28 May 2013

மாற்றம்

 மாற்றத்தினை  ஏற்றுக்   கொள்பவர்களே ,மாற்றம் அடைவார்கள் என்று நண்பர் சுப்பையாராஜ் சில நாட்களுக்கு   முன்   ஒரு மின்னஞ்சலில் மிகவும் சிந்தனையை தூண்டும் வரிகளை எழுதி இருந்தார்   .

மாற்றம் என்ற ஒன்றே மாற்றம்  இல்லாதது என்பது மார்க்ஸிய தத்துவம் .ஆனால் பொதுவாக  நாம் மாற்றங்களை அது உத்தியோக  உயர்வோ , அல்லது ஒரு புதிய பொருள் வாங்குவதையோ, அல்லது வேறு  ஏதேனும்  நல்ல விஷயங்களோ  நமக்கு நடந்தால் மட்டுமே  அதனை நல்ல மாற்றமாக ஏற்றுக் கொள்கின்றோம்.

ஆனால் அதே மாற்றம் நம்மை சுற்றி உள்ள பிறருக்கு நடந்தால் நாம் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம். அது மட்டுமல்லாமல் அதனை ஏகடியம் செய்தும் பார்க்கின்றோம்.  "இவனை தெரியாதா, ஒரு பத்து வருசத்திற்கு முன்பு எப்படி இருந்தான் என்று, இப்போ பெருசா பேச வந்துட்டான் " என நமது மன குமைச்சலை வீர வசனமாக பேசுகிறோம். நமக்கு நடக்கும் நன்மையை நமது உழைப்பு என்றும் இறைவனின் கருணை என்று பூரித்து போகும் நாம் பிறருக்கு நடக்கும் பொழுது ஏன் அப்படி எண்ணுவதில்லை?

இந்த எண்ணம் குறித்து என் வாழ்வின் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. நானும் எனது நண்பர் ஒருவரும் ஒரே காலக் கட்டத்தில் எங்களது பணியினை வெவ்வேறு நிறுவனத்தில் ஆரம்பித்தோம். என் நண்பரின் வளர்ச்சி மிகவும் வேகமாக இருந்தது. எனது வளர்ச்சியோ மிகவும் நிதானமாக இருந்தது. ஆனால் என் பயணம் எப்பொழுதும் இலக்கு நோக்கியதாக இருந்ததால், வீண் ஆடம்பர செலவுகளை குறைத்து, வேலை பார்த்துக் கொண்டே சுய தொழிலும் ஆரம்பித்தேன். எனது நண்பருக்கு குடி பழக்கம் போன்ற சில தவறான விசயங்களால் அதே நிலையில் இருக்க நான் மெதுவாக அவரை தாண்டி வளர ஆரம்பித்தேன்.

அதனை அவரால் இயல்பாக எடுத்து கொள்ள முடியவில்லை. ஒரு முறை நண்பர்கள் எல்லாம் ஒரு சுற்றுலா சென்று இருந்தோம். அப்பொழுது இரவு சிறிது உற்சாக பானம் உள்ளே போனதும், " இவனை பாரு ரொம்ப யோக்கியன் மாதிரி குடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு போறான். ஒரு காலத்திலே kinetic safari வண்டி ஒட்டிக்கிட்டு திரிஞ்சான், இன்னைக்கு fiesta car லே சுத்தறான். எல்லாம் பழசை மறந்துட்டான் " என்று ஒரு comment அடித்தார். எனக்கு உள்ளுக்குள் கோபம் வந்தாலும், மனிதர்கள் இவ்வளவுதான் என்று விட்டு விட்டேன்.

" நீ வளர வளர அந்த நிலையில் உள்ள நண்பர்களிடம் மட்டுமே பழக வேண்டும். உன் ஆரம்ப நிலையை தெரிந்த நண்பர்கள் உனக்கு வரும் மாற்றத்தினை ஏற்று கொள்ள மாட்டார்கள் அது மட்டுமல்லாமல் உனது பழைய நிலையை சொல்லி கிண்டல் அடிப்பார்கள்" என்று எனது நண்பர் கொரியர் கண்ணன் சொல்வார். மாற்றம் வரும் பொழுது வாழ்வது குறித்து அவரது கருத்து. இதில் நான் அவ்வளவாக உடன் படுவது இல்லை. காரணம் எனது நண்பர் சரவணன். இன்று என்னை விட பலப்பல மடங்கு உயரத்தில் இருக்கிறான். அவனது வளர்ச்சி எனக்கு எப்பொழுதும் சந்தோசத்தை தான் கொடுத்து உள்ளது. அவனது புற வாழ்வில் நடந்த எந்த மாற்றங்களும் எங்களது நட்பை பாதிக்காத அளவில் தான் உள்ளது.

பொதுவாக நம்மை சுற்றி  உள்ளவர்களுக்கு நல்ல மாற்றங்கள் வருகிறது என்றால், அவர்கள் நம்மை விட மிக அதிகமாக உழைத்து கொண்டு இருக்கிறார்கள் அதனால்தான் மாற்றம்   வருகிறது என்பதை நம்மால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதனால் தான் பழசை மறந்து விட்டார் என்று சொல்லி கொண்டு அலைகிறோம்.

பத்து வருடங்களுக்கு முன்பு நாம் எப்படி இருந்தோமோ அப்படியேவா இருக்கிறோம். நம் உடையில் உணவு பழக்கத்தில் - வாரம் ஒரு நாள் Pizzavum, Noodles ம் சாப்பிடுவதில் என்று எல்லாவற்றிலும் நம்மிடம் மாற்றங்கள்.ஆனால் இதையே அடுத்தவர் அனுபவித்தால் நமக்கு தாங்குவதில்லை.

 நான் முன்பு வேலை பார்த்த நிறுவனத்தின் MD உடன் 1995ல் கொடைக்கானலில் ஒரு Engineers Meet க்கு போய்  விட்டு சென்னை செல்ல திருச்சியில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்ப்ரஸில் டிக்கெட் முன் பதிவு செய்து இருந்தோம். அதுவும் sleeper class ல் தான். நாங்கள் திருச்சிக்கு காலை 10 மணி அளவில் வந்து விட்டோம். ஹோட்டலில் அறை எதுவும் போடவில்லை. மாறாக எங்கள் வீட்டில் தான் தங்கினார். அதே MD க்கு சுமார் இரண்டு வருடம் கழித்து ஒரு முறை சென்னையில் இருந்து மதுரை செல்லும் வழியில் வெறும் மூன்று மணிநேரம் ஓய்வு எடுக்க ஹோட்டல் ராயல் சதர்னில்  ஒரு SUIT ROOM போட்டோம்.

 எனது நண்பர் திரு சதீஷ் அப்பொழுது என்னிடம் , " ஒரு மூணு  மணி நேரத்திற்காக ரெண்டாயிரம் செலவு செய்து ரூம் போட வேண்டுமா இதே ரெண்டு வருசத்துக்கு முன்னே உங்கள் வீட்லே தங்கினது  எல்லாம்   மறந்து போயிட்டார் பாருங்க" என்றார்.

"ரொம்ப சரிதான் சதீஷ் அன்னைக்கு நிறுவனம் இருந்த நிலைமைக்கு ரூம் போடுவது அனாவசிய செலவு. இன்னைக்கு நிறுவனம் இருக்கிற நிலைமைக்கு அவரால செலவு பண்ண முடியும் - அதனாலே செலவு செய்கிறார். இதே வேற வழியில யோசிச்சி பாருங்க அதே ரெண்டு வருஷம் முன்னாடி நான் எந்த பஸ் கிடைச்சதோ அதில் ஏறி போனேன் இப்போ ரிசர்வ் செய்த AC லே போறோம். அப்போ நாம பழசை நினைச்சி இருந்தால் அவர் நினைக்கவில்லை என்று கவலை படலாம்" என்று சொன்னேன்.

அடுத்தவர்களுக்கு வரும் மாற்றத்தினை நாம் ஏற்று கொண்டால் தான் நாம் நிம்மதியாக வாழ முடியும். இதனை ஏற்று கொள்ளாவிட்டால் நாம் தான் வீழ்ச்சி அடைய வேண்டி வரும்.
 
அதே போல் மாற்றங்கள் வரும் பொழுது அதனை ஏற்று கொள்ளும் தைரியம் உள்ளவர்களே வெற்றி பெற முடியும். காக்காசு ஆனாலும் அரசாங்க காசு என்று நினைக்காமல் வேலையை விட்டுவிட்டு மாற்றத்தை தேடியதால் தான் இன்று ஒரு கண்டக்டர் சூப்பர் ஸ்டார் ஆகி உள்ளார். ஒரு சாதாரண குமாஸ்தாவாக இன்று பணி ஒய்வு பெற்று பென்ஷன் வாங்க வேண்டியவர் இயக்குனர் சிகரம் என்று புகழப்படுகிறார். அதனால் மாற்றம் யாருக்கு வந்தாலும் ஏற்று கொண்டு ஏற்றம் பெற வேண்டும்.



06 February 2013

கடல்

கடல் 


நடிகர்கள்: அர்ஜுன், அரவிந்த்சாமி, கெளதம் கார்த்திக், துளசி, பொன்வண்ணன்
கதை: ஜெயமோகன் ??????
ஒளிப்பதிவு: ராஜீவ் மேனன்
இசை: A .R . ரகுமான்
இயக்கம்: மணிரத்னம்

பார்த்தது: செந்தில் - கோவை 


ராவணன் எடுத்து நம்மை துன்ப  கடலில் தள்ளியதால் அடுத்து கடல் என்று மணிரத்னம்  படம் எடுத்து விட்டார் போலும். கதையின் சம்பவங்கள் மிகவும் மெதுவாக நகர்கிறது என்ற ஒரு விசயத்தை எடுத்து விட்டால் மணியின் ராவணனுக்கு இது தேவலாம். ஆனால் பழைய மணிரத்னம் படங்களை இன்று பார்க்கும் பொழுது கூட மனதில் ஒரு மெல்லிய நெகிழ்ச்சி வரும் அது கடலில் இல்லை. சமீப கால மணியின் படங்கள் எதிலும் இல்லை.

ராஜீவ் மேனனின் கேமரா நாம் ஒரு மீனவர் கிராமத்தில் வாழ்வது போன்றே உணர்வை தருகிறது. A .R . ரகுமான் வழக்கம் போல் மணிரத்னதிற்காக வெகு சிறப்பாக பாடல்களை அமைத்து கொடுத்து உள்ளார். ஆனால் மிக அருமையான "நெஞ்சுக்குள்ளே " பாடல் படத்தில் எடுபடவே இல்லை.

சிங்கம் புலி யாரையும் சிரிக்க வைக்கவும் இல்லை அவர் சிரிக்கவும் இல்லை.
அர்ஜுன் பல தீவிரவாதிகளை, கடத்தல்காரர்களை பிடித்தவர் இதில் இத்தனை படத்தில் செய்த நல்லது எல்லாவற்றுக்கும் சேர்த்து கெட்டது மட்டுமே செய்கிறார். ஆனால் ஏனோ மனதில் ஒட்டவே இல்லை.

அரவிந்த்சாமி - The Charm of the yester year - அப்படியே இருக்கிறார். தமிழ் திரைஉலகம் இவரை சரியாக பயன் படுத்தி கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

கெளதம் - முத்துராமன் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை. ஒரு வகையில் இந்த படம் SUPER HIT ஆகாமல் போனது கூட நல்லது தான். கார்த்திக்கின் முதல் படம் வெள்ளி விழா கொண்டாட போய்தான் அவரை பிறகு பிடிக்கவே முடியவில்லை. மிக இயல்பாக நடித்து இருக்கிறார். துளசியும் அந்த கதாபாத்திரம் உணர்ந்து செய்து இருக்கிறார். கொஞ்சம் ஏமாந்தால் தமிழ் சினிமாவின் "லூசு பெண் " ஆகி இருக்க கூடியது.

 தவறு செய்து  விட்டேன் என்று கெளதம் சொல்லும் பொழுது மிக இயல்பாக வந்து கையை தடவி விட்டுட்டு இனிமே செய்யாதே என்று சொல்லி விட்டு போகும் கட்டத்தில் மிக அருமையாக செய்து இருக்கிறார். படம் முழுவதும் வெள்ளை உடையில் வந்து தாமசை (கெளதம்) காக்க வந்த தேவதை என்று காட்டுகிறார்.

எல்லாம் இருந்தாலும் ஒரு அழுத்தம் இல்லை.

க dull

Followers