23 February 2011

பார்த்தது - 15

நடுநிசி நாய்கள்

நடிகர்கள்: வீரா, சமீரா ரெட்டி, சமந்தா மற்றும் நான்கு நாய்கள்.
ஒளிபதிவு : மனோஜ் பரமஹம்ஷா
எடிட்டிங்: ஆண்டனி
கதை, திரைகதை, வசனம், இயக்கம் : கெளதம் வாசுதேவ் மேனன்.

6.30 க்கு ஆரம்பித்து 8.30 க்கு படம் முடிந்து விட்டது. ரொம்ப சந்தோஷமான விஷயம். பலவீனமானவர்களுக்கு இல்லை என்று படத்தின் விளம்பரம் சொல்லுகிறது.
உண்மைதான் திருச்சி கலைஅரங்கம் திரைஅரங்கில் 90 ரூபாய் பணத்தையும் கொடுத்து A/C இல்லாமல் புழுங்கி உட்கார்ந்து இருக்கும் போது ஒரு விளங்காத படம் பார்க்கவேண்டி இருந்தால் பலவீனமானவர்கள் இறந்து போகவும் வாயப்பு உண்டு.
கெளதம் உங்களால் இவ்வளவு மோசமாகவும் படம் எடுக்க தெரியுமா?

19 February 2011

படைத்தது -1

என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது !!!!????

பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது என்று சொல்வார்கள். அப்படியான புதனில் நமது பிரதமர் அவர்கள் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு ஒரு சிறப்பு பேட்டி தருகிறார் என்றதும் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு உட்காரும் போதே எனது மனைவி சொன்னார். "வேறு உருப்படியான வேலை எதுவும் இல்லையா என்று? மனைவி சொல்லே மந்திரம் என்பது நமக்கு எப்போதும் உடனே உரைக்காது என்பது பல விசயங்களில் நிரூபணம் ஆனது போல இதிலும் ஆனது.

மொத்த பேட்டியிலும் எங்காவது ஒரு இடத்திலாவது தலை நிமிர்ந்து பேசுவது போல் பேசுவாரா என்று பார்த்து ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம். மொத்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நமக்கே ஒருவிதமான ஆயாசமும் அலுப்பும்தான் மிஞ்சியது.

ஒரு இயலாத மனிதரின் புலம்பலாகவே இருந்தது. பலிஆடுகளை தேடியும், தன் மீது எந்த தவறும் இல்லை என்று சொல்ல உப்பு சப்பில்லாத காரணங்களை அடுக்கியும் கூட்டத்தை நிறைவு செய்தால் போதும் என்ற அளவிலேயே நடந்தது. உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் தனது அமைச்சர்களை தீர்மானிக்கும் உரிமைகூட இல்லை என்று பொலம்புவதை கேட்கும்போது நமது நிலைமையே தேவலாமோ என்று தோன்றுகிறது.

இந்த இடத்தில எனக்கு ஒரு சந்தேகம் - Suppose ஒரு கூட்டணி கட்சி ஒரு தீவிரவாதியை தனது கட்சி சார்பான அமைச்சர் என்று சொன்னால் அதற்கும் ஒப்புக்கொள்வாரா நமது பிரதமர்????

ஒரு அமைச்சரவையை தீர்மானிக்கும் உரிமைகூட இல்லை என்றால் அவர் சொல்லகூடிய "இன்னும் நெறைய வேலைகள் இருக்கு நான் முடிக்க அதனால் ராஜினாமா என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என்பதற்கு என்ன அர்த்தம். இவர் சொல்வதை கேட்காதவர்களை வைத்துகொண்டு இன்னும் என்ன வேலையை செய்ய போகிறார்????

இத்தனைக்கும் எல்லா நிருபர்களும் மிகவும் தன்மையாகவே கேள்விகள் கேட்டார்களே ஒழிய , யாரும் எப்படியாவது இந்த கலந்து உரையாடலின் முடிவில் பிரதமரை சிக்கலில் ஆழ்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் கேள்வி கேட்டதுபோல் இல்லை.

இதை எல்லாம் விட கொடுமை "தேவாஸ்" பற்றிய விளக்கம். ஸ்பெக்ட்ரம் தான் அவரது இலாகா இல்லை, ஆனால் இஸ்ரோ அவரது நேரடி கண்காணிப்பில் தானே வருகிறது. அது சம்பந்தபட்ட கேள்விகளுக்கு கூட யாரோ எழுதி கொடுத்ததை தான் படித்தார்.

ஏழைகளுக்கு கொடுக்கும் மான்யங்கள் கூட 2G யையும் ஒப்பிட்டு, பிரதமர் (அதுவும் ஒரு பொருளாதார புலி என்று உலக தலைவர்களால் பாராடப்பட்ட ஒருவர்) பேசியது அபத்தத்தின் உச்சம். இதில் எந்த ஏழை பலன் அடைந்து இருக்கிறார்??? ஒருவேளை உலக பணக்காரர் வரிசையில் "கடைசியாக" இருக்கும் ஏழைகள் பலன் அடைந்தது பற்றி இருக்குமோ!!!!!

இந்தியா ஊழல் மலிந்த நாடு என்று ஊடகங்கள் சொல்வது போல இல்லை என்று சொன்னதுதான் இந்த வருடத்தின் மிக பெரிய நகைச்சுவை. அனேகமாக இதே போல் தொடர்ந்தால் நாம் 2020 ல் வல்லரசு ஆவோம் என்று அப்துல் கலாம் சொன்னது நடக்காது...... ஆனால் உலகிலேயே அதிக ஊழல்கள் செய்யப்பட்டது திருமிகு. மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சியிலேதான் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறக்கூடிய அளவில் ஆகி விடும் என்பது மட்டும் உறுதி.

சரித்திரம் தன்னை எப்படி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பதை திருமிகு. மன்மோகன் சிங் தீர்மானிக்க வேண்டிய நேரமிது.

13 February 2011

பார்த்தது - 14

தம்பிகோட்டை

நடிகர்கள்: நரேன், பூனம் பஜ்வா, மீனா, சந்தானம், சங்கீதா, கஞ்சா கருப்பு மற்றும் இளையதிலகம் பிரபு.
இசை: D. இமான்
பாடல்கள்: விவேகா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: R. அம்மு சுரேஷ்
தயாரிப்பு: ராஜேஸ்வரி பிலிம்ஸ் - R.K. சுரேஷ்.

கதை: சென்னையில் வசிக்கும் அன்பான அக்கா பிரியா (மீனா) தம்பி அழகிரி (நரேன்). கல்லூரியில் ஆசிரியர் ஆக பிரியா வேலை பார்க்கிறார், அவரது தம்பி உடற்கல்வி கல்லூரியில் படிக்கிறார். பிரியாவிற்கு தம்பி பொறியாளர் ஆக வேண்டும் என்று ஆசை. காரணம் ஒரு பிளாஷ் பேக்.

தம்பிகோட்டை என்ற ஊரில் அன்பானா அப்பாவாகவும், ஒரு நல்ல கணவராகவும், நல்ல மனிதனாகவும் வாழ்ந்து வருகிறார் சண்முகம் (பிரபு). அவர் வேலை பார்க்கும் அமிர்தலிங்கம் பஸ் கம்பெனியின் முதலாளி (நான் கடவுள் ராஜேந்திரன்) ஒரு தாதா போல் இருக்கிறார். பேருந்துகளை சரியான முறையில் பராமரிக்காமல் விபத்துகள் நடக்கிறது. அதனை தட்டி கேட்ட பிரபுவை அவர் கொலை செய்து விடுகிறார்.

NSS கேம்பிற்கு தம்பிகோட்டை வரும் நரேன் இது எதுவும் தெரியாமல் அவர் மகள் கனகாவை (பூனம் பஜ்வா) காதலிக்கிறார். பின்பு வழக்கம் போல சுபம்தான்.

தமிழ் சினிமாவிற்கு உண்டான அனைத்து இலக்கண, இலக்கியங்களை மீறாத ஒரு படம். தமிழ் ஆசிரியர் என்பவர் குடுமியுடன்தான் இருக்க வேண்டும் என்று யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. இந்த காலத்தில் புரோகிதம் செய்யும்
பிராமணர்கள் கூட குடுமி வைத்து கொள்வது கிடையாது. ஆசிரியரை எதிர்த்து பேசும் மாணவர்கள், எவ்வளவு பிரச்சினைகள் நடந்தாலும் எட்டி பார்க்காத போலீஸ் என்று அத்தனையும் இதில் இருக்கிறது. இயகுனர்க்கு இப்படி ஒரு கற்பனை பஞ்சம் வந்திருக்க தேவை இல்லை.

"அஞ்சாதே" படத்திற்கு பிறகு நரேன் காத்திருந்து ஒப்புக்கொண்ட படம். இன்னும் கொஞ்சம் நல்ல படமாக தேர்வு செய்து இருக்கலாம். ஒரு நல்ல நடிகர் தன்னை வீணாக்கி கொள்ள கூடாது.

பிரபு, கஞ்சா கருப்பு, நான் கடவுள் ராஜேந்திரன், என அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து செய்து இருக்கிறார்கள். இதில் மீனாதான் ரொம்ப fresh ஆக இருக்கிறார். lady don ஆக வரும் சங்கீதா மிக நன்றாக செய்து இருக்கிறார். அப்படி யாரும் இருக்கமுடியுமா என்று தெரியவில்லை ஆனால் கொஞ்ச நேரமே வந்தாலும் அவர் இருக்கும் காட்சிகளில் பிரமாதம் என்று சொல்லகூடிய அளவிற்கு நடித்து உள்ளார். "மன்மதன் அன்புவிற்கு" பிறகு இதுவும் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தரும். ஆனால் விளங்காத ஒரு படத்திற்கு இவ்வளவு சிரமம் எடுத்து நடித்திருக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி?

சந்தானம், M.S. பாஸ்கர் கூட்டணி நகைசுவைக்கான பொறுப்பை எடுத்து கொண்டு உள்ளது. சந்தானம் - பழைய கவுண்டமணி styleயை அப்படியே காப்பி அடித்து இருக்கிறார்.

மொத்தத்தில் தம்பிகோட்டை - தகர கோட்டை

பார்த்தது -13

தி மெக்கானிக் (The Mechanic)

நடிகர்கள்: சாசன் சேத்தம் (Jason Statham) , பென் பாஸ்டர் (Ben Foster) மற்றும் பலர்.
இயக்கம்: சைமன் வெஸ்ட் (Simon West)

Con Air, Tomb Raider போன்ற படங்களின் இயக்குனரும், Transporter புகழ் கதாநாயகனும் சேர்ந்து உருவாக்கிய படம்.

ஆர்தர் பிஷப் (Jason Statham) ஒரு தொழில் முறை கொலைகாரன். எந்த ஒரு தடயம் இல்லாமல் கொலை செய்வதிலும், கொலைகள் இயற்கை மரணம் அல்லது விபத்து என்று உருவாக்குவதிலும் மிக திறமை ஆனவன். The Italian Job புகழ் டேவிட் சோதெர்லாந்து (David Sutherland) தான் ஆர்தரின் குரு ஹாரி. இவர்களின் தலைவன் டீன் (Tony Goldwyn). நன்றாக போய் aகொண்டிருந்த வாழ்கையில் ஆர்தருக்கு ஒரு பிரச்னை. அவரது குரு ஹாரியையே கொல்ல வேண்டிய நிர்பந்தம்.

அதன் பிறகு ஹாரியின் பையன் ஸ்டிவ் (Ben Foster) வந்து சேருகிறான். அவனுக்கு தன் தந்தையை கொன்றது ஆர்தர்தான் என்று தெரிய வருகிறது. அதன் பின்பு நடக்கும் பிரச்சனைகளும், இறுதியாக எல்லோரையும் கொன்றுவிட்டு ஆர்தர் மட்டும் தப்பித்து செல்வதுபோல் படம் முடிகிறது.

அதே இறுகிய முக தோற்றத்துடன் Jason. Ben Foster (X Men புகழ்) வந்த பிறகு கதை கொஞ்சம் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் மாறுகிறது. மொத்தமாக பார்த்தால் பரவாயில்லை என்றுதான் சொல்ல
முடியுமே தவிர சூப்பர் என்று சொல்ல முடியாது.

11 February 2011

பார்த்தது -12


இளைஞன்

கலைஞர் அவர்களின் கதை வசனத்தில் வந்துள்ள 75 வது படம். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு 50 வது படம். பா.விஜய்க்கு இரண்டாவது படம் என்று பல மைல் கற்கள் கொண்ட ஒரு படம்.

"பாலைவன ரோஜாக்கள்" காலத்திருக்கு பிறகே நான் கலைஞரின் படங்களை அவ்வளவாக விரும்பி பார்ப்பது இல்லை. அதுவும் கண்ணம்மா என்று ஒரு படத்தினை பார்த்த பிறகு, திரை அரங்கில் மட்டும் அல்லாமல் வீட்டில் கூட தொலை காட்சியுளும் பார்ப்பது இல்லை.

படங்களில் சுவாரசியம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க, அவருடைய அரசியல் நடவடிக்கைகள் மேல் உருவான வெறுப்பும் படங்கள் பார்க்காமல் விட்டதற்கு ஒரு காரணம்.

ஆனால் என் அப்பா இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று மிக ஆர்வமாய் இருந்தார். கலைஞரின் எல்லா படங்களையும் ரிலீஸ் அன்றே பார்த்து விடுவேன் இதையும் பார்த்து விட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் இறைவனின் எண்ணம் வேறாக இருந்து விட்டது. கடந்த 9 ம் தேதி இறைவனடி சேர்ந்து விட்டார். எனவே அவருக்கு ஆனா 30 நாள் தேவைகள் முடிந்த பிறகு அவர் நினைவாக இந்த படத்தை பார்க்க சென்று இருந்தேன்.

படம் மிகவும் பிரமாண்டமாய் எடுக்க பட்டு இருக்கிறது. திரு மார்டின் அவர்கள் குலுக்கல் சீட்டில் சம்பாதித்தை குலுக்கி விட்டு இருக்கிறார். சுரேஷ் கிருஷ்ணாவின் அனுபவமிக்க இயக்கம் நன்றாகவே இருக்கிறது. ஆனால் அரத பழைய கதை. 1955 நடப்பதாக சொல்லபடுகிறது. ஒரு ரஷ்ய கதையை தழுவி தொழிலாள வர்க்க போராட்டதினை சொன்னதற்கு பதிலாக கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் நடந்த வெண்மணி கதையினை எடுத்து இருக்கலாம்.

அந்த கால மனோகரா போல் விஜயும் கைகள் கட்டப்பட்ட நிலையில் வசனம் பேசுகிறார். இறுதி கட்டத்தில் பொருத்தது போதும் கார்கி பொங்கி எழு என்று குஷ்பு சொல்கிறார். ஆனால் அதில் ஜீவனே இல்லை என்பதுதான் இந்த நவீன மனோகராவின் சோகம்.

இந்த படத்தில் ஒரு விசேசம் வில்லனின் பெயர் "ராஜநாயகம் " பொதுவாக நாகலிங்கம், ஆலகாலன் என்றுதான் வில்லனின் பெயரை கலைஞர் வைப்பார். ஆனால் இதில் ராஜநாயகம் என்று வைத்தது ராஜபக்ஷேவை நினைத்து என்றா தெரியவில்லை. நிஜத்தில்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை atleast படத்திலாவது திட்டி தீர்ப்போம் என்று நினைத்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

ஒளிப்பதிவு, இசை இரண்டும் படத்திருக்கு மிக பெரிய பலம். நமீதா, வடிவேலு, ரம்யா, மீரா ஜாஸ்மின், நாசர், என்று அனைவரும் மிக அருமையாக நடித்து இருக்கிறார்கள். அனல் பறக்கும் வசனங்கள் ஆனால் அவை தன்னையே சுட்டி காட்டுவது கலைஞருக்கு தெரியவில்லையா அல்லது அவருள் இருக்கும் எழுத்தாளன் அவரை மீறி வந்து விட்டாரா என்றும் தெரியவில்லை.

மொத்தத்தில் கலைஞரின் இளைஞன், இன்றைய இளைய தலைமுறை போலில்லை.

Followers