08 April 2020

​பார்த்தது; செத்தும் ஆயிரம் பொன்


​பார்த்தது; செத்தும் ஆயிரம் பொன் 
நடிகர்கள்: ஸ்ரீலேகா ராஜேந்திரன், நிவேதிதா சதிஷ், கப்பிரிலா செல்லுஸ் 
பாடல்கள்/ இசை; சமந்த் நாக் 
ஒளிப்பதிவு மணிகண்டன் 
இயக்கம் ஆனந்த் ரவிச்சந்திரன்.
தளம் NETFLIX 

நன்றி: இந்த படத்தினை பார்க்க எனக்கு பரிந்துரைத்த தோழர் ராசா ரகுநாதன் அவர்களுக்கு 

கதை சுருக்கம்: 5 வயதில் பேத்திக்கு திருமணம் செய்து வைக்க முயலும் பாட்டி இடமிருந்து அவரது மகன் குடும்பம் விலகி சென்னை செல்கிறது. தாயாரும் தகப்பனாரும் இறந்த பிறகு அந்த பெண் தன் பாட்டி கூப்பிட்டதால் கிராமத்திற்கு வருகின்றார். ஆரம்பத்தில் பாட்டிக்கும் பேத்திக்கும் ஒத்து போகவில்லை. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நேசம் காட்டுகின்றார்கள். சென்னைக்கு திரும்பி போகும் பேத்தி கிராமத்திற்கு மீண்டும் வருகின்றார் அது ஏன் என்பது கிளைமாக்ஸ்.

யதார்த்தத்திற்கு நெருக்கமான படங்கள் அருகி விட்ட சூழ்நிலையில் இந்த படம் அந்த குறையினை போக்குகின்றது. கிராமங்களில் இறந்தவருக்கு முக ஒப்பனை செய்வார்கள் என்பது இது வரை நான் கேள்விப்படாத ஒன்று. படத்தில் மறைமுகமாக  காட்டுவது போன்று குறிப்பிட்ட சமூகத்தின் வழக்கமோ என்று தெரியவில்லை. நமது தொன்ம பழக்கத்தினை பற்றிய ஒரு புதிய அனுபவம்.

ஒப்பாரி வைப்பது ஒரு பெரிய கலை. இன்றும் எங்கள் கிராமத்தில் சிலர் உண்டு. அவர்கள் ராகம் போட்டு பாடும் ஒப்பாரியை கேட்கும் பொழுது, இறந்தவரே, நமக்கு இவ்வளவு பெருமையா என்று யோசித்து திரும்பி எழுந்து வந்து விடுவாரோ என்று நான் யோசித்தது உண்டு. நிறைய படங்களில் இந்த ஒப்பாரி பதிவு பண்ணப் பட்டாலும் அது நகைச்சுவையாக கடந்து போகும். ஆனால் இந்த படத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்து உள்ளது.

 ஸ்ரீலேகா ராஜேந்திரன், நிவேதிதா சதிஷ், கப்பிரிலா செல்லுஸ் - இவர்கள் மூவரின் நடிப்பும் மிக சிறப்பு. 

 ஸ்ரீலேகா கிராமத்து அப்பத்தாவாக தனது பாத்திரத்தை உணர்ந்து வாழ்ந்து இருக்கார். அவரது கலை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்.  

 நிவேதிதா சதிஷ்  - சில்லு கருப்பட்டியில் மதுவாக சிறப்பாக செய்து இருந்தார். அடுத்த படங்களில் என்ன ஆவரோ என்று யோசித்து இருந்தேன். இந்த படத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து இருக்கார். சிறந்த கதைகளை தேர்ந்து எடுத்து நடித்தால்  நல்ல பெயர் கிடைக்கும். அதுவும் இரவில் அப்பத்தாவுக்கு தெரியாமல் வெளியில் போகும்பொழுதும், பேருந்து நிலையத்தில் குபேரனுக்கு ஆதரவாக பேசும் பொழுதும் சிறப்பாக செய்து இருப்பார். 

இவர்கள் இருவரையும் விட கதையில் அப்பத்தாவுக்கும், மீராவுக்கும் பாலமாக இருக்கும்  கப்பிரிலா செல்லுஸ்சின் நடிப்பு மிகவும் அருமை. இவர் இதற்குமுன் நடித்த படம் எதுவும் நான் பார்த்தது இல்லை. ஆனால் மிக சிறப்பாக கிராமத்து அமுதாவாக வாழ்ந்து இருக்கின்றார். துடுக்குத்தனம். தான் மரியாதை வைத்து இருக்கும் அப்பத்தாவின் பேத்தி என்று மீரா மீது காட்டும் பாசம். அந்த குடிகார பயலை கட்டிக்கிறதுக்கு வெறும் சிறுக்கியா இருந்து விடுவேன் என்று அவரது பாத்திர படைப்பு அருமையாக உள்ளது. 

ஆப்பநாடு என்ற ஊரில் கதை நடக்கிறது. கிராமத்தின் வெம்மையும் மனிதர்களின் உண்மையும் படம் முழுக்க நிரவி உள்ளது. கதையினை இசையும் ஒளிப்பதிவும் உறுத்தாமல் சுமந்து செல்கின்றது. 

படத்தில் ஒரே குறை - அது netflix படம் என்பதாலோ என்று தெரியவில்லை. மீரா புகைபிடிப்பது போல் காட்ட படுவது. NETFLIX ன் எல்லா படங்களிலும் கலாச்சார விரோதமாக காட்சிகள் வலிந்து திணிக்க படுவது போல் உள்ளது. அவர் புகைப்பிடிப்பது மூலமாக இயக்குனர் என்ன சொல்ல வருகின்றார் என்று தெரிய வில்லை. ​அவருக்கு புகை பழக்கம் இல்லாதவராக காட்டி இருந்தாலும் படத்தில் எந்த வித்தியாசமும் தெரிந்து இருக்காது.​
இதனை விடுத்து விட்டு நல்ல கிராமத்து படம், நமது பண்பாடுகளின் கூறுகள் தெரிய வேண்டும்  என்று நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். 

2 comments:

  1. I liked Amudha's performance much better. Absolute performance. Director showing Meera Smoking is also a reflection of reality amongst career women. Most young girls in IT/ITEs/Airlines/Media specially indulge in smoking. Post lunch 1 cigarette is shared among friends. It is a bit less in women pursuing engineering or accounts for that matter.

    ReplyDelete

Followers