08 September 2016

இரு முகன்

இரு முகன் 

நடிகர்கள்: விக்ரம், நயன்தாரா, நாசர் , நித்யா மேனன்
இசை:  ஹாரீஸ் ஜெயராஜ்
இயக்கம்: ஆனந்த் ஷங்கர்
திரை அரங்கம்: சோனா திரை 1 

'அரிமா நம்பி ' தந்து அழுத்தமாக முத்திரை பதித்த இயக்குநர் ஆனந்த் ஷங்கரின் இரண்டாவது படம் 'இருமுகன்'. "அரிமா நம்பியை" நம்பி படத்திற்கு போனால் நாம் தொங்கி போன முகனாய் தான் வர வேண்டும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்னால் ஜெயம் ரவி நடிப்பில் ஆதிபகவன் என்று ஒரு படம் வந்ததே அதை கொஞ்சம் மாற்றி சுட்டது தான் இரு முகன். விக்ரமிடம் கால்ஷீட் வாங்க உங்களுக்கு ஒரு வித்தியாசமான மேக்கப் என்று சொன்னால் போதும் போல. கதை எதையும் கேட்க மாட்டார் என்பதை இந்த படமும் நிரூபிக்கிறது. 

சட்டவிரோத ஊக்க மருந்து உற்பத்தியையும், கடத்தலையும் தடுக்கப் போராடும் உளவுப் பிரிவு அதிகாரியின் முனைப்பும் முயற்சியும் என்கிற ஒரு oneline ல் படம் நிற்கிறது.
ஒரு அருமையான டைட்டில் முடிந்தவுடன் ஒரு வயதான சீன முதியவர் இன்ஹேலர் பயன்படுத்தியதும் அசுர பலம் பெற்று மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தகர்த்ததும் இறந்துவிடுகிறார். 

அந்த முதியவருக்கு அவ்வளவு பலம் எப்படி வந்தது என்ற விசாரணை தொடர்கிறது. அது குறித்த உண்மையைக் கண்டறியும் பொறுப்பு உளவுப் பிரிவு அதிகாரி விக்ரமுக்கு வழங்கப்படுகிறது. இடைநீக்கத்தில் இருந்த விக்ரம் அந்த பொறுப்பை ஏன் எப்படி ஏற்கிறார், அதற்கு காரணம் யார், அந்த நெட்வொர்க் எப்படி இயங்குகிறது, அந்த குழுவால் அவருக்கு ஏற்படும் இழப்புகள் என்னென்ன, விக்ரம் அந்த நெட்வொர்க்கை என்ன செய்கிறார் என்பதே இருமுகன் கதையும், திரைக்கதையும்.

பொதுவாக இந்த மாதிரி இடை நீக்கத்தில் இருக்கும் கதாநாயகனை கூப்பிடும் பொழுது ஏன் வெறும் யாரும் இல்லையா என்று ஒரு உணர்வு தோன்றும் (புலன் விசாரணை காலத்தில் இருந்து) ஆனால் இதில் அதற்காக ஒரு நல்ல காரணத்தை வைத்து இருக்கிறார்கள். இப்பொழுது வரும் படங்களில் ஏன் கதாநாயகன் குத்து சண்டை போடுவது போல் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை 

அகிலன் வினோத், லவ் என்ற இரு கதாபாத்திரங்களில் விக்ரம் நடித்திருக்கிறார். உளவுப் பிரிவு அதிகாரியாக மிடுக்குடன் இருப்பது, புத்திசாலித்தனமாய் முடிவெடுப்பது, நெருக்கடி சூழலில் சமயோசிதமாய் செயல்படுவது, ஆக்‌ஷன் காட்சிகளில் மெனக்கெடல், காதலில் கிறங்குவது என விக்ரம் உளவுப் பிரிவு அதிகாரி பாத்திரத்தில் செம ஃபிட். முகத்தில்தான்  கொஞ்சம் முதிர்ச்சி தெரிகிறது. அது அவரது மகள் திருமணத்தை கேட்டதினாலா என்று தெரியவில்லை .

லவ் கதாபாத்திரத்தில் வரும் விக்ரம் பார்வை, பாவனையில் மட்டும் வெரைட்டி காட்டியிருக்கிறார். பஞ்ச் வசனங்கள் பேசுவதாகட்டும் சண்டை காட்சிகளிகளில் கூட ஒரு நளினத்தை காட்டுவதாகட்டும் மிக சிரமப்பட்டு உழைத்து இருக்கிறார். மோசமான படத்தில் சிவாஜி நடித்து இருப்பார் ஆனால் அவர் நடிப்பு மோசமாக இருக்காது என்று என் நண்பர் ஒருவர் சொல்வார். அதை விக்ரம் இப்பொழுது எல்லா படங்களிலும் நிருபித்து வருகிறார் 

கிளாமர் பாதி, நடிப்பு மீதி என்று நயன்தாரா ஒரு கட்டத்தில் திரையை மொத்தமாக ஆக்கிரமித்துக் கொள்கிறார். நயனின் கதாபாத்திரம் கதை நகர்த்தலுக்கு முக்கிய கருவியாக செயல்படுகிறது. இடையில் செத்து மீண்டும் வருகிறார். நெற்றியில் குண்டு பட்டாலும் மிக பெரிய மலை உச்சியில் இருந்து கீழே விழுந்தாலும் பிழைத்து கொள்ளலாம் ( What a medical miracle?) என்று இந்த படத்தில் நிருபித்து இருக்கிறார்கள். 

நித்யா மேனன் நிறைய இடங்களில் வந்தாலும், நடிப்பதற்கு பெரிதாய் எந்த வேலையும் இல்லை. அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். என்ன செத்து போன நயன் இருமுகியாய் திரும்ப வந்தாச்சு என்பதற்காக இவரை சாக அடித்து விட்டார்கள் போல 
'செவனேன்னு இல்லனா செருப்பாலயே அடிப்பேன்' என தன் கையையே பார்த்து நொந்துகொண்டு பேசும் தம்பி ராமய்யா சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார். 
நாசர், ரித்விகா, கருணாகரன் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கான பங்களிப்பை நிறைவாக வழங்கியுள்ளனர். நாசர் ஒரே ரூமில் உட்கார்ந்து கொண்டு போன் பேசுவதுடன் முடித்து கொள்கிறார். கருணாகரன் கதாபாத்திரத்தில் நம்பகத்தன்மை இல்லை. எந்த மிரட்டலும், டீலிங்கும் இல்லாமல் எப்படி உடனே அப்ரூவர் லெவலுக்கு கருணாகரனால் மாற முடிகிறது? ரித்விகா மலேசியாவில் கபாலி பட ஷூட்டிங்கில் இருந்த பொழுது இதற்கு கூட்டி கொண்டு பொய் விட்டார்கள் போல் இருக்கிறது. அதே மாடுலேஷன் அதே பாவனை எங்கே தீடீர் என்று ரஜினி வந்து விடுவாரோ என்று யோசிக்க வைப்பது போன்ற ஒரு expression. நல்ல நடிகையை வீணாக்கி விடாதீர்கள் இயக்குனர்களே. 

ஆர்.டி.ராஜசேகரின் கேமரா மலேசியாவை கண்முன் நிறுத்துகிறது. சேஸிங், ஆக்‌ஷன் காட்சிகளில் ஏதோ நாம்தான் கேமராவை தோள்களில் தூக்கி கொண்டு போகிறோமோ என்கிற  அளவுக்கு ஒளிப்பதிவில் துல்லியம். 

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் -------- என்னத்தை சொல்ல. கொஞ்சம் பார்த்துக்கங்க பாஸ்! நிறைய பேர் புதுசா வித்தியாசமாய் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. காணாம போயிட போறீங்க

எடிட்டர்  கொஞ்சம் கறார் காட்டி கத்தரி போட்டு இருக்கலாம் .  ஹிட்லர் கூட ஊக்க மருந்தை இரண்டால் உலகப் போரில் தன் வீரர்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார் என்று ஹிஸ்டரியில் இருந்து டாபிகல் சுவாரஸ்யம் தேடி இருக்கும் இயக்குநர், அதை படம் முழுக்க பரவாமல் தவறிவிட்டார். முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். படத்தில் இருக்கும் ஏகப்பட்ட லாஜிக் மீறல்களால் படத்தோடு நம்மால் எந்த விதத்திலும் ஒன்றமுடியவில்லை.

இன்ஹேலர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என தெரிந்த போலீஸார் எப்படி சிறையிலேயே அதை 'லவ்' பயன்படுத்தக் கொடுக்கிறார்கள்? சிறையில் இருக்கும் கைதியே அங்கு இருக்கும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தும் அளவுக்கா சிறை நிர்வாகமும், பாதுகாப்பும் இருக்கும், சிறையிலிருந்து தப்பிய 'லவ்' எங்கு சென்றார் என்று போலீஸ் தேடவே தேடாதா, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எதிரிகளைக் கொல்வதில் குறிக்கோளாக இருக்கும் வில்லன் ஏன் ஹீரோவை மட்டும் விட்டுவிடுகிறார். மந்திரி இருக்கும் அறை கதவை  உடைக்க ஏன் அவ்வளவு நேரம். இப்படி பல கேள்விகள் பதில் இல்லாமல் கடந்து போகிறது. அரிமா நம்பியில் அவ்வளவு டீடைலிங் கொடுத்த கோமல் சுவாமிநாதனின் பேரன் இதில் ஏன் கோட்டை விட்டார் என்று தெரியவில்லை. விக்ரம் என்ற ஒரு மாயம் போதும் என்று நினைத்து விட்டாரா என்று தெரியவில்லை.

அதுவும் அந்த கிளைமாக்ஸ் எந்த சுரத்தும் இல்லாமல் போகிறது. மிக பெரிய எதிர்பார்ப்புடன் படத்திற்கு போனால் மிக பெரிய ஏமாற்றமே மிச்சம்.மொத்தத்தில் இருமுகன் - இறங்கு முகன் 

Followers