11 March 2011

படைத்தது -3

சூடிய பூ சூடற்கவும் கூட்ஸ் வண்டியும்

சாகித்திய அகாடமி பரிசு பெற்ற சிறுகதை தொகுப்பு. சனவரி மாதம் நடந்த புத்தக சந்தையில் எனது நண்பன் சரவணன் வாங்கி கொடுத்தது. ஏற்கனவே இரண்டு புத்தகங்கள் படித்து கொண்டு இருந்த காரணத்தினால் இதனை உடனே படிக்க இயலவில்லை.

சரவணனும் நிதமும் "என்ன படித்தாகி விட்டதா " என்று கேட்டு கொண்டே இருந்தான். நானும் ப்ரன்சிஸ் கிருபா எழுதிய " கன்னி " நாவலை ஒரு வழியாக முடித்து இருந்தேன். அதனால் இதனை படித்து விடுவோம் என்று தாம்பரம் ரயில் நிலையத்தில் "மலைகோட்டை விரைவு வண்டிக்கு " காத்திருந்த போது படிக்க ஆரம்பித்தேன்.

முதல் இரண்டு கதைகள் படித்து இருந்த பொழுது ஒரு சரக்கு ரயில் - கூட்ஸ் வண்டி வந்தது. கதையின் வீச்சினை உள்வாங்கி கொண்டு இருந்த வேளையில் கூட்ஸ் வண்டி வந்து நடை மேடை முழுவதையும் அடைத்து கொண்டு நின்றது.

நான் படித்த இரண்டு கதைகளிலும் ரயில் வண்டி வந்து இருந்தது. அதே தாக்கத்தில் இருக்கும் பொழுது வந்த கூட்ஸ் வண்டி அதன் பங்கிற்கு எனது சிந்தனையில் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியது.

இரவு 11 மணி அளவில் கூட்ஸ் வண்டி மெதுவாக ரயில் நிலையத்தை கடந்தது. அந்த வண்டியின் கார்டு (GUARD) என்ன செய்வார் என்று ஒரு சந்தேகம். ஒட்டுனர்க்காவது வேலை இருக்கும் ஒரு சலிப்பு தட்டாது ஆனால் கார்ட்க்கு எப்படி இருக்கும். ரயில் நிலையங்களில் கொடி காட்டுவதை தவிர வேறு எதுவும் வேலை இருப்பது போல் தெரியவில்லை.

திடுமென்று ஒரு எண்ணம் நமக்கு இந்த வேலை கிடைத்து இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்து இருக்கும். நாம் விரும்பிய புத்தகங்களை எல்லாம் மிக சுலபமாக படித்து விடலாமே என்று தோன்றியது. சுமார் 25 வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு புத்தகங்கள் வாங்க பணம் இருக்காது அதனால் கிண்டி ரயில் நிலைய வாசலில் ஒருவர் பழைய புத்தகங்கள் விற்பார். அவரிடம் வாங்கி படித்து விட்டு மீண்டும் விற்று விடுவோம்.

இன்றைக்கு லேன்ட் மார்க், ஒடிசி, ஹிகின் பாதம்ஸ் என்றுதான் புத்தகங்கள் வாங்குகிறோம் ஆனால் அமைதியாக படிக்ககூடிய நேரம் அமைவது இல்லை. இப்போ கூட்ஸ் வண்டி கார்டாக போய் இருந்தால் நிறைய படிக்கலாமே என்று ஒரு எண்ணம். மனம் ஒரு குரங்கு என்பது சரியாகதான் இருக்கிறது. இக்கரைக்கு அககரை பச்சை. அவரை கேட்டால் என்ன சொல்வார் என்று தெரியவில்லை.

ஆனால் "மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கவில்லை " என்று வைரமுத்து முதல் மரியாதை படத்தில் ஒரு பாடலில் எழுதி இருப்பார். அது போல்தான் ஆகி விட்டது. இன்று ஏக பட்ட புத்தங்கங்கள் வாங்கப்பட்டு இன்னும் படிக்கப்படாமல் இருக்கிறது. தெரு வழியே போகும் போது புத்தக கடைகளை பார்க்கும் பொழுதும், புத்தகங்கள் பற்றிய விமர்சன கட்டுரைகள் படிக்கும் பொழுதும் ஒரு குற்ற உணர்வா அல்லது கழிவிரக்கமா என்று தெரியவில்லை ஏதோ வந்து தாக்குகிறது.

முன்பு நாங்கள் (நான், சரவணன், கண்ணன் ) சேர்ந்தால் புத்தகங்கள், கவிதைகள், திரைப்படங்கள் என்று பேசி கொண்டு இருப்போம். பெருவாரியான நேரங்களில் படித்த புத்தகங்களின் விமர்சன பகிர்வே பிரதானமாக இருக்கும். ஆனால் இன்று சந்தை நிலவரம், டார்கெட், என்று தான் உள்ளது.

நானும் சரவணனும் மிக கார சாரமாக பேசி கொண்டு இருக்கும் பொழுது கண்ணன் எங்களுக்கு சுவையான ஆம்லேட் போட்டு கொடுத்து இலக்கிய பணி ஆற்றுவான். அதே கடல் கரையில் என்றால் மிளகாய் பச்ஜி வாங்கி வருவான். எவ்வளவோ நாட்கள் விடிய விடிய பேசி விட்டு விடிந்த்து கடைக்கு சென்று தேநீர் அருந்தி விட்டு வந்து தூங்குவோம்.

நான் என்ன யோசித்து கொண்டு இருக்கிறேன்!!!!!

இப்பொழுதெல்லாம் இப்படித்தான் ஆகிவிடுகிறது. கிளை கிளையாக பிரிந்து செல்லும் வண்டி பாதை போல ஏதாவது ஒரு சிந்தனை எங்கோ அழைத்து சென்று விடுகிறது. குதிரைக்கு கண் பட்டை கட்டி அதன் பார்வையை மறைப்பது போல மனத்திரை கட்டி எண்ண ஓட்டங்களை கட்ட வேண்டும் போல. அதுதான் எப்படி என்று தெரியவில்லை.

சூடிய பூ சூடற்க விரித்த வாக்கில் இருக்க என் மன பிசாசோ மரம் விட்டு மரம் தாவ போய் விட்டது ஒரு கூட்ஸ் வண்டியால்.

நான் செல்ல வேண்டிய ரயிலும் வந்து விட்டதால் நாஞ்சில் நாடனை நாளை இரவு பார்த்து கொள்வோம் என்று ஏறி படுக்கையை விரித்து படுத்து விட்டேன். போர்வையை மேலே இழுத்து விட்டுகொள்ளும் போது ஒரு யோசனை, கூட்ஸ் வண்டி கார்டு வேலைக்கு போய் இருந்தால் இப்படி குளிர்பதன (A/C) பெட்டியில் போக முடியாதே என்று.

ஆமாம் கூட்ஸ் வண்டி கார்டு எப்படி தூங்குவார் ?

மன பிசாசே என்னை தூங்க விடு நீ பாட்டுக்கு மரம் விட்டு மரம் தாவ , நான் விடிய விடிய யோசித்து கொண்டு உட்கார மாதிரி வைத்து விடாதே!!!!!!!!!!!

நல்லிரவு.



04 March 2011

பார்த்தது - 16

சீடன்

நடிகர்கள்: கிருஷ்ணா (அறிமுகம்), அனன்யா (நாடோடிகள் புகழ் ), சுஹாசினி, விவேக், செம்மீன் ஷீலா, மீரா கிருஷ்ணன், இளவரசு, பொன்வண்ணன் and சிறப்பான தோற்றத்தில் தனுஷ்.

இசை: தீனா (50 வது படம்)

இயக்கம்: சுப்ரமணியம் சிவா.

தயாரிப்பு: மித் புரொடக்ஸன்ஸ் R. மோகன் .

கதை: ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண் மஹா என்ற மகாலட்சுமி (அனன்யா). அவர் ஒரு தீவிரமான முருக பக்தை. (ஒரிஜினலில் கிருஷ்ண பக்தை என்று ஞாபகம்). அவருக்கு ஒரு கனவு வருகிறது. அதில் ஒரு உருவம் வந்து மாலை சூடுகிறது.

இரண்டொரு நாட்களில் அந்த உருவம் அந்த குடும்பத்தின் பேரனாக உள்ளே வருகிறார்(கிருஷ்ணா). அவரும் மகாவை விரும்புகிறார். கிருஷ்ணாவின் தாயார் தங்கம் (சுஹாசினி) வேறு ஒரு பெண்ணை பார்த்து பையனுக்கு ஏற்பாடு செய்கிறார். குழப்பத்தில் தவிக்கும் மகாவிற்கு உதவி செய்ய மடப்பள்ளி சரவணன் (தனுஷ்) என்று அந்த பழனி மலை முருகனே வருகிறார். எந்த ஒரு கிராபிக்ஸ் கலக்களும் இல்லாமல் அவர் காதலர்களை சேர்த்து வைக்கிறார்.

தெளிந்த நீரோடை போல் கதை ஆரம்பத்தில் இருந்து போகிறது. ஆனால் கிருஷ்ணாவிற்கு எப்படி? ஏன் ? காதல் வந்தது என்பதற்கு அழுத்தமான காட்சிகள் இல்லை. ஏதோ மஹாவை காதலிக்கவே அவர் பழனி வந்தது போல் உள்ளது. நகைசுவை பகுதியை விவேக் பார்த்து கொள்கிறார். ஒன்றும் பெரிதாக சோபிக்கவில்லை.

பாடல்கள் சுமார் ரகம்.

அனன்யா படத்தில் மிக சிறப்பாக நடித்து உள்ளார். நாடோடிகளில் கிடைத்த பெயரை இதில் தக்க வைத்து உள்ளார். தனுஷ் - ஒவ்வொரு படத்திலையும் அவருடைய performance அருமையாக அமைகிறது. ஆடுகளம் ஒரு தளத்தில் என்றால் மடப்பள்ளி சரவணன் வேறு தளத்தில் நிற்கிறார்.

"நந்தவனம்" அல்லது "நந்தனம்" என்று நினைவு. சுமார் 10 வருடங்களுக்கு முன்னால் மலையாளத்தில் நவ்யா நாயர் நடித்து பார்த்த ஞாபகம்.

கலியுக கண்ணன், உருவங்கள் மாறலாம் போன்ற "சமுக கதையில் பக்தி பரவசம்" என்ற பார்முலாவில் வந்துள்ள படம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்கள் எப்படி ஏற்று கொள்வார்கள் என்பதுதான் மிக பெரிய சந்தேகம். ஒரு இருபது வருடத்திற்கு முன்பு வந்து இருந்தால் மாபெரும் வெற்றி அடைந்திருக்க கூடிய படம்.

ஒரு ஆபாச கட்சி இல்லை. எங்கும் ஜடாமுடியுடன் வில்லனின் அடியாட்கள் சுமோ காரில் உருட்டு கட்டையை வீசி செல்லவில்லை. ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தவில்லை என்று பல நல்ல விஷயங்கள் நிறைந்த படம்.

எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது. ஆனால் அதே போல் நிறைகளும் எதுவும் இல்லை. காதலர்கள் ஒன்று சேரும் போது நமக்கு சந்தோசமோ துக்கமோ எதுவும் ஏற்படவில்லை. காரணம் காட்சிகளை மிக அழுத்தமாக அமைக்காததுதான்.

சீடனுக்கு நல்ல குருநாதர் அமையவில்லை.

03 March 2011

படைத்தது -2

கடவுள் தரிசனமும் புது செருப்பும்.

ரொம்ப நாள் கழித்து திருநெல்வேலி பயணம். ஒவ்வொரு முறையும் முடிந்த அளவு நெல்லை அப்பரை போய் பார்த்து விட்டு வருவதை ஒரு பழக்கமாக வைத்து உள்ளேன்.

அது பக்தி காரணமாகவா என்றால் எனக்கு சொல்ல தெரியவில்லை. நானும் பல ஊர்களுக்கு என் வேலையின் நிமித்தமாக போய் வந்தாலும் எந்த ஊரிலும் கோவில்களை தேடி போவதில்லை. இன்னும் சொல்ல போனால் என்னை போல் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் காலை நேரங்களில் கண்டிப்பாக அந்த ஊரின் பிரசித்தி பெற்ற கோவிலுக்கும், மாலையில் அருமையான bar யை தேடி செல்வது வழக்கம்.

ஆனால் நெல்லை போனால் மட்டும் எப்படியாவது கோவிலுக்கு போய் விடுவேன். ஒவ்வொரு முறையும் அதன் பிரமாண்டம் என்னை பிரமிக்க வைத்து கொண்டே உள்ளது. ஒரு கட்டுமான பொறியாளாரா (Civil Engineer) நான் வியக்கும் விஷயம். பொதுவாக எல்லோரும் சொல்வார்கள் " எந்தவொரு தொழில் நுட்ப அறிவும் இல்லாமல் எப்படி கட்டினார்கள்" என்று.

என்னை பொறுத்த வரையில் நமது தமிழர்கள் கட்டிட கலையில் மிக பெரிய திறமையுடன் இருந்து உள்ளார்கள். ஆனால் அதனை ஆவண படுத்தவோ அல்லது அடுத்த தலைமுறைக்கு கற்று கொடுக்கவோ இல்லை. நாம் மேற்கு நாட்டவரிடம் கடன் வாங்கிய அறிவை கொண்டு பொழப்பை நடத்தி வருகிறோம்.

இன்றைக்கு எல்லா மருத்துவர்களும் சொல்வது நடை பயிற்சிதான். நெல்லைஅப்பர் கோவில் பிரகாரத்தை மூன்று முறை சுற்றி வந்தாலே போதும் வேறு எந்த பயிற்சியும் தேவை இல்லை. அங்கு நிலவும் ஒரு அமைதி போதும் மன அழுத்தத்தை குறைக்க. So BP மாத்திரைகளையும் தூக்கி போட்டு விடலாம்.

எவ்வளோவோ நல்ல விசயங்களை நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்று இருக்கிறார்கள், ஆனால் நாமோ நமது கலாச்சாரத்தை மறந்து விட்டு அலைந்து கொண்டு உள்ளோம். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில நிம்மதியை தேடி அலைகின்றாய் என்றும் சொல்லி உள்ளார்கள்.

இப்பொழுது நான் கோவிலுக்கு போன கதைக்கு வருவோம். எப்பொழுது கோவிலுக்கு போனாலும் செருப்பை பத்திரமாக "காலணி பாதுகாக்குமிடம்" என்று பலகை தொங்குமிடத்தில் பத்திரமாக வைத்து விட்டு தான் போவேன். இந்த முறையும் அவ்வாறு விட போனால் அங்கே ஆட்கள் யாரும் இல்லை. முன்பு செருப்பு வைத்து பாதுகாக்க காசு கொடுக்க வேண்டும், அதனால் ஆட்கள் எப்பொழுதும் இருப்பார்கள். ஆனால் ஜெயலலிதா முதல்வராக இருந்த பொழுது அதனை இலவசமாக பாதுகாக்க வேண்டும் என்று மாற்றி விட்டார். அதனால் யாரும் பொறுப்பாக இருப்பது கிடையாது.

இப்பொழுது நான் கோவிலுக்கு போவதா அல்லது பாதுகாக்கும் ஆள் வரும் வரை காத்திருப்பதா??? பெரும் குழப்பமாகி விட்டது. பக்கத்தில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார், அவர் "சும்மா விட்டுட்டு போங்க சார் யார் எடுக்க போகிறார்கள்" என்று சொன்னார். யதார்தமாக அவர் காலை பார்த்தால் செருப்பு ஏதும் அணிந்திருக்கவில்லை. வடிவேலு பாணியில் நம்ம செருப்பை ஆட்டையை போட ஐடியா பண்றானோ ஒரு குரல் வேறு கேட்டது.

சரி என்ன ஆனாலும் பரவாயில்லை, நாம கோவிலுக்குள் போவோம் என்று செருப்பை விட்டு விட்டு சன்னிதானத்தை நோக்கி சென்றேன். போகும் வழியில் எப்பொழுதோ படித்த ஒரு கவிதை நினைவுக்கு வந்தது.

தீபாரதனை காட்டும் பொழுது
வாசலில்
விட்ட செருப்பு

யார் எழுதியது என்பது மறந்து விட்டது ஆனால் கவிதை மட்டும் மறக்கவில்லை. சரியாக ஈசனுக்கு தீபாராதனை காட்டும் பொழுது மீண்டும் நினைவுக்கு வந்து விட்டது.

தமிழ் சினிமா போல கடைசியில் கட்டுரையின் தலைப்புக்கு ஏற்றது போல அமைந்து விட்டது என்று நினைக்கிறேன். எல்லோரும் இறைவன் காலடியில் தங்கள் எண்ணத்தை சமர்ப்பிக்க நான் மட்டும் எனது செருப்பிடம் சமர்ப்பித்து விட்டு நின்று கொண்டு இருந்தேன்.

பிரகாரம் சுற்றும் பொழுதும், தாயார் சன்னதியில் அபிசேக அலங்காரம் பார்க்கும் பொழுதும் மீண்டும் மீண்டும் அதே கவிதை. குணாவில் கமல் சொல்வது போல் "கவித, கவித".

செருப்பு தொலைந்து போனால் நல்லது தரித்திரம் போய் விடும் என்று எப்போலுதோ எங்க அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அப்படி செருப்பு தொலைந்து எனது கடன் எல்லாத்தையும் (ஏ அப்பா எவ்வளவு பேராசை) நெல்லை அப்பர் தீர்த்து விடுவது போலவும் ஒரு நினைப்பு (நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும் என்பது சரிதான்)

இது போல் எந்த அதிசியமும் நடக்காமல் எனது செருப்பு விட்ட இடத்தில மிக பத்திரமாக இருந்தது. அதை விட அங்கு நின்று கொண்டு இருந்த செருப்பில்லாத மனிதர் " என்ன சார் திருப்தியா தரிசனம் பார்த்திங்களா? மஹா சிவராத்திரி இல்லையா அதனாலே ஈஸ்வர தரிசனம் ரொம்ப நல்லது" என்றார்.

ஓம் நமசிவாய

Followers