06 April 2020

பார்த்தது: ஷக்ரித்

பார்த்தது: ஷக்ரித் (Shagird ) (சீடன்)
நடிகர்கள்: நானா படேகர் , ரிமி சென், மோஹித் அக்லவாட் 
இயக்கம் திக்மான்ஷு துளியா 

கதை சுருக்கம்: லஞ்சம் வாங்கும் போலீஸார் நிறைந்த போலீஸ்  நிலையத்தில் லட்சியத்துடன் வேலைக்கு சேருகிறார் மோஹித். அங்கு அதிகாரியாய் இருக்கும் நானா படேகருக்கு அவரை ஏனோ பிடித்து விடுகிறது. அவரை தனது சீடன் போல் எல்லா இடங்களுக்கும் கூட்டி போகின்றார். ஒரு கட்டத்தில் சீடன் தனது குருவை மிஞ்சி செயல் பட ஆரம்பிக்கும் பொழுது நிகழும் பிரச்சனைகளே படத்தின் கதை 

நானா படேகரை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. நடிப்பு ராட்சசன். இந்த படத்திலும் அதனை குறைவில்லாமல் செய்து இருக்கிறார்.  அதுவும் தன் குழுவில் உள்ள ஒருவன் தனக்கு எதிராக திரும்பிய செய்தி கேட்டு அவனை நேரில் சந்தித்து பேசும் பொழுது நானாவை ரசித்து பார்க்கலாம். 

கொஞ்ச நேரம் வந்தாலும் அனுராக் காஷ்யபின் நடிப்பு வேற லெவல்.

தற்கால இந்தியாவில் உள்ள ​அரசியல் வாதிகள், மாபியா கும்பல் மற்றும் போலீசிற்கு உண்டான தொடர்புகள், அதன் மூலம் ஒவ்வொருவரும் அடையும் பலன்கள் எல்லாம் கதையின் போக்கில் சொல்ல படுகிறது. தனது தேவை முடிந்தவுடன் தனது அடியாளை கொல்ல சொல்லும் அரசியல்வாதி, அதில் குறுக்கு வழியில் சம்பாதிக்க பார்க்கும் போலீஸ் என்று நமது நிகழ் கால அரசியலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

மிக மெதுவாக செல்லும் திரைக்கதை ஒரு பலவீனம் என்றாலும் அதனை இறுதியில் வேகம் எடுக்கும் க்ளைமாக்ஸ் ஈடு கட்டி விடுகிறது.

நாங்கள் செய்யும் தொழில் தவறாக இருக்கலாம் ஆனால் அதில் உள்ள நேர்மைதான் எங்களின் பலம் என்று சொல்லும் ஹவாலா புரோக்கர், கடைசியில் 18 கோடியை பார்த்ததும், இவ்வளவு பணத்தை பார்த்தது இல்லை. அதனால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கொலைகாரனாக மாறுகிறார். 

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக குண முரண்களுடன் படைத்தது உள்ளது இயக்குனரின் பலம். அது தான் மெதுவாக செல்லும் கதையையும் சுவாரசியமாக ஆக்குகிறது.







No comments:

Post a Comment

Followers