19 February 2011

படைத்தது -1

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது !!!!????

பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது என்று சொல்வார்கள். அப்படியான புதனில் நமது பிரதமர் அவர்கள் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு ஒரு சிறப்பு பேட்டி தருகிறார் என்றதும் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு உட்காரும் போதே எனது மனைவி சொன்னார். "வேறு உருப்படியான வேலை எதுவும் இல்லையா என்று? மனைவி சொல்லே மந்திரம் என்பது நமக்கு எப்போதும் உடனே உரைக்காது என்பது பல விசயங்களில் நிரூபணம் ஆனது போல இதிலும் ஆனது.

மொத்த பேட்டியிலும் எங்காவது ஒரு இடத்திலாவது தலை நிமிர்ந்து பேசுவது போல் பேசுவாரா என்று பார்த்து ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். மொத்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நமக்கே ஒருவிதமான ஆயாசமும் அலுப்பும்தான் மிஞ்சியது.

ஒரு இயலாத மனிதரின் புலம்பலாகவே இருந்தது. பலிஆடுகளை தேடியும், தன் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்ல உப்பு சப்பில்லாத காரணங்களை அடுக்கியும் கூட்டத்தை நிறைவு செய்தால் போதும் என்ற அளவிலேயே நடந்தது. உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் தனது அமைச்சர்களை தீர்மானிக்கும் உரிமைகூட இல்லை என்று பொலம்புவதை கேட்கும்போது நமது நிலைமையே தேவலாமோ என்று தோன்றுகிறது.

இந்த இடத்தில எனக்கு ஒரு சந்தேகம் - Suppose ஒரு கூட்டணி கட்சி ஒரு தீவிரவாதியை தனது கட்சி சார்பான அமைச்சர் என்று சொன்னால் அதற்கும் ஒப்புக்கொள்வாரா நமது பிரதமர்????

ஒரு அமைச்சரவையை தீர்மானிக்கும் உரிமைகூட இல்லை என்றால் அவர் சொல்லகூடிய "இன்னும் நெறைய வேலைகள் இருக்கு நான் முடிக்க அதனால் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்பதற்கு என்ன அர்த்தம். இவர் சொல்வதை கேட்காதவர்களை வைத்துகொண்டு இன்னும் என்ன வேலையை செய்ய போகிறார்????

இத்தனைக்கும் எல்லா நிருபர்களும் மிகவும் தன்மையாகவே கேள்விகள் கேட்டார்களே ஒழிய , யாரும் எப்படியாவது இந்த கலந்து உரையாடலின் முடிவில் பிரதமரை சிக்கலில் ஆழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கேள்வி கேட்டதுபோல் இல்லை.

இதை எல்லாம் விட கொடுமை "தேவாஸ்" பற்றிய விளக்கம். ஸ்பெக்ட்ரம் தான் அவரது இலாகா இல்லை, ஆனால் இஸ்ரோ அவரது நேரடி கண்காணிப்பில் தானே வருகிறது. அது சம்பந்தபட்ட கேள்விகளுக்கு கூட யாரோ எழுதி கொடுத்ததை தான் படித்தார்.

ஏழைகளுக்கு கொடுக்கும் மான்யங்கள் கூட 2G யையும் ஒப்பிட்டு, பிரதமர் (அதுவும் ஒரு பொருளாதார புலி என்று உலக தலைவர்களால் பாராடப்பட்ட ஒருவர்) பேசியது அபத்தத்தின் உச்சம். இதில் எந்த ஏழை பலன் அடைந்து இருக்கிறார்??? ஒருவேளை உலக பணக்காரர் வரிசையில் "கடைசியாக" இருக்கும் ஏழைகள் பலன் அடைந்தது பற்றி இருக்குமோ!!!!!

இந்தியா ஊழல் மலிந்த நாடு என்று ஊடகங்கள் சொல்வது போல இல்லை என்று சொன்னதுதான் இந்த வருடத்தின் மிக பெரிய நகைச்சுவை. அனேகமாக இதே போல் தொடர்ந்தால் நாம் 2020 ல் வல்லரசு ஆவோம் என்று அப்துல் கலாம் சொன்னது நடக்காது...... ஆனால் உலகிலேயே அதிக ஊழல்கள் செய்யப்பட்டது திருமிகு. மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சியிலேதான் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய அளவில் ஆகி விடும் என்பது மட்டும் உறுதி.

சரித்திரம் தன்னை எப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை திருமிகு. மன்மோகன் சிங் தீர்மானிக்க வேண்டிய நேரமிது.

No comments:

Post a Comment

Followers