02 January 2012

நினைவுகள் -4

அப்பாவும் நானும் -2

இது நடந்தது 1986 ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி அன்று. அப்பாவுக்கு எங்கள் சின்ன வயதில் இருந்து ஒரு பழக்கம் உண்டு. முடிந்த அளவு இரவு உணவை எங்களுடன் பேசி கொண்டே சாப்பிட விரும்புவார்.

அவர் அதிகமாக வெளியூர் பயணங்களில் இருந்ததால் எங்களை miss செய்வது போன்று அவருக்கு ஒரு எண்ணம் இருக்கலாம். இதனை அவரது கடைசி காலங்களில் என்னால் மிகவும் உணர முடிந்தது. அவர் பொதுவாகவே பயணங்களை விரும்புவார். ஆனால் கடைசி நாலைந்து வருடங்களில் பார்த்தால் இரவு வீட்டுக்கு வருவது போல் இருந்தாலே வெளியில் கிளம்பினார். மேலும் வீட்டில் இருக்கும் நேரத்திலும் பேரன்களிடமே இருக்க விரும்பினார்.

என் பிள்ளைகளின் இளமை காலத்தை நான் நிறைய miss பண்ணிட்டேன். அது போல் என் பேரபிள்ளைகளின் இளமை காலத்தை இழக்க விரும்பவில்லை என்று சொல்வார்.

இப்பொழுது சொன்னதை அன்று சொல்லாமல் நடைமுறை படுத்த பார்த்து உள்ளார். சில நாட்களில் அவர் வர நேரமாகி நாங்கள் சாப்பிட்டு விட்டாலும், எங்களை பக்கத்தில் உட்கார வைத்து கொண்டுதான் சாப்பிடுவார். மேலும் அன்றைக்கு செய்யபட்ட பலகாரங்களோ அல்லது எங்களுக்கு பிடித்த காய் வகைகளோ இருந்தால் எங்களுக்கும் ஒரு வாய் ஊட்டி விட்டுதான் சாப்பிடுவார்.

ஒரு முறை எங்கள் ஆத்தா( அப்பாவின் அம்மா) வீட்டிற்கு வந்த பொழுது இதை பார்த்து விட்டு, "ஏன் உன் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு தர மாட்டான்னு நினைச்சு நீ ஊட்டி விடுறியா" என்று கேட்டார்.

"எந்த அம்மா பிள்ளைக்கு கொடுக்காம புருசனுக்கு கொடுக்க போறா, அது அல்ல பிரச்சனை, என் பிள்ளைக்கு நான் சாப்பிடும் போது நான் கொடுக்கணும் அது தான் முக்கியம்" என்று சொன்னார்.

எனக்கு திருமணம் நடக்கும் வரையில் எனக்கும் என் தம்பிக்கும் கிடைத்தது, அதன் பிறகு எங்களுக்கு கிடைக்கவில்லை. என் பையன் பிறந்த பிறகு அவனுக்கு கிடைத்தது. ஒரு வேளை மனைவி என்று ஒருவர் வந்த பிறகு நமக்கு உரிமை குறைச்சல் என்று ஒதுங்கி விட்டாரோ என்று தெரியவில்லை.

சித்ரா பௌர்ணமி சம்பவத்தில் ஆரம்பித்து அதை பற்றி எதுவும் எழுதாமல் ஏதோ எழுதி கொண்டு போகிறேன். பல கிளைகளா பிரிந்து செல்லும் பாதையை போல் நினைவுகளும் கிளை பிரிந்து போய் விடுகிறது.

அந்த சித்ரா பௌர்ணமி அன்று நாங்கள் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசி கொண்டே உணவு சாப்பிட்டோம். புளி சாதம், தேங்காய் சாதம், என்று அம்மா விதவிதமாக செய்து வைத்து இருக்க எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டோம். அப்பாவுக்கு பொதுவா கலந்த சாதம் பிடிக்காது என்றாலும் எங்கள் பிரியத்திற்கு கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டு அவரது தினப்படி அசைவ சாப்பாட்டிற்கு மாறி விடுவார். அன்றும் அது போல் தான் ஆனது.

நான் கல்லூரி முடித்து, தேர்வு முடிவுகள் வர காத்திருந்த நேரம். என்னிடம் என் எதிர் காலம் குறித்து கேட்டார்.

"நீ என்ன செய்ய போறே, மேற்கொண்டு படிக்க போறியா, இல்லை வேளைக்கு எதுவும் போக போறியா?

இப்போ நம்ம குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் நான் மேற்கொண்டு படிக்க போனால் + 2 முடித்து விட்டு அடுத்த வருடம் சங்கர் (தம்பி) வந்துடுவான். அப்பறம் நமக்கு ரொம்ப கஷ்டம் ஆகி விடும். அதற்கு பதில் நான் வேலைக்கு போய்ட்டு part time லே படிச்சுக்கிறேன். அது மட்டுமில்லாமே எனக்கு கடைசி வரையில் வேலை பார்க்க இஷ்டம் கிடையாது. கொஞ்ச நாள் கழித்து நான் தொழில் செய்யலாம் என்று நினைத்து உள்ளேன்"

சரிப்பா, உன் விருப்பம், இனிமேல் எனக்கு உன் பொருத்து ஒரு கடமை இருக்குது. உனக்கு கல்யாணம் பண்ணனும். நீ எதாவது பொண்ணு கின்னு பார்த்து வைத்து இருக்கிறாயா?

என்னப்பா, இப்படி எல்லாம் கேக்கறிங்க? அப்படி எதுவும் கிடையாது என்று நான் பதில் சொன்னேன்.

இப்போ இல்லாமே இருக்கலாம் எதிர் காலத்தில் வந்தால் எனக்கு சொல்லு. நீ பாட்டுக்கு இழுத்துகிட்டு ஓடி நாங்கள் தேடி தவிப்பது போல் வைத்து விடாதே என்று சிரித்து கொண்டே சொன்னார்.

"நீ இனிமே ஒரு புது வாழ்கையை நோக்கி போக போறே, எங்கே வேலைக்கு சேர போறியோ அந்த நிறுவனத்திற்கு விசுவாசமாய் இரு, இந்த சம்பளத்திற்கு இவ்வளவு வேலை செய்தால் போதும் என்று எப்போதும் நினைக்காதே. அப்படி ஒரு நினைப்பு வந்தால் அன்னைக்கே அந்த வேலையில் இருந்து வெளியில் வந்து விடு.

உனக்கு கீழே வேலை பார்பவர்களை உனக்கு மேலே உள்ளவன் உன்னை எப்படி நடத்தணும் என்று நினைக்கிறாயோ அப்படி நடத்து என்று சொன்னார்.

என் வாழ்கையில் அதன் பிறகு அவர் இறக்கும் வரையில் என் தொழில் சம்பந்தமாக எந்த ஆலோசனையும் சொன்னதே கிடையாது. யாரவது கேட்டாலும் எனக்கு எதுவும் தெரியாது அவன் கிட்டே கேட்டுகோங்க என்று சொல்லி விடுவார்.

தொழில் நஷ்டம் வந்து நான் தடுமாறிய போதாகட்டும், 38 வயதில் factory போட போகிறேன் என்று குதித்த போதும். அவனுக்கு தெரியும். அவன் சாதிப்பான் என்றே எல்லோரிடமும் சொல்வார். என்னிடம் மட்டும் சொன்னதே இல்லை.

அவர் வருடம் தோறும் என் நிறுவனத்தில் விரும்பி கேட்டது புது வருடத்திற்கு காலண்டர்கள் மட்டுமே. இந்த வருடம் உள்ளது காலண்டர்கள் அவர்தான் இல்லை.

Followers