த்த விஷயங்கள் சசிகுமாரின் பார்வையில் மீண்டும்.

படம் ஆரம்பத்தில் ஒரு விபத்து. விபத்து நடக்கும்பொழுது எதிர் திசையில் ஒரு பைக் கொஞ்சம் வேகம் குறைத்து மெதுவாகி பிறகு அப்படியே கண்டு கொள்ளாமல் போவதில் தொடங்கி படம் முழுவதும் சென்னை அல்லது ஏதோ ஒரு பெருநகரம் கண்ணில் தெரிகின்றது . ஒரு புறம் சென்னையின் இருண்ட பக்கங்கள் விரியும் பொழுது இன்னும் ஒரு track ல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உடனான இருண்ட பக்கங்கள் விரிகிறது.

இடைவேளைக்கு பிறகு விரியும் flash back ல் ஒரு கிராமத்து பெண் சென்னையின் மாயவலையில் சிக்குவதை மிகவும் அருமையாக காட்டி உள்ளார். சிறு நகரங்களில் வசிப்போர் அனைவரும் தங்கள் வீடுகளிலோ அல்லது அக்கம் பக்கத்துக்கு வீடுகளிலோ அமைதியாக இருந்த பெண், சென்னைக்கு படிக்கவோ அல்லது வேலைக்கோ சென்றுவிட்டு ஊருக்கு வரும்பொழுது நமக்கு அவர்களிடம் ஒரு வித்தியாசம் தெரியும் அது அபிநயாவின் நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது தெரிகிறது.

+1 படிக்கும் பையன் என்னதான் SUPER INTELLIGENT ஆக இருந்தாலும் அவன் செய்யும் சில விஷயங்கள் நெருடத்தான் செய்கிறது. ஆனால் எல்லாவற்றையம் தாண்டி படம் நம்மை ஈர்க்கிறது என்பதுதான் உண்மை.

படத்தில் ஒரு சிறந்த விஷயம் பல விசயங்களை suggestive ஆக சொல்லி இருப்பதுதான். பூரணியின் கற்பழிப்பு காட்சியில் வெளியில் துடிக்கும் பெண்ணின் முகபாவனைகளில் உள்ளே நடக்கும் வன்முறை காட்டுவதில் ஆகட்டும், காவல் நிலையத்தில் வாந்தி வராது என்று உதார் விடும் கோபாலை வாந்தி எடுக்க வைப்பதில் ஆகட்டும் இந்த உத்தி மிகவும் அழகாக கையாலப்பட்டு இருக்கிறது.

விஷம் என்பது தெரிந்து பூரணி பார்க்கும் பார்வையும் அதற்கு அப்பா தலை குனிந்தவுடன் புரிந்து மிக வேகமாக எடுத்து குடிப்பது மனதை உருக்கும் ஒரு காட்சி. அதில் அபிநயாவின் முக பாவனைகள் மிகவும் அருமையாக உள்ளது.

தெய்வநாயகம் மகனை பெரிய ஆளாக ஆக்க போகிறேன் என்று சொன்னவுடன் கோபால் " தெய்வம் பெத்த தெய்வ மகனே " என்று போஸ்டர் அடித்துவிடுகிறேன் என்று சொன்னதும் மந்திரியின் மனைவி முகத்தில் ஒரு குறுநகை காட்டி ஒரு சிரிப்பு வருமே மிக அழகான ஒரு expression. இப்படி படம் முழுவதும் ஆங்கு ஆங்கு ரசிக்ககூடிய பல காட்சிகள்.

சமுத்திர கனி ஆகட்டும், தெய்வநாயகமாக வரும் தயாரிப்பாளர் அழகப்பன் ஆகட்டும் இருவருமே மிக அருமையாக performance செய்து இருக்கிறார்கள். ஒரு யதார்தமான போலீஸ் அதிகாரியை கண் முன் நிறுத்துகிறார்.

ஜேம்ஸ் வசந்தனின் இசை பெரிதாக சொல்ல எதுவும் இல்லை. கடற்கரை ஓரமாக ஒரு குண்டு பெண்மணி பாடும் பாடலில்தான் ஓரளவுக்காவாது ஜேம்ஸ் தெரிகின்றார்.

கதிரின் ஒளிப்பதிவு கதையோடு இணைந்து செல்கிறது

எல்லாம் இருக்கிறது ஆனால் சசிகுமாரிடம் நாம் நிறைய எதிர் பார்போம் என்பதை அவர் புரிந்து கொள்ளவேண்டும். கொஞ்சம் நீளம் அதிகமோ என்று யோசிக்க வைக்கிறது. படம் முடிந்து வரும்பொழுது " சென்னையின் இரவு வாழ்க்கையை அதிகமா காட்டி இருக்க வேண்டாமோ என்று எனக்கு தோணுகிறது" என்று சொன்னதற்கு, "அப்பா அது தெரியாத எவ்வளோவோ பேர் படம் பார்ப்பார்கள் அது தெரிந்தால்தான் அவர்களால் கதையோட ஒன்றி போக முடியும் அந்த வகையில் சரிதான் " என்று சொன்னான்.

படத்தின் விமர்சனம் என்பது போக எனக்குள் ஒரு கேள்வி " சென்னையில் உள்ளவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு ஊரில் இருந்துதான் வந்து இருப்பார்கள். அப்போ அந்த ஊரின் பண்பு எங்கே போனது? "

16 December 2010

பார்த்தது - 8


விருதகிரி

திங்கள் இரவு சேலம் ARRS multiplex ல் பார்த்தேன். பல முறை ஸ்டார் மூவீஸ்ல் பார்த்த "TAKEN" என்ற ஆங்கில படத்தின் அப்பட்டமான தழுவல். அதையாவது ஒழுங்கா செய்து இருக்கின்றார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

ஒரிஜினல் படத்தின் வசனத்தை கூட மாற்றாமல் அப்படியே தமிழ் ஆக்கம் செய்து உள்ளார்கள். இறுதி காட்சியினை (கிளைமாக்ஸ்) மட்டும் புரட்சி கலைஞர் வில்லன்களை உதைக்க வேண்டும் என்பதற்காக மாற்றி உள்ளார்கள்.

படம் முழுவதும் எல்லோரும் "அரசாங்கம் உங்கள் கையில் வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் " என்று சொல்லுகிறார்கள். நான் சின்ன வயதில் இதயக்கனி படம் பார்த்த பொழுது இது போன்ற வசனத்தை ஐசரி வேலன் பேசுவார், உடனே திரை அரங்கமே அதிறுவது போல கைதட்டல்களும், விசில் சத்தமும் கேட்கும். ஆனால் இங்கு ஒன்றுமே கேட்கவில்லை.

திருநங்கைகளை மிக நல்லவிதமாக காட்டி உள்ளார்கள் என்பது மிகவும் பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்தான் . ஆனால் அதே சமயம் மன்சூர் அலி கான் ஐ வைத்து திரு நங்கைகள் பற்றிய எதிர் மறை விசயங்களையும் பேசி இருக்க வேண்டியதில்லை.

படத்தில் ஏகப்பட்ட அரசியல் தாக்குதல்கள். படத்தில் நகைச்சுவை காட்சிகள் இல்லாத குறையை நன்றாக தீர்த்து வைக்கிறது.

படத்தில் ஒரே சிறப்பு அம்சம் விஜயகாந்த் வெளிநாட்டுக்கு போய் டூயட் பாடாமல் நம்மை காப்பாற்றிய இயக்குனர் விஜயகாந்துக்கு நன்றி !!!!!!

மீண்டும் செவ்வாய் (14.12.2010) இரவு ஸ்டார் மூவிஸ்ல் "TAKEN" படத்தினை பார்த்தேன் !!!!!!!!!!

நம்மால் ஒரு நல்ல கதையை எவ்வளவு அழகா கெடுக்க முடியும் என்பதை அது புரிய வைத்தது.

விஜயகாந்த் இயக்குனர் ஆகி விட்டார் என்பதை தவிர படத்தில் எதுவும் இல்லை.

01 November 2010

பார்த்தது - 7


குற்ற பிரிவு

ஸ்ரீகாந்த், பிர்திவிராஜ், கமலினி முகர்ஜி , காதல் தண்டபாணி, மற்றும் பலர் நடித்த படம். நேற்று நல்ல மழை பெய்ந்து கொண்டிருந்த போதும் பொன்னகர் VVV திரை அரங்கில் ஓரளவுக்கு சுமாரான கூட்டம் இருந்தது.

தெலுங்கு டப்பிங் படம் என்றாலும் முடிந்தவரை அதன் வாசனை தெரியாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் வெளியிட ஏற்ற வகையில்தான் படமாக்க பட்டு உள்ளது.

ஸ்ரீகாந்த் இந்த படத்திலும் மிக நன்றாகவே நடித்து உள்ளார். ஆனால் ஏன் அவருக்கு ஒரு பெரிய ஓபனிங் வரவில்லை என்று தெரியவில்லை.

கதை என்று பார்த்தால் மிக சாதாரணமான கதைதான். இரண்டு போலீஸ் அதிகாரிகள் அதில் ஒருவர் ஸ்ரீகாந்த் - நேர்மை, நியாயம் etc., etc., பார்ட்டி. இன்னும் ஒருவர் பிரிதிவிராஜ் நல்லவர் வேடத்தில் இருக்கும் நயவஞ்சகர் (ஏற்கனவே கணா கண்டேன் படத்தில் இருவரும் நடித்து இருப்பார்கள் - அது ஞாபகத்துக்கு வந்தால் இயக்குனர் பாவம் என்ன செய்வார்)

இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் முட்டல் மோதல்தான் கதையின் அடிப்படை. இடையில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து விட்டு செத்து போகின்றார் கமலினி முகர்ஜி. வேட்டையாடு விளையாடு படம் போல என்று தோன்றலாம் ஆனால் அதில் மிக அருமையான பாடல் , இதில் அதுவும் இல்லை.

சிவாஜி என்ற கதாபத்திரத்தில் வரும் தெலுங்கு நடிகர் பெயர் தெரியவில்லை, அனேகமாக நான் பார்த்த படங்களில் எல்லாம் அவர் செத்து விடுகின்றார். ஒரு காலத்தில் தமிழில் அப்படித்தான் சந்திரசேகர், ஜனகராஜ் எல்லாம் செண்டிமென்ட்டுக்காக எல்லா படங்களிலும் இறந்து போவார்கள்.

மன்மோகன் என்பவர் இயக்கி உள்ளார். இன்னும் கொஞ்சம் திரைக்கதையை speed செய்து இருந்தால் மிக பெரிய படமாக வந்து இருக்கும்.

31 October 2010

படித்தது - 2


The Lost Symbol - டேன் பிரௌனின் (Dan Brown) புதிய நாவல்.

போன நவம்பர் மாதம் வெளியான நாவல். அப்பொழுது Rs 1500/- என்ற காரணத்தினால் வாங்கி படிக்க வில்லை. பின்னர் மலிவு விலை பதிப்பு வந்தும் ஏனோ வாங்க போகவும் முடியவில்லை, வாங்கிய பின்பு படிக்கவும் முடியவில்லை.

கடைசியாக போன வாரம் தான் படித்து முடித்தேன். Da vinci code மூலமாகதான் டேன் ப்ரௌன் மிகவும் புகழ் அடைந்தார். ஆனால் நான் முதலில் படித்தது . அவருடைய DIGITAL FORTRESS தான். அது படித்த பின்பு Jefferey Archer, Sidney Sheldon போன்று எனது அபிமான எழுத்தாளர்கள் வரிசையில் அவரும் இடம் பெற்றார்.

Angel and Demons மற்றும் Da vinci code ல் கையாளப்பட்ட மர்ம குறியீடுகள் இதிலும் மிக திறமையாக கையாளப்பட்டு இருக்கின்றது. ஆனால் மீண்டும் மூன்றாம் முறையாக படிக்கும் பொழுது கொஞ்சம் சுவாரசியம் குறையத்தான் செய்கிறது. வழக்கம் போல Brown ன் எழுத்து நடை மிகவும் அருமையாக உள்ளது.

ஆனால் அவரது முந்தைய புத்தகங்கள் போல மிகவும் சுவாரசியமாக உள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். விறுவிறுப்பும் கொஞ்சம் குறைவுதான். அவரது முந்தைய புத்தகங்களை சாப்பாடு, தூக்கம் மறந்து படிக்கச் சொல்லும், இது அப்படி இல்லை.

மேலும் பல இடங்களில் இது நாவல் என்ற கட்டுஅமைப்பை தாண்டி ஆராய்ச்சி கட்டுரை போல தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அதிலும் "தேசிய பிரச்சினை" என்று மூச்சுக்கு மூச்சு CIA டைரக்டர் Sato சொல்லும் விஷயம் , கதை முடிவில் என்னவென்று பார்த்தால் உப்பு சப்பில்லாத ஒரு சாதாரண விசயமாக இருக்கிறது , இதற்கு எதற்கு இவ்வளவு பெரிய பில்ட் அப் என்றுதான் தெரியவில்லை.

இன்னும் சொல்ல போனால் கடைசி 50 பக்கங்கள் முடிப்பதற்குள் பொறுமை போய் விடுகின்றது .

இதை எல்லாம் தாண்டி நாவல் கொஞ்சம் கவரத்தான் செய்கிறது.

16 September 2010

பார்த்தது - Dabangg


ரொம்ப நாளாகி விட்டது ஹிந்தி படம் பார்த்து. 3 idiots விடவும் வசூலில் சாதனை புரிவதாக எல்லா ஊடகளிலிம் பிரமாதமாக சொல்கிறார்களே என்று போய் பார்த்தால், அம்மாடியோ நம்ம ஒரு தல, தளபதி தேவலாம் என்று நினைக்க வைத்து விட்டார் salman khan.

Dimple Kapadia வின் முதல் கணவருக்கு பிறந்தவர் சல்மான். டிம்பிள் பிறகு வினோத் கண்ணா வை திருமணம் செய்து கொள்கிறார், அவர்களுக்கு பிறக்கும் பிள்ளை அர்பாஸ் கான். சல்மான் போலீஸ் ஆகிறார். எப்போதும் போலே சட்டை இல்லாமல் சண்டை போடுகிறார். கிளைமாக்ஸ் சண்டையில் அவரின் புஜங்கள் விம்மி புடைப்பதில் சட்டை தானாக கிழிந்து போகிறது !!!!!!!.

சோனஷி சின்கா (சத்ருகன் சின்கா வின் மகள் ) கதாநாயகி. அழகா இருக்கிறார், அழகா காட்டுகிறார் . வேறு என்ன சொல்ல!!!!!!

மீசை வைத்த சல்மான் என்பதை தவிர படத்தில் ஒன்றும் உருப்படி இல்லை. ஆனாலும் எப்படி வசூல் சாதனை என்று புரியவில்லை.

23 July 2010

பார்த்தது - தமிழ் படம் - 5


DON - டான் ( தெலுங்கு dubbing)

நாகார்ஜுன், அனுஷ்கா, ராகவா லாரான்ஸ், நாசர், கெல்லி டூர்ஜி (உலக அழகி லாரா தத்தாவின் காதலராம் - பக்கத்தில் அமர்ந்து படம் பார்த்தவர் கொடுத்த தகவல் ) ஆகியோர் நடித்தது.

கதை திரைகதை நடனம் மற்றும் இசை ஆகிய பொறுப்புகளை இயக்குவதுடன் ராகவா லாரேன்சே சுமக்கின்றார்.

கதை ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. சூரி (நாகார்ஜுன்) ஒரு அநாதை. சிறுவனாக இருக்கும் போதே கஞ்சா வியாபாரியிடமிருந்து லாரென்ஸ் உட்பட பல சிறுவர்களை காக்கிறார்.

நம் ஊர் "நாயகன்" போலே ஏழை எளியவர்க்கு உதவுகிறார். அனுஷ்காவை காதலிகின்றார். அவரும் நீச்சல் உடையில் வந்து கிளு கிளுக்க வைக்கின்றார். எல்லாம் நல்லா போனா போர் அடித்து விடுமே அவருடன் கெல்லி உள்ளே வருகின்றார்.

பல மாநிலங்களை கை பற்றி விட்டு தமிழகத்தையும் கை பற்ற வருகின்றார். அவருடன் நமது "டான்" மோதுகிறார். வழக்கம் போலே ஹீரோ தான் வெற்றி பெருகின்ரார்.

முதல் பாதி சற்று மெதுவாக நகர்வது போலே இருந்தாலும் இரண்டாவது பாதியில் அதனை இயக்குனர் ஈடு கட்டி விடுகின்றார். சண்டை காட்சிகள் "MATRIX" பாணியில் அமைந்து இருக்கிறது.

உதயம் படத்தில் பார்த்தது போலவே ரொம்ப பிரெஷ் ஆக, இளமை துள்ளளுடன் இருக்கிறார் நாகர்ஜுன். மற்றபடி ஒரு நல்ல தெலுங்கு மசாலா. விரைவில் நம்ம ஊர் ஹீரோக்கள் நடித்து வரக்கூடிய சாத்தியங்கள் நிறையவே உள்ள படம்.

21 July 2010

பார்த்தது - தமிழ் படம் -4



ரொம்ப நாளுக்கு அப்புறமாக ஒரு நல்ல படம் பார்த்தேன் என்று எழுதுவது கூட தவறோ என்று தோன்றும் அளவிற்கு தமிழில் மிக அருமையான படங்கள் வருகின்றன.

மதராசா பட்டிணமும் அதில் ஒன்று.

கோவை செந்தில் திரை அரங்கில் ஞாயிறு அன்று இரவு காட்சி பார்த்தேன். ஆர்யா, எமி ஜாக்சன், VMC ஹனிபா, நாசர், பாலா சிங், MS பாஸ்கர், அவருடைய மகனாக வரும் ஒரு தாடிக்காரர், பல படங்களில் சிறிய வேடத்தில் வந்து போன ஆனால் இதில் கபிராக வாழ்ந்து இருக்கும் நபர் என்று யாரை பாராட்டுவது யாரை விடுவது என்றுதான் தெரியவில்லை.

திரைக்கு பின்னால் செல்வகுமார், நிரவ் ஷா, நா .முத்துக்குமார் , ஆண்டனி , GV பிரகாஷ் குமார் என்று ஒரு கூட்டமே இயக்குனர் விஜய்க்கு பக்க பலமாக உழைத்து இருகின்றார்கள்.

இந்த படத்தில் இவருடைய பணி சரி இல்லை என்று சொல்ல முடியாத அளவிருக்கு அனைவரும் தூள் பரத்தியிருகின்ரார்கள்.

துரை அம்மாவுக்கும் பரிதிக்கும் இடையில் காதல் முகிழ்க்கும் போது ஒரு ஹம்மிங் "தான தான" என்று ஒன்று GV கொடுத்து இருக்கின்றார் பாருங்கள் , ஆஹா பேஷ் பேஷ் என்று சொல்ல தக்க அளவில் தான் இருக்கும். இசைஞானி ஆகும் முன்பாக திரு. இளையராஜா இது மாதிரி மிக அருமையான BG போட்டு இருப்பார். நா. முத்துகுமாரின் வரிகளும் ஒவ்வொரு படத்திலும் மனதை ஈர்க்கும் படி அமைந்து விடுகின்றது.

நிகழ் காலத்துக்கும் , கடந்த காலத்துக்கும் போய் வரும் உத்தியை விஜய் மிக அருமையாக கையாண்டு இருக்கின்றார்.

சண்டை காட்சிகள் மிகவும் யதார்த்தமாய் அமைந்து உள்ளது. கயிறு கட்டி ஹீரோ பறந்து பறந்து சண்டை போடவில்லை ஆனால் ஆர்யாவின் கண்களும் நரம்புகளும் ஆக்ரோஷத்தை காட்டுகின்றன.

Titanic போல உள்ளதாக என்னுடன் வந்த நண்பர்கள் சொன்னார்கள். ஒரு வயதான மூதாட்டியின் பார்வையில் ஒரு காதல் கதை என்றாலே உடனே அதை Titanic உடன் ஒப்பிடுவது தவறு என்பது என் கருத்து.

இந்த படத்தில் குறை என்று சொல்ல வேண்டும் என்றால் ஒரு கனவு பாடல் காதலர்களின் பிரிவை நினைத்து வருவது போல் உள்ளது, அதனை தவிர்த்து இருக்கலாம்.

கபீர், பரிதிக்காக உயிர் தியாகம் செய்ய துணிந்தவர், எப்படி தன் பேத்தியிடம் பரிதியை பற்றியோ அல்லது துரை அம்மாவை பற்றியோ பேசாமல் இருந்திற்பார். அதுவும் பரிதி சென்னையில் மிக பிரபலமாக ஒரு சேவை நிலையம் நடத்தி வரும் போது?

சின்ன சின்ன குறைகள் இல்லாவிட்டாலும் சரி இல்லையே.

மொத்தத்தில் ஒரு நிறைவான படம். இன்னும் சொல்ல போனால் துரை அம்மா இறந்தவுடன் வெறும் வசணங்களை மட்டும் வைத்து விட்டு இருட்டாக்கி இருப்பது ஒரு அருமையான directorial உத்தி. மூதாட்டியின் பார்வையில் விரியும் படம் அவர் இறந்த பின் நமக்கு தெரிய முடியாது அல்லவா.

Hats off டு விஜய் and டீம்

23 May 2010

தமிழ் படம் -3



கொல கொலையா முந்திரிக்கா

சுமார் 16 பேர் மட்டும் இன்று காலை காட்சி வெங்கடேசா திரை அரங்கில் பார்த்தோம்.

கார்த்தி, ஷிகா, ஜெயராம், எம்.எஸ். பாஸ்கர் , ஆனந்தாராஜ், ராதா ரவி பத்தும் பத்தாததுக்கு சுப்ரிம் ஸ்டார் சரத் குமார் வேற நடித்து இருகின்றார்.

ஜெய் சங்கர் நடித்த நவாப் நாற்காலி மாதிரி இதிலும் ஒரு நாற்காலி, அதற்குள் வைரம் மறைந்து இருகின்றது என்று கதை காமெடி ஆக போகின்றது.

கிரேசி மோகன் கதை வசனம் எழுதியும் பெரிய அளவில்
காமெடி எடுபடவில்லை.

மிக சிறந்த நடிப்பு திறமை இருந்தும் கார்த்திக் இன்னும் முழுமையாக வெற்றி பெற முடியவில்லை.
ஷிகா அழகு பதுமை. ஒரு ரவுண்டு வர வாய்ப்பு உண்டு.

பாடல்கள் - படத்திருக்கு எக்ஸ்ட்ரா தலை வலி.

16 பேருக்கு fan மற்றும் ac போட்ட வெங்கடேசா திரை அரங்குக்கு நன்றி. இதை தவிர இந்த படத்தை பற்றி சொல்ல எதுவும் இல்லை.

29 March 2010

படித்தது 1

மாணவர் தலைவர் அப்புசாமி



சிறு வயதில் குமுதம் புத்தகத்தில் தொடராக வரும்போது மிக ஆர்வமாக படித்த சில தொடர்களில் மிக முக்கியமான இடம் அப்புசாமி - சீதாபாட்டி தொடருக்கு உண்டு.

மனசு விட்டு சிரிக்க வைப்பதில் இந்த தம்பதிகளுக்கு ஈடு இணை யாரும் இருக்க முடியாது.

நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது கதை புத்தகங்கள் படிக்க அனுமதி கிடைக்காது. ஆனால் குமுதத்தில் வந்த "அப்புசாமி சீதா பாட்டி" படிக்க எப்பொழுதும் தடை இருக்காது.

நேற்று எனது மகன் மது, " மாணவர் தலைவர் அப்புசாமி " என்ற புத்தகத்தை நூலகத்தில் இருந்து எடுத்து வந்திருந்தார். நூலகர் நல்ல புத்தகம் என்று என்  பையனுக்கு சிபாரிசு செய்து அனுப்பி இருந்தார்.

எனக்கு எனது சிறு வயது நினைவு. உடனே எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இந்த கதையில் ரசகுண்டுவுக்கும், பீமா ராவ்வுக்கும் இடம் இல்லாமல் போனது சிறிது வருத்தம் தான்.

ஒரு திவானை சந்தித்து காணமல் போன ராஜகுமாரனை தேடி போகும் அப்புசாமி பல சாகசங்கள் செய்து "ராஜமித்ரர்" ஆகிறார். பின் அவரை தேடி மாணவர் தலைவர் பதவியும் வருகின்றது. எல்லாம் சுபமாக போகும் வேலையில் சீதா பாட்டி நுழைந்து எப்போதும் போல் எல்லா புகழையும் அடைந்து விடுகின்றார். அப்புசாமி வழக்கம் போல் புது சபதம் எடுத்து கொண்டு போகின்றார்.

இதில் ஒரு விஷயம் யோசித்தால் எல்லா வீடுகளிலும் இது தான் நடக்கின்றது. நாம் கஷ்டப்பட்டு செய்வது எல்லாம் கடைசியில் "அவருக்கு என்ன தெரியும் எல்லாம் நான் தான் சொல்ல வேண்டி உள்ளது " என்று சொல்ல படுகின்றது. நாமும் பேசாமல் இருந்து விடுகின்றோம். இதைத்தான் திரு. பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதி இருகின்றார் போலும்.

எந்த வீட்டிலும் கணவர் திறமைசாலி என்றோ அல்லது அவர் எடுக்கும் முடிவுகள் மிக  இருக்கும் என்றோ எந்த மனைவியும் ஒப்புக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன்.

இந்த இடத்தில ஒரு நகைச்சுவை துணுக்கு ஒன்று படித்தது நினைவுக்கு வருகின்றது. இரண்டு நண்பர்கள் பேசி கொண்டு உள்ளார்கள். அதில் முதலாமவர் சொல்கிறார்.

" நான் வீட்டில் ரொம்ப strict, எல்லா முக்கிய விசயங்களிலும் நான் தான் முடிவு எடுப்பேன். சில்லறை விசயங்களில் எனது மனைவி முடிவு எடுப்பார் என்று சொல்கிறார். இரண்டாமவரும் என்னை போல உள்ளவர் போலிருக்கிறது. ரொம்ப ஆதங்கத்துடன் அப்படியா சார் நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர், அப்படி என்ன விஷயங்கள் என்று நீங்கள் பிரித்து கொண்டு உள்ளீர்கள் என்று சொல்ல முடியுமா என்று கேட்க, முதலாமவர் சொன்னார், " சார் சீனாவின் எல்லை மீறலை எப்படி சமாளிக்கிறது? மோடியும் ஒபாமாவும் என்ன பேசினால் நல்லா இருக்கும் மாதிரி உலக முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களில் நான் எடுப்பது இறுதி முடிவாக இருக்கும். சொந்தகாரங்க வீட்டுக்கு போறது, வீட்டு வரவு செலவு கணக்கு போன்ற சில்லறை விசயங்களில் என் மனைவி முடிவு எடுக்கட்டும் என்று விட்டு விடுவேன் என்று சொல்லுவர். பல வடிவேலுகள் நம்மிடைய அடி வாங்கினாலும் வலிக்காத மாதிரியே இருப்பார்கள் போல.

நம் எல்லோரிடமும் ஒரு அப்புசாமி இருகின்றார் என்றே எண்ண தோன்றுகிறது. நாம் முடித்த அலுவலக வேலைக்கு சொந்தம் கொண்டாடும் மேலாளரும் ஒரு வகையில் சீதா பாட்டி தான். அங்கத வகையில் வாழ்கையை நோக்கும் ஒரு கதை தான் அப்புசாமி கதைகள்.

ரொம்ப நாள் கழித்து மனம் விட்டு சிரித்து கொண்டே படித்தேன்.


12 February 2010

தமிழ் சினிமா -2

தமிழ்படம்

சமீப காலத்தில் ஒரு படம் வெளியான தினத்திலும், அந்த வார சனி, ஞாயிறு கிழமைகளிலும் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் மிக பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்குதான்.

ஆனால் கமலாவில் டிக்கெட் கிடைக்காமல்,மினி உதயத்தில் கிடைக்காமல், விருகம்பாக்கம் தேவி கருமாரி அம்மன் திரைஅரங்கில் பார்த்தோம். படம் மிக பெரிய வெற்றி என்பது நன்றாக தெரிகிறது.

இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் தொய்வு விழுவது போல் இருந்தாலும், நீண்ட நாட்கள் கழித்து ஒரு சிறந்த நகைச்சுவை படம் பார்த்த மகிழ்ச்சி. மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய படம்.

கதை என்ன?

நாம் இதுவரை பார்த்து வெற்றி படமாக்கிய படங்களின் "சீன் பிடித்தல்கள்தான்" கதை. நாம் பார்த்துவிட்டு நொந்த விசயங்களை நாம ரசிக்கும்படி செய்த்திருப்பதுதான் கதை.

படத்தின் மிக பெரிய ஹை லைட் "ஒ மகசிய" பாடல்தான். புரியாத வார்த்தைகளின் தொகுப்பாக ஒரு முழு பாடல்.

இந்த படத்தின் வெற்றி மீண்டும் இது மாதிரியே ஒரு படத்தை எடுத்துவிடுவார்களோ என்ற பயத்தையும் உருவாக்கி விட்டது. நமது இயக்குனர்களுக்கு ஒரு வெற்றி படத்தை ஒட்டியே பல படங்களை உருவாக்குவது வழக்கம்தானே!!!!!

தமிழ் சினிமா ஒரு முன்னுரை

ஒரே நாளில் (தீபாவளிக்கு)ஐந்து படங்கள் பார்த்த காலங்கள் உண்டு. ஆனால் இப்பொழுது எல்லாம் தீபாவளிக்கு ஐந்து படங்கள் வெளியாவதே மிக அதிசியமாக தெரிகின்றது.

கும்பகோணதிருக்கு பக்கத்தில் உள்ள நாட்சியார்கோவில்தான் நாங்கள் கோடை விடுமுறைக்கு செல்லும் எங்கள் தாத்தாவின் ஊர்.

அங்கு உள்ள பாலகிருஷ்ணா டூரிங் டால்கீஸ் தான் , நாங்கள் போகும் புனித யாத்திரை. காலையில் ஆற்றுக்கு குளிக்க செல்லும் போதே போஸ்டர்ஸ் எல்லாம் பார்த்து விடுவோம். மூன்று நாளைக்கு ஒரு முறை படம் மாற்றுவார்கள்.

எம்ஜியார் , சிவாஜி படங்கள் என்றால் கூடுதலாக இரண்டு நாட்கள் ஓடும். எல்லா படங்களையும் பார்க்க வேண்டும் என்று பார்த்தோமே தவிர அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் புரிந்து பார்த்தோமா என்றால் கண்டிப்பாக இல்லை. இன்று ரசித்து பார்க்க படங்கள் இல்லை.

ஒரு முறை "தை பிறந்தால் வழி பிறக்கும் " என்று ஒரு படம். திரு. SSR அவர்கள் நடித்தது. 10 நாட்கள் தலை தெறிக்க ஓடியது. அதன் பிறகுதான் எம்ஜியார், சிவாஜி, ஜெய்சங்கர் தாண்டி பிற நடிகர்களும் இருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. பேசும்படம், பொம்மை, ஆகிய இதழ்கள் எங்கள் "பொது அறிவை" வளர்த்தது.

அதன் பிறகு அதிகம் படம் பார்த்தது கைலாசபுரம் பிளக்கு (BHEL) திரை அரங்கில்தான். 1971 வருடம் என்று நினைவு. ராஜபார்ட் ரங்கதுரை என்ற சிவாஜி படம் முதலில் வெளியானது.

நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது ஆங்கில படங்கள் பார்க்கவேண்டும் என்றால் திருச்சியில் உள்ள பிளாசா மற்றும் அருணா திரை அரங்குகளுக்குதான் வர வேண்டும். வீட்டு பாடங்கள் முடித்து, நல்லா மதிப்பு எண்கள் வாங்கி என எங்கள் அப்பா சொல்வதை எல்லாம் செய்தால் மாதம் ஒரு ஆங்கில படம் பார்க்க முடியும். எண்டர்தி டிராகன், ஓமன், எக்ஸார்சிஸ்ட் போன்ற படங்கள் பார்த்தது.

கெயிட்டி திரை அரங்கு ஹிந்தி படங்கள் மட்டுமே வெளியிடுவார்கள். ஷோலே, ஆராதனா, டான், எல்லாம் பார்த்தது அங்குதான்.

06 January 2010

தமிழ் சினிமா 1


வேட்டைக்காரன் திரைப் படத்தினை கடந்த ஞாயிறு அன்று பார்க்க குடும்பத்துடன் சென்று இருந்தோம்.

எனது தம்பி பெண் மேகா (7 வயது ) தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பர தொகுப்பில் வரும் "வேற வேற " பஞ்ச் வசனத்தை சொல்லிக்கொண்டு வந்தாள். திரு. ரஜினிக்கு பிறகு குழந்தைகள் வரைக்கும் ஈர்க்கும் சக்தி விஜய்க்கு தான் உள்ளது.

ஆரம்பத்தில் இருந்து படம் முடியும் வரை தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்ன செய்ய வேண்டுமோ, அத்தனை சங்கதிகளையும் விஜய் கடமை தவறாமல் செய்து முடித்து விட்டார். திரைப்படம் முடியும் பொழுது ஒரு மாதிரி ஆயாசமாக இருந்தது

எல்லா படத்துலேயும் தாதாக்களை அடித்து துவைப்பது விஜய்க்கு bore அடிக்காதா என்று தெரியவில்லை, ஆனால் நமக்கு தாங்க முடியவில்லை.

காதலுக்கு மரியாதை, பிரியமுடன் , துள்ளாத மனமும் துள்ளும் என்று வெவ்வேறு பாணியில் படங்கள் கொடுத்தவரை இமேஜ் வளையத்துக்குள் மாட்ட வைத்து வீண் அடிக்கின்றார்களே என்று எண்ண தோன்றுகிறது.

ஹீரோவிற்காக "கதை" பண்ணுவதை நிறுத்திவிட்டு "கதையில்" ஹீரோவை கொண்டு வந்தால் 150 ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் நமக்கும் ஒரு திருப்தி சந்தோசம் இருக்கும்.

திரைப்படம் பார்த்து விட்டு திரும்பி வரும் போது, என் தகப்பனார் (வயது 68 ) சொன்னார் , " வீட்டுல போய் MGR நடிச்ச வேட்டைக்காரன் DVD யை போட்டு பார்க்கணும்"
என்னுடைய கன்னி முயற்சி

வலைபூக்கள் எழுதுவது தமிழிலேயே எழுத வேண்டும் என்பது என்னுடைய ஆசை.
தமிழில் தட்டச்சு தெரியாத காரணத்தினால் இன்று வரை சாத்தியப்படவில்லை.
எனது நண்பர் ஒருவர்தான் கூகுள் தமிழில் தட்டச்சு செய்யும் வசதியினை தருகின்றது என்று சொன்னார்.

அதன் விளைவே இந்த வலைப்பூ.

சிறு குழந்தை ஒன்று எழுத தொடங்கும்போது என்ன பதட்டம் இருக்குமோ அந்த அளவு பதட்டம் என்னுள்ளும் இருக்கின்றது.

எனது எழுத்துகள் இதற்கு முன்பாக எனது துறை (கட்டுமானம் ) சார்ந்த இதழ்களில் வந்தது உண்டு.


மிக நன்றாக எழுத எனது தகுதியினை நன்கு வளர்த்து கொள்ள வேண்டும். கண்டிப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை என்னுள் இருகின்றது.

Followers