10 April 2020

பார்த்தது: பயர் பிராண்ட் (FIRE BRAND )



பார்த்தது: பயர் பிராண்ட் (FIRE BRAND )
மொழி: மராத்தி 
நடிகர்கள்: கிரிஷ் குல்கர்னி, சச்சின் கேத்கர், உஷா ஜாதவ் 
இயக்கம் அருணா ராஜே 
தயாரிப்பு: பிரியங்கா சோப்ரா (நடிகை)

கதை சுருக்கம்: நீதி மன்றத்தில் புலியாக இருக்கும் ஒரு பெண், தனது இளம் வயதில் ஏற்பட்ட பாலியல் பலாத்காரத்தினால் உருவாகும் மன உளைச்சலை வெல்ல போராடுவதே கதை.

மாதவ் மற்றும் சுனந்தா - இனிமையான இல்லறம் நடத்தும் தம்பதிகள். ஆனால் கணவருடன் இணையும் பொழுது சுனந்தாவிற்கு இளமையில் நடந்த பாலியல் வன்புணர்வு நினைவுக்கு வந்து இனிமை கலைகிறது. இந்த பக்கம் மிக சிக்கலானா வழக்குகளையும் மிக அனாசியகமாக வெல்லும் சுனந்தா தன் மனசிக்கலை வெல்ல முடியவில்லை. அவர் வாழ்க்கையில் சந்திக்கும் ஆண்கள் அனைவரும் மிக கெட்டவர்களாக இருப்பதே அதற்கு காரணம். 

இந்த சூழ்நிலையில் கணவருக்கு எந்த சந்தோஷமும் தர முடியவில்லை என்று சுனந்தா தன் கணவரிடன் தன்னை  விவாகரத்து செய்து விட்டு வேறு ஒரு பெண்ணுடன் மகிழ்ச்சியாக வாழும் மாறு சொல்கின்றார். மாதவ் மறுத்து விட்டு நீ என்னை கூப்பிடும் பொழுது வருகிறேன் என்று கிராமத்திற்கு போய் விடுகிறார். 

இதற்கு இடையில் திவ்யா - ஆனந்த் விவாகரத்து வழக்கு வருகின்றது. இது வரை கொடுமை செய்யும் ஆண்களை பார்த்த சுனந்தா முதல் முறையாக ஒரு நல்ல ஆண்மகனை பார்க்கிறார். அதனால் அந்த வழக்கில் வெல்ல வாய்ப்பு இருந்தும் தோற்று போகின்றார். பின்பு நன்றி சொல்ல வரும் ஆனந்த் மூலமாக அடையும் தெளிவில் மீண்டும் கணவருடன் இணைகிறார். 

ஒரு பாலியல் வன்புணர்வு மற்றும் அது குறித்த ஒரு செய்தியாக நாம் கடந்து போகும் பெண்களின் வாழ்க்கையில் அதன் பின்பு நடக்கும் மனச் சிக்கல்களை வைத்து ஒரு படத்தினை தயாரித்த பிரியங்கா சோப்ராவுக்கு வாழ்த்துகள். அதிலும் அவர் இணைத்த TEAM தான் இதில் மிக முக்கியம். 

அருணா ராஜே - பல விருதுகள் வாங்கிய இயக்குனர். பெண்ணுரிமை சார்ந்த தளத்தில் மிக அதிகமாக இயங்கி வருபவரும் கூட. அதே போல் சிறந்த நடிகைகைக்கு விருது வாங்கிய உஷா ஜாதவ் மற்றும் மிக சிறந்த நடிகர்களான  கிரிஷ் குல்கர்னி, சச்சின் கேத்கர் என்று மிக பெரிய தலைகள் இணைத்த படம். எந்த இடத்திலும் இந்த கூட்டணி நம்மை ஏமாற்றவில்லை. 

மனநல மருத்துவர் ஒரு குரங்கு பொம்மையை தன்னை வன்புணர்வு செய்தவனாக நினைத்து கொண்டு தண்டனை தர சொல்லும் காட்சியில் உஷா ஜாதவின் நடிப்பு உச்சத்தில் இருக்கும். ஆக்ரோஷம், அழுகை, இயலாமை, கோபம், வெறுமை என்று அத்தனை உணர்வினையும் வெளிப்படுத்தி இருப்பார்.  படம் மொத்தத்தையும் தாங்கி நிற்பது உஷாதான். 

கிரிஷ் குல்கர்னி -  சுனந்தாவின் கணவர் மாதவ் ஆக சிறப்பாக UNDER PLAY செய்து இருப்பார். தமிழில் நிறைய படங்களில் சிவகுமார் செய்து இருப்பது போல். மனைவி மேல் தீரா காதல், அவரது வெற்றிகள் குறித்த பெருமிதம் என்று எல்லா இடங்களிலும் நிறைவாக செய்து இருப்பார். நிறைவாக தன் மனைவி இன்னும் ஒரு ஆடவனுடன் உறவு கொண்டு இருந்தார் என்பதை அறியும் பொழுது ஏற்படும் தயக்கமும், மனக்குழம்பமும் அதனை தாண்டிய காதலும் என்பதை அந்த காட்சியில் சிறப்பாக செய்து இருப்பார். படம் முழுவதும்  UNDER PLAY செய்தவருக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு. வீண் அடிக்காமல் சிக்ஸர் அடித்து இருப்பார்

சச்சின் கேத்கர் - ஆனந்த் - மனைவியின் கொடுமைகளுக்கு எதுவும் செய்ய முடியாமல் மகளுக்காக எல்லாவற்றையும் விட்டு கொடுத்து போகும் அப்பாவாக நிறைவு.

எல்லாமே சிறப்பாக அமைந்த படம். ஆனால் படத்தின் இறுதியில் வரும் ஆனந்த் மற்றும் சுனந்தா வின் உடல் உறவும் அதனை நியாயப்படுத்த சுனந்தா பேசுவதும் எந்த விதத்தில் சரி என்று தெரியவில்லை. ஆனந்த் சொல்லும் SO WHAT தத்துவத்துடன் சுனந்தாவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாக முடித்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும் என்பது என் கருத்து. அந்த உடல் உறவு வலிந்து திணிக்கப்பட்டது போல் உள்ளது. ஒரு வேலை NETFLIX படம் என்றாலே அப்படி இருக்க வேண்டும் என்று எதுவும் சட்டம் உள்ளதோ தெரியவில்லை. 

யாரும் நன்னெறி வகுப்புகளுக்கு (MORAL SCIENCE CLASS ) இப்பொழுது போவது இல்லை என்பதால் நாம் அது குறித்து பேசுவதும் தவறோ என்று தோன்றுகிறது. கடைசி 20 நிமிடங்கள் மட்டும் படத்தில் சற்றே மாற்றி இருக்கலாம் 

​இந்த படத்தில் இன்னும் ஒரு நம்பிக்கையான தரும் ஒரு விஷயம். இரண்டு கணவர்களும் மிக நல்லவர்களா காட்டி இருப்பது தான். பொதுவாக இம்மாதிரி FEMINIST படங்களில் அனைத்து ஆண்களும் கெட்டவர்களே என்பது போல் வரும். இதில் அப்படி இல்லை.​

மிக சிறந்த படம். நிறைய இடங்களில் சின்ன சின்ன வசனங்களில், காட்சிகளில் பெண்கள் இன்னும் தடுமாறி கொண்டுதான் இருக்கிறார்கள், அவர்களுக்கான உண்மையான விடியல் வரவில்லை என்பதை போகிற போக்கில் நமது முகத்தில் அறைந்தது போல் சொல்லிய விதத்தில் FIRE BRAND பார்க்க வேண்டிய படம்.




08 April 2020

​பார்த்தது; செத்தும் ஆயிரம் பொன்


​பார்த்தது; செத்தும் ஆயிரம் பொன் 
நடிகர்கள்: ஸ்ரீலேகா ராஜேந்திரன், நிவேதிதா சதிஷ், கப்பிரிலா செல்லுஸ் 
பாடல்கள்/ இசை; சமந்த் நாக் 
ஒளிப்பதிவு மணிகண்டன் 
இயக்கம் ஆனந்த் ரவிச்சந்திரன்.
தளம் NETFLIX 

நன்றி: இந்த படத்தினை பார்க்க எனக்கு பரிந்துரைத்த தோழர் ராசா ரகுநாதன் அவர்களுக்கு 

கதை சுருக்கம்: 5 வயதில் பேத்திக்கு திருமணம் செய்து வைக்க முயலும் பாட்டி இடமிருந்து அவரது மகன் குடும்பம் விலகி சென்னை செல்கிறது. தாயாரும் தகப்பனாரும் இறந்த பிறகு அந்த பெண் தன் பாட்டி கூப்பிட்டதால் கிராமத்திற்கு வருகின்றார். ஆரம்பத்தில் பாட்டிக்கும் பேத்திக்கும் ஒத்து போகவில்லை. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நேசம் காட்டுகின்றார்கள். சென்னைக்கு திரும்பி போகும் பேத்தி கிராமத்திற்கு மீண்டும் வருகின்றார் அது ஏன் என்பது கிளைமாக்ஸ்.

யதார்த்தத்திற்கு நெருக்கமான படங்கள் அருகி விட்ட சூழ்நிலையில் இந்த படம் அந்த குறையினை போக்குகின்றது. கிராமங்களில் இறந்தவருக்கு முக ஒப்பனை செய்வார்கள் என்பது இது வரை நான் கேள்விப்படாத ஒன்று. படத்தில் மறைமுகமாக  காட்டுவது போன்று குறிப்பிட்ட சமூகத்தின் வழக்கமோ என்று தெரியவில்லை. நமது தொன்ம பழக்கத்தினை பற்றிய ஒரு புதிய அனுபவம்.

ஒப்பாரி வைப்பது ஒரு பெரிய கலை. இன்றும் எங்கள் கிராமத்தில் சிலர் உண்டு. அவர்கள் ராகம் போட்டு பாடும் ஒப்பாரியை கேட்கும் பொழுது, இறந்தவரே, நமக்கு இவ்வளவு பெருமையா என்று யோசித்து திரும்பி எழுந்து வந்து விடுவாரோ என்று நான் யோசித்தது உண்டு. நிறைய படங்களில் இந்த ஒப்பாரி பதிவு பண்ணப் பட்டாலும் அது நகைச்சுவையாக கடந்து போகும். ஆனால் இந்த படத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்து உள்ளது.

 ஸ்ரீலேகா ராஜேந்திரன், நிவேதிதா சதிஷ், கப்பிரிலா செல்லுஸ் - இவர்கள் மூவரின் நடிப்பும் மிக சிறப்பு. 

 ஸ்ரீலேகா கிராமத்து அப்பத்தாவாக தனது பாத்திரத்தை உணர்ந்து வாழ்ந்து இருக்கார். அவரது கலை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்.  

 நிவேதிதா சதிஷ்  - சில்லு கருப்பட்டியில் மதுவாக சிறப்பாக செய்து இருந்தார். அடுத்த படங்களில் என்ன ஆவரோ என்று யோசித்து இருந்தேன். இந்த படத்தில் அவர் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து இருக்கார். சிறந்த கதைகளை தேர்ந்து எடுத்து நடித்தால்  நல்ல பெயர் கிடைக்கும். அதுவும் இரவில் அப்பத்தாவுக்கு தெரியாமல் வெளியில் போகும்பொழுதும், பேருந்து நிலையத்தில் குபேரனுக்கு ஆதரவாக பேசும் பொழுதும் சிறப்பாக செய்து இருப்பார். 

இவர்கள் இருவரையும் விட கதையில் அப்பத்தாவுக்கும், மீராவுக்கும் பாலமாக இருக்கும்  கப்பிரிலா செல்லுஸ்சின் நடிப்பு மிகவும் அருமை. இவர் இதற்குமுன் நடித்த படம் எதுவும் நான் பார்த்தது இல்லை. ஆனால் மிக சிறப்பாக கிராமத்து அமுதாவாக வாழ்ந்து இருக்கின்றார். துடுக்குத்தனம். தான் மரியாதை வைத்து இருக்கும் அப்பத்தாவின் பேத்தி என்று மீரா மீது காட்டும் பாசம். அந்த குடிகார பயலை கட்டிக்கிறதுக்கு வெறும் சிறுக்கியா இருந்து விடுவேன் என்று அவரது பாத்திர படைப்பு அருமையாக உள்ளது. 

ஆப்பநாடு என்ற ஊரில் கதை நடக்கிறது. கிராமத்தின் வெம்மையும் மனிதர்களின் உண்மையும் படம் முழுக்க நிரவி உள்ளது. கதையினை இசையும் ஒளிப்பதிவும் உறுத்தாமல் சுமந்து செல்கின்றது. 

படத்தில் ஒரே குறை - அது netflix படம் என்பதாலோ என்று தெரியவில்லை. மீரா புகைபிடிப்பது போல் காட்ட படுவது. NETFLIX ன் எல்லா படங்களிலும் கலாச்சார விரோதமாக காட்சிகள் வலிந்து திணிக்க படுவது போல் உள்ளது. அவர் புகைப்பிடிப்பது மூலமாக இயக்குனர் என்ன சொல்ல வருகின்றார் என்று தெரிய வில்லை. ​அவருக்கு புகை பழக்கம் இல்லாதவராக காட்டி இருந்தாலும் படத்தில் எந்த வித்தியாசமும் தெரிந்து இருக்காது.​
இதனை விடுத்து விட்டு நல்ல கிராமத்து படம், நமது பண்பாடுகளின் கூறுகள் தெரிய வேண்டும்  என்று நினைப்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம். 

06 April 2020

பார்த்தது: ஷக்ரித்

பார்த்தது: ஷக்ரித் (Shagird ) (சீடன்)
நடிகர்கள்: நானா படேகர் , ரிமி சென், மோஹித் அக்லவாட் 
இயக்கம் திக்மான்ஷு துளியா 

கதை சுருக்கம்: லஞ்சம் வாங்கும் போலீஸார் நிறைந்த போலீஸ்  நிலையத்தில் லட்சியத்துடன் வேலைக்கு சேருகிறார் மோஹித். அங்கு அதிகாரியாய் இருக்கும் நானா படேகருக்கு அவரை ஏனோ பிடித்து விடுகிறது. அவரை தனது சீடன் போல் எல்லா இடங்களுக்கும் கூட்டி போகின்றார். ஒரு கட்டத்தில் சீடன் தனது குருவை மிஞ்சி செயல் பட ஆரம்பிக்கும் பொழுது நிகழும் பிரச்சனைகளே படத்தின் கதை 

நானா படேகரை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. நடிப்பு ராட்சசன். இந்த படத்திலும் அதனை குறைவில்லாமல் செய்து இருக்கிறார்.  அதுவும் தன் குழுவில் உள்ள ஒருவன் தனக்கு எதிராக திரும்பிய செய்தி கேட்டு அவனை நேரில் சந்தித்து பேசும் பொழுது நானாவை ரசித்து பார்க்கலாம். 

கொஞ்ச நேரம் வந்தாலும் அனுராக் காஷ்யபின் நடிப்பு வேற லெவல்.

தற்கால இந்தியாவில் உள்ள ​அரசியல் வாதிகள், மாபியா கும்பல் மற்றும் போலீசிற்கு உண்டான தொடர்புகள், அதன் மூலம் ஒவ்வொருவரும் அடையும் பலன்கள் எல்லாம் கதையின் போக்கில் சொல்ல படுகிறது. தனது தேவை முடிந்தவுடன் தனது அடியாளை கொல்ல சொல்லும் அரசியல்வாதி, அதில் குறுக்கு வழியில் சம்பாதிக்க பார்க்கும் போலீஸ் என்று நமது நிகழ் கால அரசியலை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

மிக மெதுவாக செல்லும் திரைக்கதை ஒரு பலவீனம் என்றாலும் அதனை இறுதியில் வேகம் எடுக்கும் க்ளைமாக்ஸ் ஈடு கட்டி விடுகிறது.

நாங்கள் செய்யும் தொழில் தவறாக இருக்கலாம் ஆனால் அதில் உள்ள நேர்மைதான் எங்களின் பலம் என்று சொல்லும் ஹவாலா புரோக்கர், கடைசியில் 18 கோடியை பார்த்ததும், இவ்வளவு பணத்தை பார்த்தது இல்லை. அதனால் என்னை மன்னித்து விடுங்கள் என்று கொலைகாரனாக மாறுகிறார். 

இப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக குண முரண்களுடன் படைத்தது உள்ளது இயக்குனரின் பலம். அது தான் மெதுவாக செல்லும் கதையையும் சுவாரசியமாக ஆக்குகிறது.







26 March 2020

பார்த்தது : ரெய்டு (RAID )

பார்த்தது : ரெய்டு (RAID ) 
மொழி: ஹிந்தி 
நடிகர்கள்: அஜய் தேவ்கன் , இலியானா, சவுரப் சுக்லா 
ஒளிப்பதிவு: அல்போன்ஸ் ராய் 
கதை: ரிதேஷ் ஷா 
இயக்கம்: ராஜ் குமார் குப்தா 

1980ல் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த கதை உருவாக்க பட்டுள்ளது. 

NO ONE KILLED JESSICA வினை தொடர்ந்து இயக்குனர்  ராஜ் குமார் குப்தாவின் அடுத்த உண்மைக்கு நெருக்கமான படைப்பு. 

அமே பட்நாயக் ( அஜய் தேவ்கன்) ஒரு வருமான துறை அதிகாரி. அவரது மனைவி மாலினி (  இலியானா). 

அவருக்கு ஒரு நாள் ஒரு மர்ம அழைப்பு வருகின்றது. அதில் ராமேஸ்வர் சிங் ( சவுரப் சுக்லா) என்ற MP யின் வீட்டில் உள்ள கணக்கில் வராத பணத்தை குறித்த தகவல் கிடைக்கிறது. 

அவரது வீட்டிற்கு ரெய்டுக்கு போகிறார்கள்.
போகும் அதிகாரிகளே அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள். 
அரை நாட்களுக்கு மேல் தேடியும் எதுவும் கிடைக்கவில்லை. சோர்ந்து போய் இருக்கும்  அமே பட்நாயக்கிற்கு வீட்டில் இருக்கும் ஒருவரே ஒரு வரைபடத்தை தருகிறார்.

அதன் படி தேட ஆரம்பிக்கும் பொழுது தங்க கட்டிகள், கோடி கணக்கில் பணம்  என்று தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது.

 ராமேஸ்வர் சிங் தன்னுடைய எல்லா  செல்வாக்கையும் பயன் படுத்தி ரெயிடை நிறுத்த பார்க்கின்றார். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி வரை செல்கின்றார். அவரிடம்  அமே பட்நாயக்  ரெயிடை நிறுத்த பிரதமர் கையெழுத்திட வேண்டும் என்று கேட்கிறார்.  அவரின் நேர்மையை உணர்ந்து பிரதமர் தொடர அனுமதிக்கிறார்.

இதற்கு இடையில்  ராமேஸ்வர் சிங் தன்னுடைய அடியாட்களை வைத்து மொத்த அதிகாரிகளையும் கொல்ல பார்க்கின்றார்.
மத்திய அரசு அனுப்பி வைக்கும் காவல் துறை அவர்களை காப்பாற்றுகிறது 
பிரதமர் இம்மாதிரியான அதிகாரிகள் நாட்டுக்கு தேவை என்று சொல்கிறார். 
ராமேஸ்வர் சிங் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களில் யார் தகவல் கொடுத்தார்கள் என்று கேட்கும் பொழுது அதனை சொல்ல  
  அமே பட்நாயக் மறுத்து விடுகிறார். அவர் சிறைச்சாலையில் யாராக இருக்கும் என்று ஆராய்ந்து கொண்டு இருப்பதுடன் படம் முடிகின்றது 
  

ராமேஸ்வர் சிங் ஆக நடித்து இருக்கும்   சவுரப் சுக்லாவின் நடிப்பு படத்தின் மிக பெரிய பலம். இவர் தமிழில் தில்லுக்கு துட்டு படத்தில் ஹீரோயின் அப்பாவாக வருவார் (அந்த படம் அவருக்கு ஒரு திருஷ்டி ) 
அதுவும் அவர் அம்மாவிடம் ராவணனை வீழ்த்தியது ராமன் இல்லை கூட இருந்த விபீஷ்ணன் தான். நம் வீட்டின்  விபீஷ்ணன் யார் என்று கேட்கும் போதும்,   அமே பட்நாயக்கை அசால்ட்டாக deal செய்யும் போதும் தெறிக்க விட்டு இருப்பார்.

அஜய் தேவ்கன் வழக்கம் போல் அமைதியான மற்றும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் 

இதில் தேவை இல்லாத திணிப்பு இலியானவும் அவருக்காக வைக்க பட்ட பாட்டும் தான்.
ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட படம். அந்த சோர்வு தெரியாமல் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் சிறப்பாக அமைந்து இருக்கிறது.

1981ல் இந்திய வருமான துறை வரலாற்றில் நீண்ட நாட்கள் - 4 நாட்கள்  கான்பூர் சட்ட பேரவை உறுப்பினர் சர்தார் இந்தர் சிங் வீட்டில் நடந்த ரெய்டினை சார்ந்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.





17 January 2020

பார்த்தது - பட்டாஸ்

பார்த்தது - பட்டாஸ் 

நடிகர்கள்: தனுஷ், சினேகா, நாசர், முனீஷ்காந்த், நவீன் சந்திரா, மெஹ்ரின்
இசை: விவேக் மெர்வின்
இயக்கம்: துரை செந்தில்குமார்

கதை: அப்பாவை கொன்ற வில்லனை மகன் பழி வாங்கும் அரத பழசான கதை. அதில் "அடிமுறை " என்ற புது விஷயத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

மெஹ்ரின்: தமிழ் சினிமாவின் வழக்கமான கதாநாயகி. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனிடம் அடிவாங்கி விட்டு தனுஷுக்கு முத்தம் கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு போவதுடன் அவரது பங்களிப்பு முடிந்து விடுகிறது.

பஞ்சர் என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகர் காமெடியில் ஒரு ரவுண்டு வருவார். திருட யோசிக்கும் தனுஷ் இடம் " PASSION இல்லனா ப்ரோ பேப்பர் போட்டுட்டு போங்க " என்று சொல்லும் பொழுது திரை அரங்கமே அதிருகிறது. தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வரவு.

நாசர்: வேலப்பன் ஆசானாக வழக்கம் போல். இந்த யானைக்கு ஏன் இப்படி சோள பொரி கொடுக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

நவீன் சந்திரா: பிரம்மன் படத்தில் சாக்கலேட் பையன் போல் வந்தவர் இதில் ரண கள வில்லன். சிறப்பான வில்லன்.

தனுஷ்: தொழிலை நேசிக்கும் ஒரு மனிதன் தன்னை எப்படி வடிவமைத்து கொள்வான் என்பதற்கு  இவர் தான் சிறந்த எடுத்து காட்டு. திருடா திருடி, சுள்ளான் போன்ற படங்களில் ஆரம்பித்து அசுரன் போன்று ஒரு வளர்ச்சியை அடைந்து உள்ளார்.
அவர் தற்போது தேர்வு செய்யும் படங்களில் மண் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். இந்த படத்திலும் திரவிய பெருமாள் ஆக வாழ்ந்து இருக்கிறார். மரு வைத்தால் அப்பா எடுத்தால் மகன் என்று இல்லாமல் உடல் மொழி, பேச்சு என்று எல்லாவற்றிலும் நல்ல வித்தியாசம்.

சினேகா: இளம் பெண்ணாய் துள்ளல். நல்ல COME BACK படம். 
சண்டை என்று வந்து விட்டால் யாராக இருந்தாலும் விட்டு கொடுக்காத தன்மை. கணவன் இறப்பை பார்க்கும் பொழுது பரிதவிப்பு. நீண்ட நாட்களுக்கு பிறகு மகனை பார்க்கும் பொழுது கண்களில் ஏக்கம். கொலை செய்ய நினைக்கும் போலீசை அடித்து துவைக்கும் அதிரடி என்று வெளுத்து வாங்குகிறார்.

ஏற்கனவே கொடி படத்தில் திரிஷாவுக்கு நல்ல வேடம் கொடுத்த துரை செந்தில்குமார் இதில் சினேகாவை சிறப்பாக பயன் படுத்தி இருக்கிறார். அவருக்கும் தனுசுக்கும் நல்ல புரிதல் வந்து இருக்கிறது. இன்னும் சிறப்பான படங்கள் தரட்டும்.

பெரிதாக ஈர்க்க வில்லை என்றாலும் படம் விறுவிறுப்பாக இருக்கிறது. அடிமுறை என்ற பழமையான தற்காப்பு கலையை பற்றி சொல்லி இருக்கிறார்கள். முதல் பாதியில் கொஞ்சம் கத்திரியை போட்டு விட்டு, வில்லனை பழிவாங்குவதை இன்னும் வித்தியாசமாக செய்து இருக்கலாம்.

மிக பெரிய மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளருடன் நடை பெரும் கிளைமாக்ஸ் சண்டை வெறித்தனமாக அமைந்து இருக்க வேண்டாமா? ரொம்ப ரொம்ப சுமார்.

பொங்கலில் வெடித்த பட்டாஸ் கொஞ்சம் மார்கழி பனியில் ஆங்காங்கு நமத்து போய் இருக்கிறது. கொஞ்சம் கவனம் எடுத்து இருந்தால் பட்டாஸ், தர்பாரை தகர்த்து இருக்கும்.


16 January 2020

பார்த்தது : தர்பார்

பார்த்தது : தர்பார் 

நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
இசை: அனிருத்
இயக்கம்: A .R . முருகதாஸ்

இந்த படத்தை பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது. YESCON மற்றும் பொங்கல் வேலைகள் என்று இருந்ததால் உடனே எதுவும் எழுதவில்லை.
ஒரு சில நண்பர்கள் தொலைபேசியில் கூப்பிட்டு ஏன் எழுதவில்லை என்று கேட்டதால் கால தாமதமான விமர்சனம்.

கதை: நேர்மையான போலீஸ் அதிகாரி , போதை மருந்து கும்பலை பிடிக்கிறார். அதன் காரணமாக அவரது மகளை இழக்கிறார். மகளின் இறப்புக்கு காரணமானவர்களை தேடி அழிக்கிறார்

பொதுவா முருகதாஸ் படம் வெளியானதும் இது என் கதை என்று யாரவது வழக்கு போடுவார்கள். இதில் அதற்கு வாய்ப்பில்லை. திரைப்படம் தோன்றிய காலத்தில் உருவான கதை இது. பாட்டி சொல்லும் கதைகளுக்கு யாரும் patent கேட்க முடியாது. அந்த வகையில் இதுவும் ஒரு பாட்டி சொல்லும் கதை தான். நிறைய எதிர்பார்த்து இருந்தேன். விஜயகாந்தை ரமணாவில் வித்தியாசமாக காட்டியது போல் இதில் ரஜினிக்கு எதாவது செய்வார் என்று. ஆனால் ரஜினியை வைத்து செய்து விட்டார். பேட்ட கூட ரஜினியின் DIE HARD FANS க்கான படம் தான். ஆனால் அதில் கார்த்திக் சுப்புராஜின் தனித்தன்மை - TOUCH இருந்தது. இதில் முருகதாஸின் TOUCH என்று எதுவும் இல்லை.

நிவேதா தாமஸ் தென்னிந்திய மொழிகளில் கிராமங்கள் வரைக்கும் தெரிவதற்கு இந்த படம் ஒரு வாய்ப்பு. அதனை அவரும் நன்றாக பயன் படுத்தி கொண்டு இருக்கிறார்.

நயன்தாரா - சுஜாதா பாணியில் சொல்வதானால் "ரவிக் " அணிந்து படம் முழுவதும் மொசைக் தரை போல் வழுவழுப்பான முதுகை காட்டி உள்ளார். அறம் , மாயா என்று தனது திறமையை வெளிப்படுத்திய நயன் இதில் வெறும் பொம்மையாக வந்து போகிறார்.

யோகி பாபு - வழக்கம் போல்.

சுனில் ஷெட்டி - பல ஹிந்தி படங்களில் வில்லன்களை துவம்சம் செய்தவர் இதில் ரஜினியிடம் அடி வாங்குகிறார். ஒரு பயங்கரமான கத்தியை வைத்து சோபாவை கிழிக்கிறார் . அதன் பிறகு அந்த கத்தியை எங்கேயோ படப்பிடிப்பு தளத்தில் தொலைத்து விட்டார் போல, அதன் பிறகு அதை எங்கேயும் காணவில்லை. எதையோ செய்ய போகிறார் என்று பார்த்தால் புஸ் என்று போகிறார். ரஜினிக்கு ஒரு TOUGH FIGHT கொடுக்கும் வில்லனை வடிவமைத்து இருக்க வேண்டும். வில்லன் வேண்டும் என்பதற்கு சுனில் ஷெட்டி. பரவாயில்லை சும்மா வீட்டில் படம் இல்லாமல் உட்கார்ந்து இருப்பதற்கு சம்பளம் கிடைக்கும் தானே.

ரஜினிகாந்த் - அலெக்ஸ் பாண்டியன் போல என்று பெரிய build up கொடுத்து கொண்டு இருந்தார்கள். மாரீஸ் 70mm திரை கிழிந்தது அலெக்ஸ் பாண்டியன் entry கொடுத்த பொழுது.

இங்கு ???????.

சில விஷயங்களை ஒப்பிடாமல் இருப்பது அந்த விஷயங்களுக்கு சிறப்பு.

எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது நாங்கள் பள்ளியில் படித்த பொழுது நானும் ,பிரதீப்பும் , தர்மேந்திராவும்   ஒரு காந்தி ஜெயந்திக்கு காலையில் ஒன்பது மணிக்கே மாரீஸ் வாசலில் காத்து இருந்து அடித்து பிடித்து கே 1,2,3 வரிசையில் அமர்ந்து பார்த்தோம். அன்றைக்கு ரஜினி படத்தை முதல் நாள் பார்த்த பலர் இன்று சினிமா பார்க்கும் வழக்கத்தையே விட்டு விட்டார்கள்.

சமுக வலைத்தளங்களில் பலரும் ரஜினி அவரது வயதுக்கு ஏற்ற படங்களில் நடிக்க வேண்டும். அமிதாப் எப்படி மாறி விட்டார் என்று பதிவு இடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அமிதாப் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தார். அதனால் அவர் மாறினார். BOX OFFICE HIT கொடுத்து கொண்டு இருந்தால் அவரும் இன்றைக்கு பஞ்ச் வசனங்கள் பேசி கொண்டு தான் இருந்து இருப்பார்.

இன்னும் சொல்ல போனால் இப்பொழுது வருஷத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்கும் ரஜினி அவரது 50 + கலீல் இரண்டு வருஷத்திற்கு ஒரு படம் நடித்து கொண்டு இருந்தார். ரஜினிக்கு கொடுக்கப்படும் அரசியல் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவே அவர் இப்பொழுது தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் என்பது என் எண்ணம்.

ரஜினியை பற்றி ஒரு சிறப்பு தகவல்: இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட திரைப்படத்தின் அனைத்து வடிவங்களிலும் (FORMAT ) கதா நாயகனாக நடித்தவர் ரஜினி மட்டுமாகத்தான் இருக்க முடியும்.

கருப்பு வெள்ளை, வண்ணம், 70mm (மாவீரன் ) 3D, சினிமாஸ்கோப் , அனிமேஷன் (கோச்சடையான்) என்று எல்லா வடிவங்களிலும் நடித்து உள்ளார். அடுத்த படத்தை IMAX லிலும் நடித்து விட்டால் இப்போதைக்கு வேறு எந்த வடிவமும் பாக்கி இல்லை.

தர்பார் படத்தை பற்றி ஒண்ணுமே சொல்லவில்லையே - ரஜினி படத்திற்கு போனோமா , விசில் அடிச்சோமா, டான்ஸ் ஆடினோமா வந்தோமா என்று இருக்கணும். அந்த மாதிரி படங்களில் இதுவும் ஒன்று.


காலா மாதிரி திரையில் உரிமைக்கு போராடு என்று சொல்லிவிட்டு , நிஜத்தில்  போராட்டக்கார்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று பேட்டிகொடுப்பது   போன்ற தத்துவ முரண் பாடுகள் இல்லாத ஒரிஜினல் அக்மார்க் ரஜினி படம்.


Followers