26 January 2014

மாலினி 22 பாளையம்கோட்டை

மாலினி 22 பாளையம்கோட்டை

நடிகர்கள்: நித்யா  மேனன் , கிரீஸ், நரேஷ் , கோவை சரளா
இசை: அரவிந்த் - ஷங்கர்
பாடல்கள் : நா. முத்துக்குமார்
ஒளிப்பதிவு: மனோஜ் பிள்ளை
திரைக்கதை , வசனம் , இயக்கம்: ஸ்ரீபிரியா


தன்னை காதலித்து ஏமாற்றியவனை ஒரு பெண் பழிவாங்கும் கதை. 22 FEMALE KOTTAYAM   என்ற மலையாள படத்தின் remake. இந்த படம் மலையாளத்தில் ஓஹோ என்று ஓடியதாக சொன்னார்கள். மலையாள சினிமாவிலும் கற்பனை வறட்சி வந்து விட்டது போலும்.

நித்யா மேனன் மிக அருமையாக நடித்து இருக்கிறார். அதுவும் போலீஸ் பிடிக்கும் பொழுது வருண் (கிரீஸ்) கண்டு கொள்ளாமல் போகும் பொழுது அவரது கண்களில் ஒரு ஏக்கமும் இயலாமையும் தெரிகிறது.

சிறைச்சாலை காட்சிகளில் ஏகப்பட்ட எதிர்பார்த்த காட்சிகள். இந்த படத்தில் climax மிக அருமையாக இருக்கும் என்று படம் குறித்த செய்திகளில் வந்து இருந்தது. ஆனால் நிஜத்தில் சவுதியில் கொடுக்கும் தண்டனையை கொடுத்து இருக்கிறார்கள் இதில் என்ன புதுமை என்று தெரியவில்லை.

இடைவேளை விடும் பொழுது மாலினி மீது வரும் பரிதாபத்தை அடுத்து அவர் பழி வாங்கும் பொழுது ஆக்ரோஷமாக மாற்றி இருக்க வேண்டும் அதை செய்ய இயக்குனர் தவறி விட்டார்.

மாலினியுடன் தங்கி இருக்கும் ஜென்சி என்ற பெண் ஒரு வயதானவருக்கு "தோழியாக" இருப்பதையும் அதனை சரளாவும், மாலினியும் எந்த ஒரு விகல்பம் இல்லாமல் ஏற்று கொள்வதும் தமிழ் படங்களுக்கு புதுசு . கலாச்சார காவலர்கள் பொங்க வேண்டிய ஒரு விஷயம். அதை தவிர இந்த படத்தில் ரசிக்க கூடிய காட்சிகள் என்று எதுவும் இல்லை.

ரொம்ப நாட்களுக்கு முன்பாக மாதவி நடித்த நிரபராதி என்றொரு படம் வந்தது. அதிலும் இப்படித்தான் தன்னை கெடுத்தவர்களை பழி வாங்குவார். அது கூட கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்த நினைவு அல்லது அந்த வயதில் அப்படி தோன்றியதா என்றும் தெரியவில்லை.

இப்பொழுது தியேட்டர்களில்  MGR நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் Trailer போடுகிறார்கள். இந்த படத்தின் இடைவேளை விட்டவுடன் பெண்கள் பகுதியில் இருந்து டேய் ஆயிரத்தில் ஒருவன் போடுடா என்று சத்தம். நிமிர்ந்து நில், கதிர்வேலன் காதல் எல்லாம் போடும் பொழுது வராத கைதட்டல் எல்லாம் ஆயிரத்தில் ஒருவன் போடும் பொழுது தியேட்டரே அலறியது . இன்னும் இரட்டை இலைக்கு இருக்கும் செல்வாக்கின் காரணம் இவர்கள்தான்.

படத்தை பற்றி: பேலஸ் தியேட்டரில் முட்டை போண்டா மிக நன்றாக இருக்கும். வேறு என்ன சொல்ல. மிக அருமையான படமாக வந்து இருக்க வேண்டிய கதை

No comments:

Post a Comment

Followers