20 August 2011

பார்த்தது - 17


உயர் திரு 420

நடிகர்கள்: சிநேகன் , மேக்னாராஜ், வசீகரன்

இசை: மணிஷர்மா

வசனம்: ராதாகிருஷ்ணன்

கதை, திரைக்கதை,இயக்கம்: பிரேம்நாத்

தயாரிப்பு: R. சந்திரசேகரன் (Rich India Talkies)

பார்த்தது: மீனா (திருச்சி)


சிநேகன் ஒரு ஏமாற்று பேர்வழி. அடுத்தவர்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகிறார். ஒரு முறை மேக்னாவையும் ஏமாற்றி விடுகிறார். தமிழ் சினிமா இலக்கணப்படி அவரையே காதலிக்கவும் ஆரம்பித்து விடுகிறார். சரி இனிமேல் ஏதோ திருப்பங்கள் வர போகிறது என்று நினைத்து உட்காரும்பொழுது, வசீகரன் - 5 நட்சதிர ஓட்டல் முதலாளி வருகிறார். அவருக்கு கடன் காரர்களுக்கு பதில் சொல்வதே பெரிய வேலையாக இருக்கிறது. இது போக பிரபல நடிகை ஒருவரை காதலிக்கிறார். (தமிழ் தெரியாத தமிழ் நடிகை என்று வேறு ஒரு பில்ட் அப்.

வசீகரனிடம், சிநேகன் வேலைக்கு சேருகிறார். ஆஹா இனிமேல் ஏமாற்று வேலைகள் நடக்க போகிறது என்று பார்த்தால் நம்மை ஏமாற்றி விடுகிறார்கள். இதற்கு இடையில் தயாரிப்பாளர் சந்திரசேகர் வேறு விஜயகாந்த் பாணியில் ஒரு full coat போட்டு கொண்டு ஒரு நாலைந்து பேருடன் குருக்கும் நெருக்கும் போகிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இயக்குனர் குழம்பி போய் விட்டார். ஊரையே ஏமாற்றும் சிநேகன், வசிகரனிடம் மட்டும் கடைசி வரை நல்லவராய் நடந்து கொண்டது ஏன்?
வரி கட்டுவதே முக்கிய வேலை என்றும் அதற்காகவே ம்பாதிக்கிறார் என்றும் சொல்லப்படும் சந்திரசேகர் ஏன் ஒரு ஏமாற்று பேர்வழியை தன் கூட அழைத்து செல்ல வேண்டும். மேக்னா கடைசியில் என்ன ஆனார்? பல கேள்விகளுக்கு விடை இல்லை.

பா. விஜய் போல் இன்னும் ஒரு கவிஞர், கதாநாயகன் ஆனார் என்பதை தவிர்த்து படத்தில் எதுவும் இல்லை. அருமையான தலைப்பு. அழகா பார்த்திபன் அல்லது ஜீவன் மாதிரி ஆட்களை போட்டு ஒரு விறு விறுப்பான கதையை கொடுத்து இருக்கலாம். நல்ல செலவு செய்து வெளி நாட்டில் எல்லாம் போய் படம் எடுத்தவர்கள் ஒரு நல்ல கதையும் அதற்கு ஒரு நல்ல திரைக்கதையும் அமைத்து இருக்கலாம்.

பாடல்கள் ஒன்றும் ஓகோ என்று சொல்லும் அளவிற்கு இல்லை. உயரம் குறைவான சிநேகனுடன் நடிக்க மேக்னா ரொம்பவே சிரமம் பட்டு இருப்பது பாடல் காட்சிகளில் தெரிகிறது. நல்ல வேளை சிநேகன் டான்ஸ் எல்லாம் ஆட முயற்சி செய்யாமல் ஒரு மாதிரி பாடல் காட்சிகளில் சமாளித்து விட்டார்.

ஒளிப்பதிவு D. சங்கர் என்று இருந்தது. இயக்குனர் மணிவண்ணனின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரா என்று தெரியவில்லை. படத்தில் ஒரு freshness யை கடைசி வரை வைத்து இருந்தார்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரே விஷயம் ஒளிப்பதிவிக்குஅப்புறமாக சிறப்பாக அமைத்த விஷயம் வசனம். நல்ல crispy ஆன வசனங்கள்.

படம் வெளியான மூன்றாவது நாள், ஞாயிற்று கிழமை வேறு, ஆனாலும் திரை அரங்கில் 42 பேர் கூட இல்லை. அதே சமயம் அதே வளாகத்தில் ஓடும் "காஞ்சானாவிற்கு" ஏகப்பட்ட கூட்டம். அந்த படம் ரிலீஸ் ஆகி 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இரண்டு தியேட்ரில் வேறு ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் இருந்து நல்ல பொழுது போக்கு படம் என்றால் மக்கள் திரை அரங்கிற்கு வந்து பார்க்க தயாராக இருக்கிறார்கள் என்பது தான்.

உயர்திரு 420 - நம்மை தண்டித்து விட்டார்கள்.


14 August 2011

படித்தது -3


அக்கரை சிவப்பு - ராஜேஷ் குமார்

அக்கரை சிவப்பு, பூமாலை நீயே, வாய்மையே வெல்லும் என்ற மூன்று குறு நாவல்கள் அடங்கிய ஒரு புத்தகம் படித்தேன். இதனை நாவல்கள் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் சுமார் 70 பக்கங்களில் எழுதப்படுவது நாவலா என்று எனக்கு தெரியவில்லை.

5 பாகங்களில் படித்த பொன்னியின் செல்வன், 2 பாகங்களில் படித்த கடல் புறாவை எல்லாம் கணக்கில் எடுத்தால் இந்த வகையான நாவல்களை எதில் வகை படுத்துவது என்று தெரியவில்லை.

ஆனால் இதுபோல் சுமார் 1500 நாவல்களை திரு. ராஜேஷ்குமார் எழுதி உள்ளார் என்பது தான் இதில் உள்ள சிறப்பு.

மூன்று குறு நாவல்களும் எப்பொழுதும் போல மிகவும் விறு விறுப்பாக இருந்தது. முதல் நாவலான அக்கரை சிவப்பில் - நித்யா என்ற பெண் துபாயில் வேலை பார்க்கும் அவளது கணவனை சந்திக்க போகும் போது, அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் ஒரு பார்செலினால் வரும் பிரச்சினைகளை பற்றிய கதை.

பூமாலை நீயே - மனித ரத்தத்தினை செயற்கையாக உருவாக்கும் ஒரு விஞ்ஞானி பற்றிய ஒரு கதை. ஏகப்பட்ட கொலைகள் செய்தும் அவரால் கடைசி வரைக்கும் செயற்கை ரத்தம் கண்டு பிடிக்க முடியாமல் போலீசில் மாட்டி கொள்ளுகிறார்.

வாய்மையே வெல்லும் - காதலனனின் மரணத்திற்காக பழி வாங்கும் காதலி பற்றிய ஒரு கதை.

திரு. ராஜேஷ்குமாரின் கதைகளில் எப்போதும் உள்ள விறுவிறுப்பு, அதிகப்படியான ஆங்கில கலப்பு வார்த்தைகள், தெளிவான எழுத்தோட்டம் அமைந்த ஒரு புத்தகம்.

ராஜேஷ்குமார் நாவல்களில் உள்ள ஒரு சிறப்பு எப்பொழுதும் அதனை நாம் கவலை படாமல் சிறுவர்களுக்கும் படிக்கக் கொடுக்கலாம். காரணம் அவரது எந்த நாவலும் ஆபாச கருத்துகளோ அல்லது தவறான வழிகாட்டுதலோ காட்டாது.









படைத்தது - 4

என்ன எழுதுவது?

ரொம்ப நாளாகிவிட்டது எழுதி. ஏனோ தெரியவில்லை காரில் பயணிக்கும் போதோ அல்லது வேறு வேலைகள் செய்யும் பொழுதோ இதனை இன்றே எழுத வேண்டும் என்று தோன்றும் ஆனால் இணையத்தில் உட்காரும் பொழுது வேறு எதையாவது பார்த்து விட்டு எழுதுவதை விட்டு விடுகிறேன்.

இனி இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று ஒரு தீர்மானம் செய்து இருக்கிறேன். அதுவும் நேற்று திரு. அமிதாப் அவர்களை பற்றிய ஒரு கட்டுரை படித்த பிறகு அது மேலும் உறுதி ஆகி உள்ளது. அவருடைய வயதில், அவருடைய வேலை பளுவிலும் அவரால் தினம் எழுத முடியும் என்றால் நாம் ஏன் வாரம் ஒரு முறையாவது எழுத முயற்சி செய்ய கூடாது?

பார்ப்போம் புது வருடம் அன்று எடுக்கப்படும் தீர்மானம் போல் ஆகி விடாமல் இருக்க வேண்டும். இன்னும் சொல்ல போனால் diary எழுதுவது போல் ஆகாமல் இருக்க வேண்டும். ஜனவரி முதல் தேதி பக்கம் முழுவதும் எழுதி தள்ளுவோம். பத்து தேதி நெருங்கும் பொழுது "இன்று ஒன்றும் விசேசம் இல்லை" என்று எழுதுவோம். அப்புறம் பொங்கல் விடுமுறை கழிந்து அந்த diary எங்கே என்று தேட வேண்டிய நிலையில் இருப்போம். அப்புறம் ஒரு பத்து நாள் கழித்து பார்த்தால் அது என் வீட்டுக்காரி மளிகை கணக்கு எழுதவோ அல்லது என் பையன் வீட்டு பாடம் எழுதவோ அல்லது என் தம்பி பொண்ணு படம் வரையவோ எடுத்து போய் இருப்பார்கள்.

அது போல் ஆகாமல் வாரம் ஒரு முறையாவது ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்து உள்ளேன்.

வாழ்வின் பெரிய இன்பங்களை தேடி கொண்டு செல்வதால் இது போன்ற மனதிற்கு பிடித்த சிறிய சந்தோசங்களை எப்பொழுதும் இழந்து விடுகிறோம் என்று நினைக்கிறேன். பெரியதாக அமிதாப்பை போல் தினமும் எழுத போகிறேன் என்று எல்லாம் சொல்லாமல் சிறிய இலக்குகளை நோக்கி துவங்குவோமே !!!!.

சந்தோசதிற்கான ரகசியம் மிக எளிமை ஆனது. நம்மை மகிழ்ச்சியில் ஆற்ற கூடிய விசயங்களை நாம் முதலில் கண்டு உணர வேண்டும். பின்பு அதனை நோக்கி நம்மை, நமது சக்தியை செலுத்தி கொண்டு போக வேண்டும். இதனை எவ்வளவு தூரம் கடைபிடிக்கிறோம் என்பதுதான் பிரச்சினையே.







Followers