இன்று காலையில் திரு பிரேம் உடன் ISO audit க்காக எங்கள் தொழிற்சாலைக்கு செல்லும் பொழுது அவர் ஏன் நான் நீண்ட நாட்களாக எதுவும் எழுதவில்லை என்று கேட்டார்.அப்பொழுது தான் யோசித்து பார்த்தால் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு எழுதியது. அதற்கு பிறகு எதுவுமே எழுதவில்லை. எழுதாமல் போனதற்கும் குறிப்பிடத்தக்க காரணம் எதுவும் இல்லை.
எனது தோழி எழில்விழியிடம் மயானத்தில் ஏற்பட்ட ஞான விழிப்பு பற்றி எழுதுவதாக சொல்லி இருந்தேன். ஆனால் அது குறித்து எழுத வேண்டிய மன அமைதி எனக்கு எனது அலுவலில் உள்ள வேலை பளுவின் காரணமாக கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனை எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டே எதுவும் எழுதாமல் விட்டு விட்டேன் என்று தான் தோன்றுகிறது. வாலி ஒரு பாடலில் எழுதியது போல "ஏக்கத்தில் பாதி தூக்கத்தில் பாதி போனது போக எது மீதி" என்பது போல் எதையோ நினைத்து கொண்டே பல விஷயங்களை செய்யாமல் விட்டு விடுகிறோம்.
நான் எதுவும் எழுதுவதால் காவிரியில் தண்ணீர் வந்து விட போவதும் இல்லை. தமிழகத்தில் மின்வெட்டு தீரவும் போவதும் இல்லை. பின்னே எழுதி என்ன செய்ய என்ற அலுப்பாகவும் இருக்கலாம். இப்படி எல்லாம் எழுதினால் தான் ஒரு பெரிய எழுத்தாளருக்கு உள்ள "கெத்து" இருக்கும் என்று எனது நண்பர் ஒருவர் சொன்னார். சொல்லிவிட்டு நட்பை பற்றி எழுதுங்கள் என்றும் ஒரு இலவச ஆலோசனை கொடுத்தார். நட்பு பற்றி எழுத வேண்டும் என்றால் துரோகத்தை பற்றியும் எழுத வேண்டும் என்று ஒரு extra bit வேறு போட்டார். சரி அவரது ஆலோசனையை செயல் படுத்துவோம் என்று எழுத ஆரம்பித்தேன்.
என் எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன் என் நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று என்று ரஜினி ஜக்குபாய் விளம்பரத்தில் சொல்லி இருந்தார். அப்பொழுது சரிவர புரியாத இந்த பஞ்ச் வசனம் அவரது பிறந்த நாள் பேச்சில் தெளிவானது. என்னை பொறுத்த வரையில் எதிரிகள் நமது முன்னேற்றத்துக்கு உதவுவார்கள் ஆனால் துரோகிகளோ நாம் மாபெரும் வெற்றி பெற தேவையான வேகத்தினை நமக்கு கொடுப்பார்கள்.
கர்ணன் துரியோதனன் மீது வைத்தது ஆழமான
எதிர்பார்ப்பு இல்லாத நட்பு. ஆனால் துரியோதனின் நட்பில் ஒரு எதிர்பார்ப்பு
இருந்தது. அவனது எதிரிகளை வெல்ல கூடிய திறமை கர்ணனிடம் இருந்தது. அந்த
திறமை துரியோதனனுக்கு தேவையாக இருந்தது.
கர்ணனை அரசனாக்கினான் அதனால்தான் கர்ணன்
நட்பு பாராட்டினான் என்று சொல்வோரும் உண்டு. அப்படி அரச பதவிக்கு ஆசை பட்டு
இருந்தால் குந்தி கூப்பிட்டவுடன் போய் இருப்பான். மாறாக தோல்வி உறுதி என்று தெரிந்தும் கவுரவர்கள் பக்கம் நின்று இருக்க மாட்டான். தேவையின் காரணமாக ஏற்படும் நட்பு கூட துரோகம்தான்.
எதிர்பார்ப்பு இல்லாத நட்பு என்று எதாவது உள்ளதா என்று யோசித்து பார்த்தால் அப்படி எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. வெங்காயத்தை உரித்து பார்ப்பது போல் பார்த்தால் எல்லா நட்பும் ஒன்றும் இல்லை என்பது போல தெரிகிறது.
நட்பு என்று ஒன்று உருவாகும் பொழுது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கும் வரை எந்தவிதமான பிரச்னையும் இல்லை. எதிர்பார்ப்பு வரும்பொழுது அங்கு ஏமாற்றம் வரும் வாய்ப்பு உள்ளது. ஏமாற்றம், ஆத்திரமாகவும், வடிகால் கிடைக்காத ஆத்திரம் துரோகமாகவும் மாறுகிறது. யோசித்து பார்த்தால் துரோகம் கூட நட்பின் ஒரு நிறைவேறாத கட்டமோ என்று தோன்றுகிறது. எல்லா நட்பிலும் ஏதாவது ஒரு எதிர்பார்ப்பும், புதைக்கப்பட்ட கண்ணி வெடி போல் ஒரு துரோகமும் ஒளிந்தே இருக்கிறது.