03 January 2011

பார்த்தது - 11

மன்மதன் அம்பு

ராஜாமன்னாரில் இருந்து "மன்" மதனகோபாலில் இருந்து "மதன்" அம்புச்சாட்சியில் இருந்து "அம்பு" என பேர் வைக்க யோசித்த கமல் + ரவிக்குமார் கூட்டணி கதையையும் கொஞ்சம் யோசித்து இருக்கலாம். மைகேல் மதன காம ராஜன் போல பேரை வைத்து விட்டதால் நகைச்சுவைதான் பிரதானம் என்று தீர்மானித்து விட்டு எல்லோரும் சொகுசு கப்பலில் ஒய்வு எடுக்க போய் விட்டார்கள் போலும்.

நம்பர் 1 கதாநாயகி நிஷாவை (த்ரிஷா) காதலிக்கும் மதன கோபால் (மாதவன்) ஒரு typical சந்தேக பேர்வழி. நிஷாவை துப்பறிய முன்னால் மேஜர் ராஜாமன்னாரை (கமல்) அமர்த்துகிறார் மதன். மன்னாருக்கு நெஞ்சை பிழிய வைக்கும் இரண்டு கிளை கதைகள் ஒன்று அவரது பிரெஞ்சு மனைவி விபத்தில் இறப்பது. (முழுமையாக reverse ல் காட்டப்படும் உத்தி நன்றாக உள்ளது) இரண்டாவது அவரது நண்பர் ரமேஷ் அரவிந்த் வைத்திய செலவுக்கு பணம் தேட வேண்டும்.
(காவிரி பிரச்சனயில் கர்நாடகாவில் ஊர்வலம் போனார் என்ற காரணத்தினால் அவருக்கு மொட்டை அடித்து வாந்தி எடுக்க வைத்து விட்டார்களோ என்று தெரியவில்லை திரையரங்கம் முழுக்க ஒரே வாடை )

ஆரம்பத்தில் வெகு மெதுவாக நடக்கும் துப்பறியும் வேலை மாதவன் பணம் தர மறுத்ததும் சூடு பிடிக்கிறது. நடு தெருவில் நின்று கமல் பொலம்புவதும், எனக்கு பாதை தெரியுது என்று போய் ஒரு முட்டு சந்தில் நிற்பதும் ஆக கலங்க வைக்கிறார்.

அதன்பிறகு அவர் த்ரிஷாவுக்கு ஒரு காதலனை உருவாக்கி மாதவனை முழுநேரமும் தண்ணீரில் மிதக்க வைக்கிறார். டாஸ்மாக்ல் புது வருடத்திற்கு ஏதோ target வைத்து இருந்தாக செய்தி தாள்களில் வந்து இருந்தது அவ்வளவையும் மாதவன் ஒருவருக்கே விற்று achieve செய்து இருக்கலாம். அவ்வளவுக்கு குடித்து தள்ளுகிறார். அவருக்கு பஜ்ஜி போட்டு கொடுக்க ஒரே ஒரு காட்சி வருகிறார் "களவாணி" ஓவியா.

தண்ணீரில் மிதக்கும் மாதவன் கப்பலில் மிதக்கும் த்ரிஷாவின் காதலரை பார்க்க வர அங்கு crazy மோகன் type கிளைமாக்ஸ் அரங்கேற சுபம் இல்லை உச்சகட்ட குழப்பம் . எல்லா கதை மாந்தர்களும் தங்களது குணாதிசியங்களை விட்டு விட்டு அவர்களும் குழம்பி நம்மையும் குழப்புகிறார்கள்.

படம் மொத்தத்திலும் திருப்பிய பக்கமெல்லாம் சிக்ஸர், போர் என்று சச்சின் கணக்கா வெளுத்து கட்டுவது சங்கீதாதான். அவருக்கு ஒரு அருமையான மைல்கல் படம். "இந்த ஆம்பிளைகளே இப்படித்தான் என்று சொந்தனையே நம்பாமல் கட்டை விரல் கதை சொல்வதாகட்டும் , கமலை பார்த்து செம கட்டை என்று ஜொள்ளு விடுவதில் ஆகட்டும் அட்டகாசமாய் பறக்கிறது அவரது கொடி. இன்னும் சொல்ல போனல் performance ல் எல்லோரையும் விட சங்கீதாவே முன்ணணியில் உள்ளார். Hats off சங்கீதா !!!!!

ஊர்வசியை மருத்துவமனையில் விடாமல் குருப்புக்கு ஜோடியாக விட்டு இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். உஷா உதுப் ?????? பாவம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசை அருமை, மனுஷ நந்தனின் ஒளிப்பதிவு மிக அருமை. நொந்து கிடக்கும் படத்திற்கு இவர்களே ஆறுதல். கே.எஸ். ரவிக்குமார் இனியாவது அவர் பேச்சை கேட்கும் கதாநாயகனை வைத்து படம் எடுப்பது அவருக்கு நல்லது.

முனை முறிந்து போன அம்பு

01 January 2011

பார்த்தது - 10

காந்திபுரம்


எந்திரன் படத்திற்குதான் மிக சிறப்பான மார்க்கெட்டிங் செய்தார்கள் என்று நீங்கள் நம்பி கொண்டு இருந்தால், மன்னிக்கவும் நீங்கள் இன்னும் காந்திபுரம் பார்க்கவில்லை என்று அர்த்தம். முழுவதும் மார்க்கெட்டிங் திறமையாலேயே திரைஅரங்கில் ஒரு முப்பது பேர் இருந்தார்கள். இல்லாவிட்டால் ஒரு டப்பிங் படத்தை போய் அரை மணி நேரம் காத்திருந்து பார்த்து இருப்போமா????

உட்லண்ட்ஸ் சிம்போனி திரை அரங்கில் இந்த படத்தை நானும் என் நண்பர் ரமேஷும் பார்த்தோம். டிக்கெட் ல் கேளிக்கை வரி என்று போட்டு இருந்தது. என்னடா காந்திபுரம் என்பது தமிழ் பேர் இல்லையா ? என்று ரமேஷ் பொங்கி பிரவாகித்து கொண்டு இருந்தார். சென்சார் சான்றிதழ் காட்டும் போதுதான் தெரிந்தது அது ட்ப்பிங் படம் என்று !!!!! ( படம் ஆரம்பித்தவுடன் முழுவதுமாக தெரிந்து விடும் )

எந்த ஒரு விளம்பரத்திலும் பிற நடிகர் நடிகையர் படங்கள் இல்லை, கவி பேரரசு வைரமுத்து என்று பெரிய எழுத்தில் இருக்கும் ஆனால் இசை அமைப்பாளர் பேர் இல்லை. பிற பாடல் ஆசிரியர்கள் பெரும் இருக்காது. கதை - திரைக்கதை - இயக்கம் - இருக்கும் ஆனால் வசனகர்தா பேர் இல்லை. அவை எல்லாம் இருந்தால் விபரம் தெரிந்து விடும் என்று மறைக்கப்பட்டு விட்டது. நாம் யதார்த்தமாக பார்த்தால் அர்ஜுன் நடித்த ஒரு நேரடி படம் போலத்தான் தெரியும்.

வசனம் - டப்பிங் படங்களுக்கு வசனம் எழுதுவதில் சிறந்து விளங்கும் மருதபரணி. இசை : மரகதமணி பாடல்களை வைரமுத்து தவிர மருதபரணியும் இன்னும் ஒருவரும் எழுதி உள்ளார்கள். மிக முக்கியமாக அர்ஜுன் முழு ஹீரோ கிடையாது. ராம் என்று ஒருவர் அறிமுகம் என்று போடுகிறார்கள். தெலுங்கில் ஒரு வேளை நடுத்தர கதாநாயகனோ என்னமோ தெரியவில்லை.

கதை மும்பையில் இருந்து காந்திபுரதிற்கு வருகிறது பிறகு மீண்டும் மும்பை போய் காந்திபுரத்தில் வந்து முடிகிறது. அதற்குள் நமக்கு முடியாமல் போய் விடுகிறது.

படம் முடிந்து வெளியில் வரும் பொழுது ஒருவர் திரைஅரங்க ஊழியரிடம் சென்று " சார் அடுத்த ஷோ இந்த படத்தையே போடுவிங்களா ? ஏன்னா operator பாவம் இதையே எத்தனை தடவை பார்பார் " என்று சொன்னார்.

Followers