17 January 2020

பார்த்தது - பட்டாஸ்

பார்த்தது - பட்டாஸ் 

நடிகர்கள்: தனுஷ், சினேகா, நாசர், முனீஷ்காந்த், நவீன் சந்திரா, மெஹ்ரின்
இசை: விவேக் மெர்வின்
இயக்கம்: துரை செந்தில்குமார்

கதை: அப்பாவை கொன்ற வில்லனை மகன் பழி வாங்கும் அரத பழசான கதை. அதில் "அடிமுறை " என்ற புது விஷயத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

மெஹ்ரின்: தமிழ் சினிமாவின் வழக்கமான கதாநாயகி. கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனிடம் அடிவாங்கி விட்டு தனுஷுக்கு முத்தம் கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு போவதுடன் அவரது பங்களிப்பு முடிந்து விடுகிறது.

பஞ்சர் என்ற கதாபாத்திரத்தில் வரும் நடிகர் காமெடியில் ஒரு ரவுண்டு வருவார். திருட யோசிக்கும் தனுஷ் இடம் " PASSION இல்லனா ப்ரோ பேப்பர் போட்டுட்டு போங்க " என்று சொல்லும் பொழுது திரை அரங்கமே அதிருகிறது. தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல வரவு.

நாசர்: வேலப்பன் ஆசானாக வழக்கம் போல். இந்த யானைக்கு ஏன் இப்படி சோள பொரி கொடுக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

நவீன் சந்திரா: பிரம்மன் படத்தில் சாக்கலேட் பையன் போல் வந்தவர் இதில் ரண கள வில்லன். சிறப்பான வில்லன்.

தனுஷ்: தொழிலை நேசிக்கும் ஒரு மனிதன் தன்னை எப்படி வடிவமைத்து கொள்வான் என்பதற்கு  இவர் தான் சிறந்த எடுத்து காட்டு. திருடா திருடி, சுள்ளான் போன்ற படங்களில் ஆரம்பித்து அசுரன் போன்று ஒரு வளர்ச்சியை அடைந்து உள்ளார்.
அவர் தற்போது தேர்வு செய்யும் படங்களில் மண் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். இந்த படத்திலும் திரவிய பெருமாள் ஆக வாழ்ந்து இருக்கிறார். மரு வைத்தால் அப்பா எடுத்தால் மகன் என்று இல்லாமல் உடல் மொழி, பேச்சு என்று எல்லாவற்றிலும் நல்ல வித்தியாசம்.

சினேகா: இளம் பெண்ணாய் துள்ளல். நல்ல COME BACK படம். 
சண்டை என்று வந்து விட்டால் யாராக இருந்தாலும் விட்டு கொடுக்காத தன்மை. கணவன் இறப்பை பார்க்கும் பொழுது பரிதவிப்பு. நீண்ட நாட்களுக்கு பிறகு மகனை பார்க்கும் பொழுது கண்களில் ஏக்கம். கொலை செய்ய நினைக்கும் போலீசை அடித்து துவைக்கும் அதிரடி என்று வெளுத்து வாங்குகிறார்.

ஏற்கனவே கொடி படத்தில் திரிஷாவுக்கு நல்ல வேடம் கொடுத்த துரை செந்தில்குமார் இதில் சினேகாவை சிறப்பாக பயன் படுத்தி இருக்கிறார். அவருக்கும் தனுசுக்கும் நல்ல புரிதல் வந்து இருக்கிறது. இன்னும் சிறப்பான படங்கள் தரட்டும்.

பெரிதாக ஈர்க்க வில்லை என்றாலும் படம் விறுவிறுப்பாக இருக்கிறது. அடிமுறை என்ற பழமையான தற்காப்பு கலையை பற்றி சொல்லி இருக்கிறார்கள். முதல் பாதியில் கொஞ்சம் கத்திரியை போட்டு விட்டு, வில்லனை பழிவாங்குவதை இன்னும் வித்தியாசமாக செய்து இருக்கலாம்.

மிக பெரிய மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளருடன் நடை பெரும் கிளைமாக்ஸ் சண்டை வெறித்தனமாக அமைந்து இருக்க வேண்டாமா? ரொம்ப ரொம்ப சுமார்.

பொங்கலில் வெடித்த பட்டாஸ் கொஞ்சம் மார்கழி பனியில் ஆங்காங்கு நமத்து போய் இருக்கிறது. கொஞ்சம் கவனம் எடுத்து இருந்தால் பட்டாஸ், தர்பாரை தகர்த்து இருக்கும்.


16 January 2020

பார்த்தது : தர்பார்

பார்த்தது : தர்பார் 

நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
இசை: அனிருத்
இயக்கம்: A .R . முருகதாஸ்

இந்த படத்தை பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது. YESCON மற்றும் பொங்கல் வேலைகள் என்று இருந்ததால் உடனே எதுவும் எழுதவில்லை.
ஒரு சில நண்பர்கள் தொலைபேசியில் கூப்பிட்டு ஏன் எழுதவில்லை என்று கேட்டதால் கால தாமதமான விமர்சனம்.

கதை: நேர்மையான போலீஸ் அதிகாரி , போதை மருந்து கும்பலை பிடிக்கிறார். அதன் காரணமாக அவரது மகளை இழக்கிறார். மகளின் இறப்புக்கு காரணமானவர்களை தேடி அழிக்கிறார்

பொதுவா முருகதாஸ் படம் வெளியானதும் இது என் கதை என்று யாரவது வழக்கு போடுவார்கள். இதில் அதற்கு வாய்ப்பில்லை. திரைப்படம் தோன்றிய காலத்தில் உருவான கதை இது. பாட்டி சொல்லும் கதைகளுக்கு யாரும் patent கேட்க முடியாது. அந்த வகையில் இதுவும் ஒரு பாட்டி சொல்லும் கதை தான். நிறைய எதிர்பார்த்து இருந்தேன். விஜயகாந்தை ரமணாவில் வித்தியாசமாக காட்டியது போல் இதில் ரஜினிக்கு எதாவது செய்வார் என்று. ஆனால் ரஜினியை வைத்து செய்து விட்டார். பேட்ட கூட ரஜினியின் DIE HARD FANS க்கான படம் தான். ஆனால் அதில் கார்த்திக் சுப்புராஜின் தனித்தன்மை - TOUCH இருந்தது. இதில் முருகதாஸின் TOUCH என்று எதுவும் இல்லை.

நிவேதா தாமஸ் தென்னிந்திய மொழிகளில் கிராமங்கள் வரைக்கும் தெரிவதற்கு இந்த படம் ஒரு வாய்ப்பு. அதனை அவரும் நன்றாக பயன் படுத்தி கொண்டு இருக்கிறார்.

நயன்தாரா - சுஜாதா பாணியில் சொல்வதானால் "ரவிக் " அணிந்து படம் முழுவதும் மொசைக் தரை போல் வழுவழுப்பான முதுகை காட்டி உள்ளார். அறம் , மாயா என்று தனது திறமையை வெளிப்படுத்திய நயன் இதில் வெறும் பொம்மையாக வந்து போகிறார்.

யோகி பாபு - வழக்கம் போல்.

சுனில் ஷெட்டி - பல ஹிந்தி படங்களில் வில்லன்களை துவம்சம் செய்தவர் இதில் ரஜினியிடம் அடி வாங்குகிறார். ஒரு பயங்கரமான கத்தியை வைத்து சோபாவை கிழிக்கிறார் . அதன் பிறகு அந்த கத்தியை எங்கேயோ படப்பிடிப்பு தளத்தில் தொலைத்து விட்டார் போல, அதன் பிறகு அதை எங்கேயும் காணவில்லை. எதையோ செய்ய போகிறார் என்று பார்த்தால் புஸ் என்று போகிறார். ரஜினிக்கு ஒரு TOUGH FIGHT கொடுக்கும் வில்லனை வடிவமைத்து இருக்க வேண்டும். வில்லன் வேண்டும் என்பதற்கு சுனில் ஷெட்டி. பரவாயில்லை சும்மா வீட்டில் படம் இல்லாமல் உட்கார்ந்து இருப்பதற்கு சம்பளம் கிடைக்கும் தானே.

ரஜினிகாந்த் - அலெக்ஸ் பாண்டியன் போல என்று பெரிய build up கொடுத்து கொண்டு இருந்தார்கள். மாரீஸ் 70mm திரை கிழிந்தது அலெக்ஸ் பாண்டியன் entry கொடுத்த பொழுது.

இங்கு ???????.

சில விஷயங்களை ஒப்பிடாமல் இருப்பது அந்த விஷயங்களுக்கு சிறப்பு.

எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது நாங்கள் பள்ளியில் படித்த பொழுது நானும் ,பிரதீப்பும் , தர்மேந்திராவும்   ஒரு காந்தி ஜெயந்திக்கு காலையில் ஒன்பது மணிக்கே மாரீஸ் வாசலில் காத்து இருந்து அடித்து பிடித்து கே 1,2,3 வரிசையில் அமர்ந்து பார்த்தோம். அன்றைக்கு ரஜினி படத்தை முதல் நாள் பார்த்த பலர் இன்று சினிமா பார்க்கும் வழக்கத்தையே விட்டு விட்டார்கள்.

சமுக வலைத்தளங்களில் பலரும் ரஜினி அவரது வயதுக்கு ஏற்ற படங்களில் நடிக்க வேண்டும். அமிதாப் எப்படி மாறி விட்டார் என்று பதிவு இடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அமிதாப் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தார். அதனால் அவர் மாறினார். BOX OFFICE HIT கொடுத்து கொண்டு இருந்தால் அவரும் இன்றைக்கு பஞ்ச் வசனங்கள் பேசி கொண்டு தான் இருந்து இருப்பார்.

இன்னும் சொல்ல போனால் இப்பொழுது வருஷத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடிக்கும் ரஜினி அவரது 50 + கலீல் இரண்டு வருஷத்திற்கு ஒரு படம் நடித்து கொண்டு இருந்தார். ரஜினிக்கு கொடுக்கப்படும் அரசியல் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவே அவர் இப்பொழுது தொடர்ந்து படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார் என்பது என் எண்ணம்.

ரஜினியை பற்றி ஒரு சிறப்பு தகவல்: இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட திரைப்படத்தின் அனைத்து வடிவங்களிலும் (FORMAT ) கதா நாயகனாக நடித்தவர் ரஜினி மட்டுமாகத்தான் இருக்க முடியும்.

கருப்பு வெள்ளை, வண்ணம், 70mm (மாவீரன் ) 3D, சினிமாஸ்கோப் , அனிமேஷன் (கோச்சடையான்) என்று எல்லா வடிவங்களிலும் நடித்து உள்ளார். அடுத்த படத்தை IMAX லிலும் நடித்து விட்டால் இப்போதைக்கு வேறு எந்த வடிவமும் பாக்கி இல்லை.

தர்பார் படத்தை பற்றி ஒண்ணுமே சொல்லவில்லையே - ரஜினி படத்திற்கு போனோமா , விசில் அடிச்சோமா, டான்ஸ் ஆடினோமா வந்தோமா என்று இருக்கணும். அந்த மாதிரி படங்களில் இதுவும் ஒன்று.


காலா மாதிரி திரையில் உரிமைக்கு போராடு என்று சொல்லிவிட்டு , நிஜத்தில்  போராட்டக்கார்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று பேட்டிகொடுப்பது   போன்ற தத்துவ முரண் பாடுகள் இல்லாத ஒரிஜினல் அக்மார்க் ரஜினி படம்.


Followers