உள்ளத்தில் இருப்பதெல்லாம்..
சொல்ல ஓர் வார்த்தையில்லை..
நான் ஊமையாய் பிறக்கவில்லை..
உணர்ச்சியோ மறையவில்லை..
என் தங்கமே உனது மேனி..
தாங்கி நான் சுமந்து செல்ல..
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி

நான் ஊமையாய் பிறக்கவில்லை..
உணர்ச்சியோ மறையவில்லை..
என் தங்கமே உனது மேனி..
தாங்கி நான் சுமந்து செல்ல..
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி
நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி
உறவு என்றும் பாசம் என்றும்
இறைவன் பூட்டிய விலங்கு
அழுவதற்கும் சிரிப்பதற்கும்
அமைத்த உள்ளம் ஒன்று
ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி
இறைவன் பூட்டிய விலங்கு
அழுவதற்கும் சிரிப்பதற்கும்
அமைத்த உள்ளம் ஒன்று
ஆற்று வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி
இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி
வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி
இந்த பாடல் இடம் பெற்ற படம் சங்கே முழங்கு. எம்.ஜி.ஆர். பாடுவது போல் அமைந்த பாடல். இந்த பாடலை பல முறை கேட்டு உள் ளேன். டி.எம்.எஸ். குரலில் உள்ள குழைவு நம்மை நெகிழ வைத்து விடும். விழியோரங்கள் ஈரக் கசிவால் எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து விடுவது போல் உணர்வு வரும்.
நேற்றும் இந்த பாடலை என் காரில் கேட்டு கொண்டு செல்லும் பொழுது என்னுடன் வந்த நண்பர் ஒரு கேள்வி எழுப்பினார்.
சார், உறவென்றும் பாசமென்றும் சொல்வது எல்லாம் ஓகே தான். ஆனால் பாருங்கள் ஒரே சம்பவம் ஒருவருக்கு துன்பத்தையும் மற்றவருக்கு இன்பத்தையும் தரும் என்று எப்படி சொல்ல முடியும்? என்று கேட்டார்.
நான் சொன்னேன், சார் பாடலில் கவிஞர் அப்படி சொல்லவில்லை. அவர் சொல்வது சிரிப்பதோ அழுவதோ ஒரே உள்ளத்தின் செயல்பாடு என்று தான். ஆனால் நீங்கள் கேட்ட கேள்வி இந்த பாடலை தாண்டி சிந்திக்க சொல்கிறது. எந்த ஒரு விசயமும் நமக்கு மகிழ்ச்சியை தரும் பொழுது இன்னும் ஒருவருக்கு துன்பத்தை தருவது உண்டு. பாலியல் வன்முறைக்கு ஆட்படும் பெண்ணின் அழுகைதான் ஒரு குருர மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் இதில் ஒரு விஷயம் கவனித்தோம் என்றால் பண்பட்ட நாகரீக மனிதர்களின் உள்ளம் எல்லாம் பிறர் துன்பத்தை தன் துன்பமாகதான் நினைக்கும். இன்றும் கிராமப்புறங்களில் பேச்சு வார்த்தை கூட இல்லாத உறவுகள் ஒருவரது வீட்டில் துக்கம் என்னும் பொழுது வாசலிலாவது நின்று விட்டு செல்வதை பார்க்க முடியும். அதே போல் துக்க வீட்டில் நிகழ்சிகள் முடியும் வரை அதனை மதித்து தங்கள் வீட்டில் எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ ஆடம்பரமோ இன்றி செயல் படுவார்கள்.
ஆனால் அதே விஷயம் நமது நகர் புறங்களில் நடக்கும் பொழுது என்ன நடக்கிறது என்று நாம் சிந்தித்து பார்த்தால் நாம் நாகரீகமானவர்களா என்ற சந்தேகம் நமக்கு வந்து விடும். சமீபத்தில் எனது நண்பரின் மகன் ஒரு விபத்தில் இறந்து விட்டார். எல்லோரும் மிகுந்த வருத்ததுடன் இருக்கும் பொழுது பக்கத்துக்கு வீட்டில் தொலைக்காட்சியில் குத்து பாட்டு உரக்க ஒலித்தது. ஏதோ தவறுதலாக வைத்து விட்டார்கள் என்று நினைத்து ஒருவர் போய் அவர்களிடம் சொன்னதற்கு "SO WHAT" இது எங்கள் வீடு என்று சொல்லி விட்டு படகென்று கதவை தாளிட்டார்கள். இவர்களை போன்றவர்களை வைத்து நீங்கள் சொன்னால் கண்டிப்பாக நீங்கள் சொல்வது சரிதான் என்று சொன்னேன்.
அப்படியே ஆரம்பித்த பேச்சு பாடலில் வரும் ஆற்றுவெள்ளம் போல் கிளை பிரித்து எங்கெங்கோ ஓடி மீண்டும் பாடலிலேயே வந்து மையம் கொண்டது.
"வாழும் போது வருவோர்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம், வார்த்தை இன்றி போகும் போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்" என்ற வரியில் எங்களது விவாதம் வந்து நின்றது. கவிஞரின் கற்பனை எப்படி போய் உள்ளது பாருங்கள். இந்த பாடலில் இறந்த பிறகு வருபவருக்கு மௌனத்தாலே நன்றி சொல்வோம் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நமது யதார்த்த வாழ்வில் எல்லா விசயத்துக்கும் நம்மால் வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியுமா என்ன?
இன்னும் சொல்ல போனால் நன்றி என்று சொல்லி விட்டு விட முடியாத விஷயங்கள் நமது வாழ்க்கையில் நடந்தது இல்லையா என்ன?
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நான் எனது மனைவி இரண்டு மகன்களும் அப்பொழுது அவர்கள் சிறுவர்கள், திருச்சியில் இப்பொழுது மெகா ஸ்டார் என்ற பெயரில் இருக்கும் அன்றைய KT தியேட்டரில் இரவு காட்சி SUPER MAN படம் பார்த்து விட்டு வரும் பொழுது மகாத்மா பள்ளி அருகில் டயர் பஞ்சர் ஆகிவிட்டது.
நள்ளிரவு
தூங்கும் குழந்தைகள்
வார இறுதி நாள்.
எனக்கு ஸ்டெப்னி மாற்ற தெரியாது.
சில நம்பர்களுக்கு செல்லில் கூப்பிட்டால் யாரும் எடுக்கவில்லை. நானாக இருந்தாலும் சனி இரவு செல்லை எடுத்து இருப்பேனா என்று சந்தேகம்தான். என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்த சமயத்தில் ஒருவர் பைக்கில் வந்தார். நாங்கள் நிற்பதை பார்த்து என்ன சார் பிரச்னை என்று கேட்டார். விபரத்தை சொன்னவுடன் நான் மெக்கானிக் தான் சார், டூல்ஸ் இருந்தால் ஸ்டெப்னி மாற்றி விடுவோம் என்று சொல்லி விட்டு ஸ்டெப்னியை கழற்றி பார்த்தால் காற்று இல்லை. என் மனைவிக்கு அழுகையும் செகண்ட் ஷோ கூட்டி வந்த என் மீது கோபமும் என்று ஒரு கலவையாக நின்று கொண்டு இருந்தார்.
இப்பொழுது எனக்கு அந்த நிலைமை வந்து விட்டது. ஸ்டெப்னியில் காற்று இல்லாமல் இருக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது மெக்கானிக் என்னை பார்த்து பரிதாபப்படும் நிலைமைக்கு வந்து விட்டார். அப்புறம் அவரே ஒரு ஆலோசனை கொடுத்தார். சார் நான் இந்த டயரை எடுத்துகிட்டு போய் பெட்ரோல் பங்கில் காற்று பிடித்து விட்டு வரேன் சார் என்று சொன்னார். என்னடா நமக்காக ஒருத்தர் போய் இவ்வளவு சிரமம் படுவதா என்று நினைத்து, நானும் கூட வாரேன் நாம் போய் KT தியேட்டருக்கு பக்கத்தில் இருக்கும் பங்கில் காத்து பிடிச்சுட்டு வந்துடுவோம் என்று சொன்னேன்.
சார் லேடீஸ்ம் குழந்தைகளும் தனியா இந்த ராத்திரியில் விட்டுட்டு நாம போறது நல்லது இல்ல, என்ன நம்பினா டயரை கொடுங்க நான் தூக்கிட்டு போய்ட மாட்டேன் என்றார்.
அடுத்த அரை மணியில் டயருக்கு காற்று அடித்து ஸ்டெப்னி மாற்றி எல்லாம் முடித்து கொடுத்தார். நான் அவருக்கு 100 ரூபாய் கொடுத்தேன்.
அவர் ரொம்ப யார்த்தமாக இருக்கட்டும் சார் நான் என்ன பஞ்சரா பார்த்தேன் சும்மா காத்துதானே சார் அடிச்சிட்டு வந்தேன். இந்த டயரும் பஞ்சரா என்று தெரியாது கொஞ்சம் கவனமா வேகமா வீட்டுக்கு போய்டுங்க என்று சொல்லி விட்டு அவரது பைக்கை ஸ்டார்ட் செய்தார். நன்றி என்று சொல்ல வார்த்தை கூட இல்லாமல் மௌனமாக வந்தோம்.
எதற்கும் ஒரு விலையுண்டு எதையும் பணத்தால் சாதிக்க முடியும் என்ற என் எண்ணங்களை டயரில் இருந்து பிடிங்கி விடப்படும் காத்து அதன் மூல கூறான இயற்கையுடன் கலந்த பின் தட்டையாய் கிடக்கும் டயரை போல் என் மனசும் கிடந்தது.
நண்பரிடம் கேட்டேன் மௌனத்தாலே நன்றி சொல்வது தெரிந்ததா என்று. அவர் மௌனமாக இருந்தார்.