இந்த தலைப்பே கொஞ்சம் வித்தியாசமானது. என்ன காரணம் என்றால் . நான் பிறக்கும் பொழுது அவர் தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அதனால் இதனை சரிசமான ஆய்வாக இல்லாமல் பணிவான விமர்சனமாக கொடுத்து உள்ளேன்.
என் சிறு வயதில் நான் கலைஞரின் புகைப்படங்களை பார்த்தே வளர்ந்து வந்து இருக்கின்றேன். என் அப்பா கலைஞரின் தீவிர பக்தர். தொண்டர் என்ற நிலையை தாண்டி கலைஞரின் மேல் முரட்டு பக்தி கொண்டவர். தினமும் காலையில் அவர் கண் விழிப்பதே கலைஞரின் படத்தின் முன்தான். அந்த அளவிற்கு அவருக்கு கலைஞர் மேல் பக்தி. எந்த அளவிற்கு என்றால் வெள்ளை காக்கா மல்லாக்க பறக்கிறது என்று கலைஞர் சொன்னால் எங்க அப்பாவும் ஆமாம் என்று சொல்வார். அதே கலைஞர் ஒரு மணி நேரம் கழித்து வெள்ளை காக்கா என்பதே கிடையாது எனும் பொழுது , அப்படியே இவரும் மாற்றி கொள்வார்.
சிறு வயதில் அப்பா வாங்கிய முரசொலியில் தினமும் என் உயிரிலும் மேலான அன்பு உடன்பிறப்புகளுக்கு என்று அவர் எழுதிய கடிதத்தை படித்து உள்ளேன். தீவிரமான தி.மு.க தொண்டனாக பணி ஆற்றியும் இருக்கின்றேன். இன்னும் சொல்ல போனால் உதய சூரியன் சின்னத்திற்கு இல்லாமல் வேறு சின்னத்திற்கு இது வரையில் ஓட்டு போட்டதே இல்லை. கூட்டணி கட்சிகள் போட்டி இடும் பொழுது நான் மனம் விரும்பாமலேயே அவர்களுக்கு ஓட்டு போட்டு உள்ளேன்.அதே நான் இப்பொழுது நோட்டா தவிர யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் போனதற்கும் கலைஞர் தான் காரணம்.
கடந்த இரண்டு நாட்களில் பலர் மிக அதிகமாக புகழ்ந்தும் அல்லது இகழ்ந்தும் பதிவுகள் இட்டு வருகின்றார்கள். அதில் பல தவறான தகவலாகவும் இருக்கின்றன.
கலைஞரின் அரசியலை தயாநிதி மாறனுக்கு முன் மற்றும் பின் என்று பிரிக்க வேண்டும். கொள்கை வீரராக இருந்தவர் குடும்ப தலைவராக மாறி கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு இன்று அவரது கொள்ளு பேரன் வயதில் உள்ளவர்கள் எல்லாம் விமர்சிக்கும் நிலையில் ஆனதற்கு காரணம் அவரது குடும்ப பாசம்தான்.
நானும் என் அப்பாவும் நண்பர்கள் போல் பழகுவோம். அவருக்கும் எனக்கும் சண்டை என்பதே வருவது கலைஞர் சம்பந்தப்பட்டுதான். அதுவும் எனக்கு தமிழ் தேசியம் பேசும் நண்பர்களுடன் பழக ஆரம்பித்த பிறகு தான்.
இந்திய அமைதி படை திரும்பி வந்து சென்னையில் இறங்கிய பொழுது முதல்வராக இருந்த போதிலும் வரவேற்க போகாமல் அதன் காரணமாக பலத்த விமர்சனத்திற்கும் ஆளானவர், 2009ல் ஈழத்தில் போர் நடக்கும் பொழுது மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று அறிக்கை விட காரணமானது 2 ஜி தான்.
இன்று தமிழகத்தில் கை ரிக்ஸாவை ஒழித்தது கலைஞர் தான். மனிதனை மனிதனே இழுத்து கொண்டு செல்வது தவறு என்று கம்யூனிச சித்தாந்தம் பேசியவர் (கம்யூனிச தலைவர்கள் ஆண்ட மேற்கு வங்காளத்தில் இன்று வரை அமுல் படுத்த படவில்லை) மனிதனின் மூளையை மழுங்க வைக்கும் தொலைக்காட்சியை இலவசமாக கொடுத்தது குடும்ப தொழிலை மேம்படுத்த என்பது இல்லாமல் வேறு எதுவும் கிடையாது.
காமராஜர், ராஜாஜி போன்ற மிக பெரிய ஆளுமைகளை எதிர்த்து அரசியல் செய்த கலைஞர் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்யும் பொழுது தடுமாற காரணமாக இருந்தது அவரது குடும்ப உறவுகளின் அட்டகாசமே.
சாதி ஒழிப்பு பேசிய கலைஞர் வெறும் சாதிய கட்சிகளின் கூட்டணியை நம்பி தேர்தலில் நின்றதும் மிக கொடுமையாக தோற்றதும் வரலாறு. ஜெயலலிதா கூட்டணி முறையினை காப்பி அடித்ததின் விளைவுதான் அது.
ஸ்டாலின் அரசியலுக்கு வந்த பொழுது நிறைய விமர்சனங்கள் வந்தது. வைகோ கட்சியை விட்டு போக காரணமாக இருந்ததும் ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்தான் . ஆனால் அதை எல்லாம் விஞ்சியது தயாநிதி மாறனை கொண்டு வந்தது தான். ஸ்டாலினை கூட நம்மால் ஏற்று கொள்ள முடியும். மிசாவில் சிறையில் அடி வாங்கியதும், அடிப்படை கட்சியின் செயல்பாடுகளில் பங்கெடுத்து ஒவ்வொரு படியாகவும் முன்னேறியதும் ஏற்று கொள்ள கூடியது. ஆனால் தயாநிதி மாறன், அழகிரி அதன் காரணமாக கனிமொழி என்பது எல்லாம் தி மு க வை கொள்கை பிடிப்புள்ள இயக்கம் என்பதில் இருந்து private limited நிறுவனமாக மாற்றியது.
நாவலர், எம்ஜியார், வைகோ என்று ஜாம்பவான்கள் கட்சியை விட்டு போன பொழுதும், 13 ஆண்டு ஆட்சியில் இல்லாத பொழுதும், கட்சியை தன் கட்டுக்கோப்பில் வைத்து இருந்த கலைஞரால் ஒரு கட்டத்தில் மதுரையின் தெற்கே போக முடியாமல் இருந்ததும் குடும்ப பாசம் தான்.
கலைஞரின் தமிழ் - ரொம்ப காலமாக தமிழ் சினிமாவில் கதாநாயனாக அறிமுக ஆக ஒரு நபர் பராசக்தியின் வசனத்தை பேசித்தான் ஆக முடியும் என்ற நிலைமை இருந்தது. என் வாழ்க்கையில் "நான் தென்றலை தீண்டியது இல்லை ஆனால் தீயை தாண்டி இருக்கிறேன் " என்ற பராசக்தி வசனத்தை ஒவ்வொரு தோல்வியிலும் நினைவு படுத்தி ஆறுதல் பட்டு உள்ளேன். பூம்புகாரின் வாழ்க்கை என்னும் ஓடம் பாடலில் வரும் துடுப்புகள் இல்லாத படகுகள் அலை அடிக்கிற திசை தான் போகும். தீமை தடுப்பவர் இல்லா வாழ்வும் அந்த படகின் நிலை போல் மாறும் என்ற வரிகளை கலைஞரே மறந்தது தான் துயரம். மனசாட்சி உறங்கும் பொழுது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடும் என்ற கலைஞரின் மனசாட்சி ஈழத்தில் கொத்து கொத்தாக சொந்தங்கள் கொல்லப்பட்ட பொழுது எங்கு போனது ஏன் போனது என்பது வரலாற்றில் உள்ள கருப்பு பக்கங்களில் ஒன்று.
மாநில சுயாட்சி என்று போராடி சுதந்திர தினத்திற்கு கொடி ஏற்றும் உரிமையை இந்தியா முழுமைக்குமான முதல்வர்கள் எல்லாவற்றுக்கும் வாங்கி கொடுத்த கலைஞர் பின்னாளில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் போய் அமைதி ஆனது குடும்ப ஊழலில் பிரச்சினை வராமல் இருக்க அல்லாமல் வேறு என்ன காரணமாக இருக்க முடியும்.
மிசாவில் மாநில கட்சிகள் தடை செய்யப்படும் என்ற நிலை வந்த பொழுது மாபெரும் வீரராக உருவகப்படுத்த பட்ட எம்ஜிஆர் பம்மி பதுங்கி அகில இந்திய என்று பெயருக்கு முன்னால் சேர்த்து இந்திரா காந்திக்கு சாமரம் வீசிய பொழுது இந்தியாவே ஜனநாயகம் இல்லாமல் போன பொழுது அனைவருக்கும் புகலிடமாக இருந்தது தமிழ்நாடும் கலைஞரின் ஆட்சியும் தான். ஆனால் அதே கலைஞர் ஈழ பிரச்சனையில்( இன்னும் சொல்ல போனால் இரண்டு முறை அவர் ஆட்சி கலைந்ததும் ஈழ பிரச்சினையில் தான்.) மத்திய அரசை எதிர்க்க முடியாமல் போனது தான் இன்றும் அவருக்கு கரும் புள்ளி.
எடப்பாடி அரசு பேரறிவாளனுக்கு பிணை கொடுத்து வெளியில் அனுப்பும் பொழுது ஏன் கலைஞரால் செய்ய முடியவில்லை?
சிகிச்சை எடுக்க வந்த பார்வதி அம்மாளை விமானத்தை விட்டு இறங்க விடாமல் அவரை தடுத்தது எது ? யார்? ஏன்?
பிறருக்கு உதாரணமாக இருந்து இருக்க வேண்டிய அவரது அரசியல் வாழ்வு இன்று விமர்சனத்துக்கு உள்ளானது அவரது குடும்ப செயல்பாட்டில் காரணம் என்பது இல்லாமல் வேறு என்ன.
இன்றைய இணைய தலைமுறைக்கு கலைஞர் எதிரியாக போனதற்கு மேற்கண்ட விஷயங்களே காரணம்.
கடந்த 50 ஆண்டு காலமாக தமிழகத்தில் அரசியல் செய்தவர்கள் ஒன்று கலைஞரை ஆதரித்து அல்லது எதிர்த்து அரசியல் செய்து உள்ளார்களே தவிர அவரை தவிர்த்து அரசியல் செய்ய முடியாமல் போனது அவரது ஆளுமையின் எடுத்துக்காட்டு.
அவரது ஓய்வறியா உழைப்பும் அவரது விசய ஞானமும் இன்றைய இளைய தலைமுறை கற்று கொள்ள வேண்டிய விஷயம்.
விஞ்ஞான பூர்வமான ஊழல், குடும்ப அரசியல், ஈழ பிரச்சினையில் காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் உண்ணா விரதம் போன்ற காமெடிகள் எல்லாம் அவரை முழுமையான தலைவனாக என்னால் ஏற்று கொள்ள முடியாமல் போனது . ஆனால் ஒரு காலத்தில் அவர் மட்டுமே எனக்கு தலைவன் என்று வாழ்ந்து வந்து இருக்கின்றேன். காலம் மாறிய பொழுது அண்ணா தனது கொள்கையில் சில மாறுதலை செய்து கொண்டார். திராவிட அரசியல் நீர்த்து போய் தமிழ் தேசியம் முன்னெடுத்து வரும் பொழுதும் அந்த மாறுதல்களை கலைஞர் ஏற்று கொள்ளாமல் போனது சோகமே
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஒரு சட்ட போராட்டமே நடத்திய கலைஞர் மதுரையில் பிற சாதியை சேர்ந்தவர் அர்ச்சகராக பதவி ஏற்ற விஷயம் தெரியாமல் மறைந்தது மிகுந்த வருத்தத்திற்கு உரியது.
ஓரணா நாணயத்தின் விளிம்பு போல் உள்ளது உன் கூந்தல் என்ற கலைஞரின் தமிழ் இன்னும் என்னை பரவச படுத்தும். அவர் ஒரு கட்டத்திற்கு பிறகு பெரியார் வழியில் பதவியில் இல்லாமல் பொது தொண்டும் இலக்கிய தொண்டும் செய்து கொண்டு இருந்து இருந்தால் பல அவமானங்களை சந்திக்க வேண்டி இருந்து இருக்காது.
விஜயகாந்தின் அழுகையுடன் உடனான காணொளி பதிவும், இப்பாவது உங்களை அப்பாவாக கூப்பிடலாமா என்ற ஸ்டாலினின் கவிதை வரியும், மெரினாவில் அடக்கம் செய்யலாம் என்று நீதி மன்ற தீர்ப்பு வந்தவுடன் இரு கை எடுத்து கண்ணீர் மல்க கும்பிட்ட ஸ்டாலினின் உடல் மொழியும், இறுதியில் தகப்பனின் தலையில் கை வைத்து கன்னத்தை தடவி பிரியாவிடை கொடுத்த கனிமொழியின் அன்பும் என்றும் மறக்க முடியாது.
பல விமர்சனங்கள் இருந்தாலும் அய்யா நீங்கள் தமிழ் தேசத்திற்கு ஆற்றிய பங்கு அளவிட முடியாது. தண்ணீரில் இருந்து பாலை மட்டும் தனியே பிரிக்கும் அன்னப்பறவை போல் நீங்கள் என் தேசத்திற்கு ஆற்றிய நற்பணிகளை மட்டும் நினைவில் கொண்டு உங்களை அண்ணாவையும் பெரியாரையும் சந்திக்க கனத்த இதயத்துடன் அனுப்பி வைக்கிறேன். அங்கு உங்களுக்காக என் அப்பாவும் காத்து இருக்கின்றார்.
எனது இந்த பதிவில் எனது அனுபவங்களை மட்டுமே பதிவு செய்து உள்ளேன்.
Ravi, having read this I have to differ from you with all due respects. What has happened to you has infact the reverse had happened to me. Like your father, my parents too are loyal & simply blind to DMK & MK. But it was never the case with me especially when I jumped into the IIT setup only to gleefully gloat the rightist views. However all this changed when I came abroad - the need for social justice, rationalism, reservation, women's rights, empowerment, cultural hegemony of the Hindi language, north indians foray into TN & paani poori culture, federalism, the unitary anti-democratic attitude of the all india parties - Cong, Communists & Bjp no matter which side they took. Unfortunately you got it wrong about MK & his silent achievements. No body is perfect. But if there is one man who was more cursed, condemned, criticized more for his shortcomings rather than his significant breakthroughs, it's only this high school drop out prodigal genius. History & even the present is very harsh to him, thanks to the hate DMK, Hate Karunanidhi campaign started by the racist Cho in 1967 & still it is going on. Quite ironically the hate groups have nothing solid to prove the otherwise but keep milling the same grind everytime - Sarkaria/scientific corruption, anti-tamil, anti-Eelam, & other unsubstantiated notions. For your kind information, the Sarkaria commission has never implicated MK or used the word "விஞ்ஞான ஊழல்" in his report. None of the charges was never proved by the coward MGR. Many thanks to the propaganda blitz orchestrated & enunciated by the brahminical media which could not resist the onslaught MK did for 80 years. So more to come when we meet in person. Bye for now.
ReplyDelete