03 March 2011

படைத்தது -2

கடவுள் தரிசனமும் புது செருப்பும்.

ரொம்ப நாள் கழித்து திருநெல்வேலி பயணம். ஒவ்வொரு முறையும் முடிந்த அளவு நெல்லை அப்பரை போய் பார்த்து விட்டு வருவதை ஒரு பழக்கமாக வைத்து உள்ளேன்.

அது பக்தி காரணமாகவா என்றால் எனக்கு சொல்ல தெரியவில்லை. நானும் பல ஊர்களுக்கு என் வேலையின் நிமித்தமாக போய் வந்தாலும் எந்த ஊரிலும் கோவில்களை தேடி போவதில்லை. இன்னும் சொல்ல போனால் என்னை போல் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் காலை நேரங்களில் கண்டிப்பாக அந்த ஊரின் பிரசித்தி பெற்ற கோவிலுக்கும், மாலையில் அருமையான bar யை தேடி செல்வது வழக்கம்.

ஆனால் நெல்லை போனால் மட்டும் எப்படியாவது கோவிலுக்கு போய் விடுவேன். ஒவ்வொரு முறையும் அதன் பிரமாண்டம் என்னை பிரமிக்க வைத்து கொண்டே உள்ளது. ஒரு கட்டுமான பொறியாளாரா (Civil Engineer) நான் வியக்கும் விஷயம். பொதுவாக எல்லோரும் சொல்வார்கள் " எந்தவொரு தொழில் நுட்ப அறிவும் இல்லாமல் எப்படி கட்டினார்கள்" என்று.

என்னை பொறுத்த வரையில் நமது தமிழர்கள் கட்டிட கலையில் மிக பெரிய திறமையுடன் இருந்து உள்ளார்கள். ஆனால் அதனை ஆவண படுத்தவோ அல்லது அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுக்கவோ இல்லை. நாம் மேற்கு நாட்டவரிடம் கடன் வாங்கிய அறிவை கொண்டு பொழப்பை நடத்தி வருகிறோம்.

இன்றைக்கு எல்லா மருத்துவர்களும் சொல்வது நடை பயிற்சிதான். நெல்லைஅப்பர் கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்தாலே போதும் வேறு எந்த பயிற்சியும் தேவை இல்லை. அங்கு நிலவும் ஒரு அமைதி போதும் மன அழுத்தத்தை குறைக்க. So BP மாத்திரைகளையும் தூக்கி போட்டு விடலாம்.

எவ்வளோவோ நல்ல விசயங்களை நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்று இருக்கிறார்கள், ஆனால் நாமோ நமது கலாச்சாரத்தை மறந்து விட்டு அலைந்து கொண்டு உள்ளோம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில நிம்மதியை தேடி அலைகின்றாய் என்றும் சொல்லி உள்ளார்கள்.

இப்பொழுது நான் கோவிலுக்கு போன கதைக்கு வருவோம். எப்பொழுது கோவிலுக்கு போனாலும் செருப்பை பத்திரமாக "காலணி பாதுகாக்குமிடம்" என்று பலகை தொங்குமிடத்தில் பத்திரமாக வைத்து விட்டு தான் போவேன். இந்த முறையும் அவ்வாறு விட போனால் அங்கே ஆட்கள் யாரும் இல்லை. முன்பு செருப்பு வைத்து பாதுகாக்க காசு கொடுக்க வேண்டும், அதனால் ஆட்கள் எப்பொழுதும் இருப்பார்கள். ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது அதனை இலவசமாக பாதுகாக்க வேண்டும் என்று மாற்றி விட்டார். அதனால் யாரும் பொறுப்பாக இருப்பது கிடையாது.

இப்பொழுது நான் கோவிலுக்கு போவதா அல்லது பாதுகாக்கும் ஆள் வரும் வரை காத்திருப்பதா??? பெரும் குழப்பமாகி விட்டது. பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார், அவர் "சும்மா விட்டுட்டு போங்க சார் யார் எடுக்க போகிறார்கள்" என்று சொன்னார். யதார்தமாக அவர் காலை பார்த்தால் செருப்பு ஏதும் அணிந்திருக்கவில்லை. வடிவேலு பாணியில் நம்ம செருப்பை ஆட்டையை போட ஐடியா பண்றானோ ஒரு குரல் வேறு கேட்டது.

சரி என்ன ஆனாலும் பரவாயில்லை, நாம கோவிலுக்குள் போவோம் என்று செருப்பை விட்டு விட்டு சன்னிதானத்தை நோக்கி சென்றேன். போகும் வழியில் எப்பொழுதோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.

தீபாரதனை காட்டும் பொழுது
வாசலில்
விட்ட செருப்பு

யார் எழுதியது என்பது மறந்து விட்டது ஆனால் கவிதை மட்டும் மறக்கவில்லை. சரியாக ஈசனுக்கு தீபாராதனை காட்டும் பொழுது மீண்டும் நினைவுக்கு வந்து விட்டது.

தமிழ் சினிமா போல கடைசியில் கட்டுரையின் தலைப்புக்கு ஏற்றது போல அமைந்து விட்டது என்று நினைக்கிறேன். எல்லோரும் இறைவன் காலடியில் தங்கள் எண்ணத்தை சமர்ப்பிக்க நான் மட்டும் எனது செருப்பிடம் சமர்ப்பித்து விட்டு நின்று கொண்டு இருந்தேன்.

பிரகாரம் சுற்றும் பொழுதும், தாயார் சன்னதியில் அபிசேக அலங்காரம் பார்க்கும் பொழுதும் மீண்டும் மீண்டும் அதே கவிதை. குணாவில் கமல் சொல்வது போல் "கவித, கவித".

செருப்பு தொலைந்து போனால் நல்லது தரித்திரம் போய் விடும் என்று எப்போலுதோ எங்க அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அப்படி செருப்பு தொலைந்து எனது கடன் எல்லாத்தையும் (ஏ அப்பா எவ்வளவு பேராசை) நெல்லை அப்பர் தீர்த்து விடுவது போலவும் ஒரு நினைப்பு (நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும் என்பது சரிதான்)

இது போல் எந்த அதிசியமும் நடக்காமல் எனது செருப்பு விட்ட இடத்தில மிக பத்திரமாக இருந்தது. அதை விட அங்கு நின்று கொண்டு இருந்த செருப்பில்லாத மனிதர் " என்ன சார் திருப்தியா தரிசனம் பார்த்திங்களா? மஹா சிவராத்திரி இல்லையா அதனாலே ஈஸ்வர தரிசனம் ரொம்ப நல்லது" என்றார்.

ஓம் நமசிவாய

No comments:

Post a Comment

Followers