ஒரே நாளில் (தீபாவளிக்கு)ஐந்து படங்கள் பார்த்த காலங்கள் உண்டு. ஆனால் இப்பொழுது எல்லாம் தீபாவளிக்கு ஐந்து படங்கள் வெளியாவதே மிக அதிசியமாக தெரிகின்றது.
கும்பகோணதிருக்கு பக்கத்தில் உள்ள நாட்சியார்கோவில்தான் நாங்கள் கோடை விடுமுறைக்கு செல்லும் எங்கள் தாத்தாவின் ஊர்.
அங்கு உள்ள பாலகிருஷ்ணா டூரிங் டால்கீஸ் தான் , நாங்கள் போகும் புனித யாத்திரை. காலையில் ஆற்றுக்கு குளிக்க செல்லும் போதே போஸ்டர்ஸ் எல்லாம் பார்த்து விடுவோம். மூன்று நாளைக்கு ஒரு முறை படம் மாற்றுவார்கள்.
எம்ஜியார் , சிவாஜி படங்கள் என்றால் கூடுதலாக இரண்டு நாட்கள் ஓடும். எல்லா படங்களையும் பார்க்க வேண்டும் என்று பார்த்தோமே தவிர அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் புரிந்து பார்த்தோமா என்றால் கண்டிப்பாக இல்லை. இன்று ரசித்து பார்க்க படங்கள் இல்லை.
ஒரு முறை "தை பிறந்தால் வழி பிறக்கும் " என்று ஒரு படம். திரு. SSR அவர்கள் நடித்தது. 10 நாட்கள் தலை தெறிக்க ஓடியது. அதன் பிறகுதான் எம்ஜியார், சிவாஜி, ஜெய்சங்கர் தாண்டி பிற நடிகர்களும் இருக்கின்றார்கள் என்பது தெரிந்தது. பேசும்படம், பொம்மை, ஆகிய இதழ்கள் எங்கள் "பொது அறிவை" வளர்த்தது.
அதன் பிறகு அதிகம் படம் பார்த்தது கைலாசபுரம் பிளக்கு (BHEL) திரை அரங்கில்தான். 1971 வருடம் என்று நினைவு. ராஜபார்ட் ரங்கதுரை என்ற சிவாஜி படம் முதலில் வெளியானது.
நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது ஆங்கில படங்கள் பார்க்கவேண்டும் என்றால் திருச்சியில் உள்ள பிளாசா மற்றும் அருணா திரை அரங்குகளுக்குதான் வர வேண்டும். வீட்டு பாடங்கள் முடித்து, நல்லா மதிப்பு எண்கள் வாங்கி என எங்கள் அப்பா சொல்வதை எல்லாம் செய்தால் மாதம் ஒரு ஆங்கில படம் பார்க்க முடியும். எண்டர்தி டிராகன், ஓமன், எக்ஸார்சிஸ்ட் போன்ற படங்கள் பார்த்தது.
கெயிட்டி திரை அரங்கு ஹிந்தி படங்கள் மட்டுமே வெளியிடுவார்கள். ஷோலே, ஆராதனா, டான், எல்லாம் பார்த்தது அங்குதான்.
No comments:
Post a Comment