26 January 2014

மாலினி 22 பாளையம்கோட்டை

மாலினி 22 பாளையம்கோட்டை

நடிகர்கள்: நித்யா  மேனன் , கிரீஸ், நரேஷ் , கோவை சரளா
இசை: அரவிந்த் - ஷங்கர்
பாடல்கள் : நா. முத்துக்குமார்
ஒளிப்பதிவு: மனோஜ் பிள்ளை
திரைக்கதை , வசனம் , இயக்கம்: ஸ்ரீபிரியா


தன்னை காதலித்து ஏமாற்றியவனை ஒரு பெண் பழிவாங்கும் கதை. 22 FEMALE KOTTAYAM   என்ற மலையாள படத்தின் remake. இந்த படம் மலையாளத்தில் ஓஹோ என்று ஓடியதாக சொன்னார்கள். மலையாள சினிமாவிலும் கற்பனை வறட்சி வந்து விட்டது போலும்.

நித்யா மேனன் மிக அருமையாக நடித்து இருக்கிறார். அதுவும் போலீஸ் பிடிக்கும் பொழுது வருண் (கிரீஸ்) கண்டு கொள்ளாமல் போகும் பொழுது அவரது கண்களில் ஒரு ஏக்கமும் இயலாமையும் தெரிகிறது.

சிறைச்சாலை காட்சிகளில் ஏகப்பட்ட எதிர்பார்த்த காட்சிகள். இந்த படத்தில் climax மிக அருமையாக இருக்கும் என்று படம் குறித்த செய்திகளில் வந்து இருந்தது. ஆனால் நிஜத்தில் சவுதியில் கொடுக்கும் தண்டனையை கொடுத்து இருக்கிறார்கள் இதில் என்ன புதுமை என்று தெரியவில்லை.

இடைவேளை விடும் பொழுது மாலினி மீது வரும் பரிதாபத்தை அடுத்து அவர் பழி வாங்கும் பொழுது ஆக்ரோஷமாக மாற்றி இருக்க வேண்டும் அதை செய்ய இயக்குனர் தவறி விட்டார்.

மாலினியுடன் தங்கி இருக்கும் ஜென்சி என்ற பெண் ஒரு வயதானவருக்கு "தோழியாக" இருப்பதையும் அதனை சரளாவும், மாலினியும் எந்த ஒரு விகல்பம் இல்லாமல் ஏற்று கொள்வதும் தமிழ் படங்களுக்கு புதுசு . கலாச்சார காவலர்கள் பொங்க வேண்டிய ஒரு விஷயம். அதை தவிர இந்த படத்தில் ரசிக்க கூடிய காட்சிகள் என்று எதுவும் இல்லை.

ரொம்ப நாட்களுக்கு முன்பாக மாதவி நடித்த நிரபராதி என்றொரு படம் வந்தது. அதிலும் இப்படித்தான் தன்னை கெடுத்தவர்களை பழி வாங்குவார். அது கூட கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்த நினைவு அல்லது அந்த வயதில் அப்படி தோன்றியதா என்றும் தெரியவில்லை.

இப்பொழுது தியேட்டர்களில்  MGR நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் Trailer போடுகிறார்கள். இந்த படத்தின் இடைவேளை விட்டவுடன் பெண்கள் பகுதியில் இருந்து டேய் ஆயிரத்தில் ஒருவன் போடுடா என்று சத்தம். நிமிர்ந்து நில், கதிர்வேலன் காதல் எல்லாம் போடும் பொழுது வராத கைதட்டல் எல்லாம் ஆயிரத்தில் ஒருவன் போடும் பொழுது தியேட்டரே அலறியது . இன்னும் இரட்டை இலைக்கு இருக்கும் செல்வாக்கின் காரணம் இவர்கள்தான்.

படத்தை பற்றி: பேலஸ் தியேட்டரில் முட்டை போண்டா மிக நன்றாக இருக்கும். வேறு என்ன சொல்ல. மிக அருமையான படமாக வந்து இருக்க வேண்டிய கதை

16 January 2014

கருப்பாயி என்கிற நூர்ஜெஹான் - அன்வர் பாலசிங்கம்

இந்த வாரம் இரண்டு நாவல்கள் படித்தேன். இரண்டும் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்தவையாக அமைந்தது எதிர்பாராத ஒரு விஷயம். கருப்பாயி என்ற நூர்ஜெஹான் என்ற நாவல் திரு அன்வர் பாலசிங்கம் எழுதியது. மற்றொரு நாவல் டாக்டர் ஹிமான சையது என்பவர் எழுதிய வெப்ப மூச்சுக்கள் .

இதில் கருப்பாயி என்ற நூர்ஜெஹான் நாவலை வாசிக்க சொல்லி எனது நண்பர் பாவலர் ராசா ரகுநாதன் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பாக சொல்லி இருந்தார். அன்வர் பாலசிங்கம் எழுதிய செந்நீர் என்ற நாவலை ஏற்கனவே படித்து இருக்கிறேன். தமிழ் தேசியம் சார்ந்த ஒரு எழுத்தாளர். அதனால் நிச்சயமாக நல்ல கருத்துடன் எழுதி இருப்பார் என்ற நம்பிக்கை கொண்டு, நானும் உடனே புத்தகத்தை வாங்கி ஏற்கனவே படிக்காமல் வைத்து இருக்கும் புத்தகங்களோடு அடுக்கி வைத்து விட்டேன். இதில் ராசாவை நான் எப்படியும் மாதம் ஒரு முறையாவது சிந்தனை அரங்க கூட்டத்தில் சந்திக்க வேண்டிய கட்டாயம் உண்டு. அதில் அவர் என்ன படித்து விட்டீர்களா ? என்று கேட்டு விட்டால் என்ன செய்வது என்று முன்னுரிமை கொடுத்து படிக்க எடுத்தேன். அதனை முடிக்கும் தருவாயில்தான் எனது மூத்த மகன் மது நூலகத்தில் இருந்து எடுத்து வந்த வெப்ப மூச்சுக்கள் நாவல் குறித்து விவாதித்தான். சரி அதனையும் படித்து விடுவோம் என்று ஒரே மூச்சில் இரண்டு நாவல்களையும் படித்து முடித்தேன்.

பொதுவாக நம்மில் பலருக்கு மாற்று சமுதாயத்தை சேர்ந்த நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களது பழக்க வழக்கங்கள் மற்றும் சமுதாய நடைமுறைகள் பற்றிய புரிதலோ அல்லது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமோ நாம் காட்டுவதில்லை. இசுலாமிய நண்பர் வீட்டு விசேசம் என்றால் பிரியாணி மட்டுமே நாம்  நினைவில் இருத்தி கொள்கிறோம். தெரிந்து கொள்ள நமக்கு நேரமில்லையா அல்லது மனமில்லையா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேள்வி.

 இந்த கதை நான் சிறுவனாக இருந்த பொழுது அனேகமாக 1981 அல்லது 1982 ஆக இருக்ககூடும். அப்பொழுது நெல்லை மாவட்டத்தில் மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் இந்துக்கள் எல்லாம் ஒரே நாளில் இசுலாமியர்களாக மாறி விட்டதாக பெரிய பரபரப்பு இருந்தது. சாதிய கட்டமைப்பும், மதம் சார்ந்த குழப்பங்களும் புரியாத வயது. மதம் மாறினா மாறி விட்டு போகிறார்கள் அதற்க்கேன் இவ்வளவு கூச்சலும் குழப்பமும் என்று ஒரு புரியாத குழப்பம். அப்படி மாறிய ஒரு கிராமம் - இன்று பிலால் நகர் என்று பெயர் பெற்று உள்ளது. அந்த ஊரின் மக்களும் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைக்களும்தான் கருப்பாயி என்ற நூர்ஜெஹான் புதினத்தின் அடிப்படை இழை.

கதையின் ஆரம்பமே நூரின் தற்கொலையில் தான் தொடங்குகிறது. நூர் தற்கொலை செய்து கொண்டதின் காரணம் என்ன? அதற்கும் மதமாற்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்று விரிவாக விவாதிக்கிறது. நூரின் அப்பா இந்த மதமாற்றத்திற்கு உந்து சக்தியாக இருந்த மிக சிலரில் ஒருவர். அதே சமயம் நூரின் சித்தி பன்னிர் இந்த மாற்றத்திற்கு உடன் படாமல் இந்துவாகவே இருக்கிறார். அவரது பாசமும் அந்த போராட்டத்தின் முடிவில் அவரது தற்கொலையும், மிகுந்த தைரியசாலி துணிச்சல் மிக்கவர் என்று
சொல்லப்படும் நூரின் வாப்பா மற்றும் அவரது மனைவியும் தற்கொலையும் மதம் மாறியதால் எந்தொவொரு வாழ்வியல் முன்னேற்றமும் இல்லை என்பதை கதை சொல்லாமல் சொல்கிறது. கதையில் எந்தவொரு தீர்வையும் அன்வர் எடுத்து வைக்கவில்லை. எந்த ஒரு சிக்கலுக்கும் தீர்வு முக்கியம் என்றாலும் அந்த தீர்வே புதிய சிக்கல்களுக்கு அடிக்கோலி விடுமோ என்று அவர் விட்டு விட்டாரா என்று தெரியவில்லை. பிரச்சனைகளில் உள்ள தீவிரத்தை அதனால் பிற மனிதர்கள் படும் வேதனையை கதாபாத்திரங்களின் விவாதங்கள் மூலம் மிகவும் தெளிவாக எடுத்து உரைக்கின்றார்.

பிலால் நகரில் உள்ள திருமணம் அல்லது நிக்காஹ் ஆகாத முப்பது முதிர் கன்னிகளின் வாழ்வியல் சிக்கல்கள்தான் கதையின் விவாத பொருள். " புது முஸ்லிம் " என்ற சொற்றொடர் அவர்களை மற்ற முஸ்லிம்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது . பிலால் நகரின் மக்கள் நிறைய பணம் வாங்கி கொண்டுதான் மதம் மாறி கொண்டார்கள் என்று பிற மதத்தினரை யோசிக்க வைக்கிறது. பேருந்தில் சில்லறை இல்லாத காரணத்தினால் ரூபாய் நோட்டை கொடுக்க , உங்களிடம் எல்லாம் சில்லரை எங்கே இருக்க போகிறது என்று பேருந்து நடத்துனரை கேலியாக பேச வைக்கிறது.

மத மாற்றத்திற்கு அடிப்படை காரணமாக சாதி துவேஷம் சுட்டி காட்டப் படுகின்றது.
 " உலகிலேயே இல்லாத நடைமுறையாய் உழைப்பவனை, கீச்சாதி பயலுவோ" என்று அடைமொழி கொடுத்த இந்த தேசம், முன்னொரு காலத்தில் அப்பூர்வ குடிகளின் பூமியாய் இருந்ததை கவனமாக மறந்து விட்டது"

"ஏய்  சாதி வெறி பிடிசவுங்களா  உங்களால எங்க குலமே விழுந்து கிடக்கேடா  பாவியலா "
போன்ற வரிகள் அக்கருத்தை வலியுறுத்துவது போல் அமைந்து உள்ளது.

ஒரே சாதி தான் என்றாலும் , இரு வேறு நம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகள் தரும் நடை முறை ஆசார நிர்பந்தங்கள், அதன் அடிப்படையில் கட்டமைக்கப்படும்  ஆளுமைகள் என்ற விரிவான தளத்தில் கதை பயணிக்கிறது.

எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு என்பது முக்கியம் என்றாலும், எந்த தீர்வையுமே அன்வர் முன்வைக்கவில்லை. பல தீர்வுகளே புதிய சிக்கல்களுக்கு அடிகோலி விடுமோ என்ற எண்ணத்தில் விட்டு விட்டாரா என்று தெரியவில்லை. பிரச்சனைகளில் உள்ள தீவிரத்தை, அதனால் கதை  மனிதர்கள் படும் வேதனையை கதாபாத்திரங்களின் விவாதங்கள் மூலம் மிகவும் தெளிவாக எடுத்து உரைக்கின்றார்.

இதே "புதிய முஸ்லிம்" குறித்து ஒரு கதையை நான் வெகு காலத்திற்கு முன்பாக படித்த ஞாபகம். கதையின் பெயரோ எழுதியவர் பெயரோ சரியாக ஞாபகம் இல்லை. அனேகமாக ஜே . எம் . சாலியாக இருக்கலாம். குமுதம் அல்லது சாவி இதழில் படித்த ஞாபகம்.

அந்த கதையிலும் ஒரு முதிர் கன்னி உண்டு. அவளுக்கு திருமணம் செய்வதற்காக ஊர் பெரியவர்களிடம் அந்த பெண்ணின் தந்தை கேட்டு செல்லும் பொழுது ஒருவரும் உதவி செய்ய முன் வர மாட்டார்கள். ஆனால் அதே சமயத்தில் புதியதாக மதம் மாறி வந்த ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு உதவி செய்வார்கள். புதுசா வந்த தான் மரியாதை என்று அந்த முதியவர் சொல்வதுடன் கதை முடிவது போல் இருக்கும். வந்தாரை வாழ வைக்கிறார்கள், நம்மை ஏங்க வைக்கிறார்கள் என்ற ரீதியில் கதை போகும். கிட்டத்தட்ட அன்வரின் கருத்தியலுக்கு எதிரான கருத்தை கொண்ட சிறுகதை அது. 

இந்த நாவலில் ஒரே ஒரு குறைதான். கதாபாத்திரங்கள் பேசுவது தெளிவாக யாருடைய கருத்து என்று புரிவது போல் எழுதப்படவில்லை என்பது ஒரு பெரும் குறையாக எனக்கு தெரிந்தது. எனது நண்பர் திரு சரவணன் அவர்களும் இதே கருத்தினை பிறகு பேசும் பொழுது பகிர்ந்து கொண்டார். 

மொத்தமாக பார்க்கும் பொழுது மிகவும் ஆழ்ந்து படிக்க வேண்டிய ஒரு புதினம்.

Followers